தாத்ரி சம்பவத்தின் ஓராண்டு - இந்திய அரசியல் எப்படி இருக்கிறது? | Dadri lynching case. A year has passed but

வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (29/09/2016)

கடைசி தொடர்பு:11:25 (29/09/2016)

தாத்ரி சம்பவத்தின் ஓராண்டு - இந்திய அரசியல் எப்படி இருக்கிறது?

ரு வருடத்துக்கு முன்பு சரியாக நேற்று உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் பிஸாடா கிராமம், மற்ற எல்லாப் பகுதியையும்போல அமைதியாகத்தான் இருந்தது. அவ்வப்போது மின்சாரம் போய் வருவதுதான் அவர்களது பெரும் கவலை. அதுவும்கூட அவர்களுக்குப் பழகிப் போயிருந்தது. ஆனால், அவர்களை நிரந்தரமாகக் கவலைகொள்ளச் செய்யும் வகையிலான வேறொரு சம்பவமும் அங்கு நடந்தேறக் காத்திருந்தது. ‘மாட்டுக்கறியை சாப்பிட்டார்’ எனக் காரணம் காட்டி, முகம்மது அக்லாக் மற்றும் அவரது மகன் தானிஷ் மீது 18 பேர் கொண்ட கும்பல், வீடு புகுந்து தாக்குதல் நடத்தின. அதில், அக்லாக் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது மகன் தானிஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலை பகுதியில் இரண்டு அறுவைச்சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார். இந்தியாவில் சகிப்புத்தன்மை மற்றும் உணவு அரசியல் தொடர்பாக அதிகம் பேசப்பட்டது இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான்.

ஒரு வருடத்தில் அந்தச் சம்பவம் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன?
பிஸாடா பகுதியைச் சேர்ந்த அந்த 18 பேரும் கைதுசெய்யப்பட்டார்கள். 177 பக்க குற்றக் குறிப்புகளும், அக்லாக்கின் மனைவி அளித்த சாட்சியின் பேரில் 4 பக்க குற்ற அறிக்கையும் பதிவு செய்யப்பட்டன. இடைப்பட்ட காலத்தில் இதன்மீது பல முறை விசாரணை நடந்திருக்கிறது. ஆனால். 18 பேரில் ஒருவர் மீதுகூட இன்றுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. மறுபக்கம், குற்றவாளிகளுடன் தொடர்புடையவர்கள் அக்லாக்கின் குடும்பம் மாட்டைக் கொன்றது என வழக்குப்பதிவு செய்தனர். அதன் மீதான விசாரணைக்காக அக்லாக்கின் வீட்டிலிருந்து கறித்துண்டுகளும் கைப்பற்றப்பட்டன. அதனை சோதனை செய்த நொய்டா கால்நடை மருத்துவமனை அது வெறும் ஆட்டுக்கறி என அறிக்கை தந்தது. அதன்மீது, மதுராவில் செய்யப்பட்ட மீளாய்வில் அது மாட்டுக்கறி எனப்பட்டது. கறி நீர்த்துப்போனபின்னும் அதன்மீதான விசாரணை ஓயவில்லை. ஆனால், அக்லாக்கின் படுகொலை மீதான விசாரணை துரிதப்படுத்தப்படாமலே இருந்தது. இதற்கிடையே குற்றவாளிகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அதில், மூவர் மட்டும் சிறார்கள் என்பதால் அவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது. குற்றத்தை விசாரிக்கும் நீதிபதியும் இதற்கிடையே பலமுறை மாற்றப்பட்டிருக்கிறார்.

