Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு தகப்பன் எத்தனை பிள்ளையை நாட்டுக்காக பலி கொடுப்பான்?

''என்னிடம் இன்னும் பலம் இருக்கிறது. கையில் துப்பாக்கி கொடுத்தால் எல்லைக்குச் சென்று எனது மகனின் சாவுக்கு பழி வாங்குவேன்'' என கொதிக்கும் முதியவர் ஜக்நாராயண் சிங்கிற்கு கண் பார்வை கிடையாது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்,  கண்பார்வை பறிபோனது. தள்ளாடும் வயதில் இவரின் ஒரே நம்பிக்கை ,வாழ்க்கை ,வாழ்வாதாரம் எல்லாமே மகன் ஹவில்தார் அசோக்குமார் சிங்தான். உரி முகாம் மீதானத் தாக்குதலில் அசோக்குமார் பலியாகி விட இரண்டாவது முறையாக பார்வை இழந்திருக்கிறார் ஜக்நாரயண்சிங்.

ஏற்கனவே ஜக்நாராயண் சிங் தனது  மூத்த மகனையும் நாட்டுக்காக பறிகொடுத்திருக்கிறார். இவரது முதல்  மகன் கமாந்த் சிங் ராணுவத்தில் சிப்பாயாக பணியாற்றிய போது, பிகானீரில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி பலியானார். கமாந்த் சிங் இறக்கும் போது வயது 23 மட்டுமே. வாழ வேண்டிய வயதில் மூத்த மகனை பறிகொடுத்த ஜக்நாராயண், இரண்டாவது மகனையும் ராணுவத்தில்தான் சேர்த்தார். ஆனால், விதி வலியது என்பதை விடக் கொடியது. இப்போது அசோக் குமாரையும் பலி கொடுத்து விட்டு நிர்கதியாகி நிற்கிறார் இந்த 78 வயது முதியவர். பலியான அசோக்குமாரின் மகன் விகாஷ் சிங்கும் சமீபத்தில் ராணுவத்தில் சேர்ந்திருக்கிறார். வாழையடி வாழையாக குடும்பமே நாட்டுக்காக சேவையாற்றுகிறது. ஆனால் ஜக்நாராயண் போன்றவர்களின் வாழ்க்கைத்தான் நாதியற்று கிடக்கிறது.

நாசிக்கைச் சேர்ந்த லேன்ஸ் நாயக் சந்தீப் சோம்நாத்துக்கு அடுத்த மாதம் திருமணம். அவரது குடும்பத்தினர் கல்யாண வேலைகளில் பிசியாக இருந்தனர். பத்திரிகைக் கூட அடித்தாகி விட்டது. இப்போது உரி தாக்குதலில் சந்தீப் பலியாகி விட குடும்பமே துடிதுடித்துக் கிடக்கிறது. மகனின் உயிரற்ற உடலைப் பார்த்து பெற்றோர்  அலறி துடித்தது இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்திருந்த ராணுவ வீரர்களின் கண்களில் நீர் திரளச் செய்தது. பார்மசி படித்திருந்தாலும் ராணுவத்தில் விரும்பி சேர்ந்தவர் சந்தீப். இவருக்கு இரண்டு சகோதரிகள். சகோதரிகளுக்குத் திருமணமாகி விட்டது. அடுத்து சந்தீப்புக்குதான் திருமணம். மகனின், சகோதரனின் திருமணத்தை வெகு விமர்சையாக செய்ய வேண்டும் என காத்திருந்த உயிர்கள், இப்போது உயிர் இருந்தும் சலனமில்லாமல் இருக்கின்றன. ''திருமணத்துக்கு வருவான் என நினைத்திருந்தேன். இப்படி சடலமாக வந்திருக்கிறானே '' என அவரது தந்தை தோக் கதறிய போது ஆறுதல் சொல்ல ஊராரிடம் வார்த்தைகள் இல்லை.

கயாவைச் சேர்ந்த நாயக் சுனில்குமார் வித்யார்த்திக்கு 4 குழந்தைகள். ஆர்த்தி, அன்சு, அன்ஷிகா என மூன்று மகள்களும் பள்ளியில் படிக்கின்றனர். மகள்களை படித்து பெரிய ஆளாக்கி விட வேண்டுமென்பது ஒரு சராசரித் தந்தையின் கனவு. இப்போது வித்யார்த்தி தனது கனவை நிறைவேற்ற உயிருடன் இல்லை.  உரி தாக்குதலில் பலியாகி விட்டார். சொந்த கிராமமான பொக்னாரி கிராமத்துக்கு அவரது உடல், எடுத்து வரப்பட்ட போது, அந்த குழந்தைகள் அழுத காட்சியை விவரிக்கவே  முடியாது. வித்யார்த்திக்கு ஒன்றரை வயதில் கடைசி மகனும் உண்டு. தந்தையின் உயிரற்ற உடலை பார்த்து புரிந்து கொள்ள முடியாமல் சவப் பெட்டியை அந்த குழந்தை தடவி தடவி பார்த்த போது சுற்றியிருந்தவர்களின் கண்கள் குளமாகியிருந்தன. வித்யார்த்தியின் உடல் அடக்கம் முடிந்த இரு நாட்களுக்கு பிறகு, அவரது மகள்களுக்கு பள்ளித்தேர்வு. தந்தையின் விருப்பமே நாம் நன்றாக படித்து பெரிய ஆளாக வேண்டுமென்பதை புரிந்து வைத்திருந்த குழந்தைகள் சோகத்தை மறந்து தேர்வு எழுதச் சென்றனர். அப்போது பள்ளி வளாகமே சோகத்தில் மூழ்கியது.