ஒடுக்குமுறை பற்றிய அரசியல் பெரிதும் விவாதிக்கப்பட்டது, இந்தச் சம்பவத்தைப் பின்னணியாக வைத்துதான். ரோஹித் வெமூலா மற்றும் கன்னையா சம்பவமும் இதனை வேராகக் கொண்டு நிகழ்ந்ததுதான். அதுவரை பெரும் ஊழல், கட்சிகளின் மீதான புகார்கள் என மட்டுமே பேசப்பட்டு வந்த இந்திய அரசியலில் தனிமனிதர்கள் குறிப்பாக சாமானியர்கள் பற்றி நீண்டகாலம் பேசப்பட்டது. ஒருவருடம் கழிந்த நிலையில், அரசின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது? இரு தரப்புகளின் கருத்து என்ன?

‘‘பிரச்னைகளுக்கான களங்களை உருவாக்கியிருக்கிறது!’’

எழுத்தாளர் மற்றும் தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரான மனுஷ்ய புத்திரன் பதிலளிக்கையில், “பசு என்னும் உயிர் அரசியல் அடையாளமாக்கப்பட்ட சம்பவம் அது. உயர்சாதி அரசியல் மற்றும் அதன் சகிப்புத்தன்மையற்ற போக்கு இசுலாமியர்கள் மீது திணிக்கப்பட்டது. மேலும், அதைத் தொடர்ந்து குஜராத்திலும் ஹைதராபாத்திலும் ஏற்பட்ட எழுச்சி, வகுப்புவாத அரசியலை அடையாளம் காண்பிக்கும் வகையில் அமைந்தது. பசுவுக்கான பாதுகாப்பையும், மக்களின் பாதுகாப்பின்மையையும் மதவாதக் கட்சிகள் வெளிப்படையாகத் தங்களின் செயல்களின் வழியாக முன்னிறுத்தினார்கள். ஓர் இயல்பான சமூகத்தின் மீது மதம் சார்ந்த வாழ்க்கை முறை மற்றும் மத அடிப்படைவாதம் அதிகம் திணிக்கப்பட்டது. இன்றுவரை பி.ஜே.பி., கோவை தொடங்கி பாக். எல்லைவரை பிரச்னைகளுக்கான களங்களை உருவாக்கி வந்திருக்கிறது. கர்நாடகம் ஆகட்டும்... கோவை ஆகட்டும். பிரச்னை ஏற்பட்ட அனைத்து இடங்களிலுமே பி.ஜே.பி-யினர் தேர்தலைச் சந்திக்க இருப்பதும் கவனிக்க வேண்டியது. எங்கெல்லாம் தேர்தல் வருகிறதோ, அங்கெல்லாம் பிரச்னைகளையும் அவர்கள் தொடர்ந்து உருவாக்கிவருகிறார்கள்” என்றார்.

‘‘வன்முறைத் தாக்குதல்கள் நடக்கின்றன!’’

பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, “ஒரு வருடத்துக்கு முன் உ.பி-யில் நிகழ்ந்ததைப் பற்றி நான் எதற்குப் பேச வேண்டும்? கோவையில் சசிகுமாரைக் கொன்றிருக்கிறார்கள். அதற்குமுன், திண்டுக்கல்லில் ஒருவர். இப்படியாக இந்துக்கள் அமைப்பைச் சேர்ந்த பலர்மீது தமிழகத்தில் வன்முறைத் தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. அது தொடர்பாக தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மட்டுமல்ல, ஆடிட்டர் ரமேஷ் வழக்கும் அரவிந்த் ரெட்டியின் வழக்கும் இப்படித்தான் மறைக்கப்பட்டுவிட்டன. அதில், ஏதேனும் இன்றுவரை தீர்ப்பு கிடைத்திருக்கிறதா? அதைப்பற்றி மட்டும் ஏன் யாரும் பேசுவதில்லை? முழுக்க முழுக்க இந்துக்களுக்கு எதிராக நடந்துவரும் செயல்பாடுகளை அரசு, சிறிதும் கண்டுகொள்ளாமல் பாராமுகம் காட்டி வருகிறது” எனக் காட்டமாக பதிலளித்தார்.

- ஐஷ்வர்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்