''எனது கணவர் கொல்லப்படுவதற்கு முந்தைய நாள்தான் என்னிடம் போனில் பேசினார். என்னைப் பற்றிக் கவலைப்படாதே. நீ சந்தோஷமாக இரு. குழந்தையை நல்லபடியாக பார்த்துக் கொள் என்றார். இப்போது அவரே உயிருடன் இல்லை. எதிரிகளை கொல்ல நான் கூட துப்பாக்கி எடுக்கத் தயாராக இருக்கிறேன். தைரியம் இருந்தால் தீவிரவாதிகள் என் முன்னால் வரட்டும் அவர்களை சுட்டுக் கொல்வேன் '' என்கிறார் ஆவேசம் அடங்காத பீனா டிக்கா. இவர்  உரி தாக்குதலில் பலியான நேமென் குஜ்ஜுர் என்ற சிப்பாயின் மனைவி. கடந்த 2013 நேமென் பீனாவைத் திருமணம் செய்தார். அபினவ் என்ற 2 வயது மகன் இருக்கிறான். இப்போது 25 வயது பீனா தனிமரம்.

உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சிப்பாய் கணேஷ் சங்கருக்கு ஒரே தங்கை. அடுத்த மாதம் தங்கையின் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார். மாப்பிள்ளையும் பார்த்து பேசி ஒழுங்கு செய்தாகி விட்டது. திருமணத்தை எதிர்பார்த்து காத்திருந்த அவரது தங்கைக்கு சகோதரர் உயிரிழந்தச் செய்தித்தான் கிடைத்திருக்கிறது கணேஷ் சங்கருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளன. குடும்பமே இவரது வருமானத்தை நம்பித்தான் இருந்தது. கணேஷ் சங்கரின் உயிரிழப்பால் அவரது தங்கையின் திருமணமும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஜம்முவைச் சேர்ந்த 46 வயது சுபைதார் கர்னாயில் சிங்கும் உரித் தாக்குதலில் பலியானவர்களில் ஒருவர். தனது பதினெட்டு வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்து விட்டவர். இவரது 19 வயது மகன் அன்மோயில் சைனி, தற்போது பி.ஏ படித்து வருகிறார். தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்த போது, ஒரு சொட்டு தண்ணீர் கூட சைனியின் கண்களில் இருந்து கசியவில்லை. ''எனது தந்தை நாட்டுக்காக உயிர்துறந்துள்ளார். நானும் ராணுவத்தில் சேர வேண்டுமென்பதுதான் அவரது கனவு. படிப்பை முடித்து விட்டு ராணுவத்தில் சேர்வேன்'' என்கிறார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிப்பாய் பிஸ்வாஜித் கோராய். இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட மிக இளவயது வீரர். 22 வயது இளைஞன் நோயாலோ அல்லது விபத்தில் சிக்கியோ உயிரிழந்தால், அவரது குடும்பத்தினர் எத்தனை வேதனைக்குள்ளாவார்கள். அத்தகைய ஒரு வேதனையில்தான் பிஸ்வாஜித் குடும்பம் இருக்கிறது.'' மத்திய அரசு கொடுக்கும் இழப்பீடு எனது சகோதரன் உயிரைத் திருப்பித் தருமா?. இந்தத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கவில்லை என்றால் எனது குடும்பத்தில் இருந்து இன்னொரு ராணுவ வீரன் உருவாகி  வர மாட்டான் '' மத்திய அரசைப் பார்த்து பிஸ்வாஜித்தின் 20 வயது சகோதரி ஆவேசக் கேள்வி எழுப்புகிறதார்.

காஷ்மீரில் உரி தாக்குதலில் மொத்தம் பதினெட்டு இந்திய உயிர்கள் பலியாகியுள்ளன. மகனை, தந்தையை, கணவரை இழந்து ஒவ்வொரு குடும்பமும் வேதனையில் மூழ்கியுள்ளது. தாக்குதல் நடந்து நான்கு நாட்கள் ஆகியுள்ளது, பாகிஸ்தான் தூதரை அழைத்து மத்திய அரசு கண்டித்ததோடு சரி.  'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு இந்தியர் பலியானால் இரு எதிரிகள் தலை வீழும்' என்ற இஸ்ரேலிய பாணியிலான சபதம் விடுவதால் மட்டும் என்னவாகி விடப் போகிறது. முதியவர் ஜக்நாராயண் சிங் நிலையை நினைத்துப் பாருங்கள். ஒரு தகப்பன் எத்தனை பிள்ளையைத்தான் நாட்டுக்காக பலி கொடுப்பான்?

-எம்.குமரேசன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement