மீண்டும் ராணுவப் புரட்சியை எதிர்நோக்குகிறதா பாகிஸ்தான்..!

1999 அக்டோபர் 12. பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் அரசைக் கவிழ்த்து விட்டு, அப்போதைய ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தானின் தலைமை நிர்வாகியாக பிரகடனப்படுத்திக் கொண்டார். பின்னர் 2001 முதல் 2008-ம் ஆண்டுவரை  இரண்டு முறை பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்தார். தனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, பதவி பறிக்கப்படும் என்ற நிலை உருவானபோது, அதிபர் பதிவிலிருந்து விலகினார். இது பாகிஸ்தானின் நிகழ்ந்த ஒரு ராணுவப் புரட்சிதான்.

பதான்கோட் விமானப் படைத் தளம், உரி ராணுவ முகாம் தாக்குதல்களைத் தொடர்ந்து. உலக அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ராணுவத்தைக் கண்டிக்கும் தொனியில் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இது பாகிஸ்தான் ராணுவத்திற்கும், நவாஸ் ஷெரீப்பிற்கு இடையே மோதலை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளது.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை அழிக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு ராணுவம் ஆதரவு தெரிவிக்க வேண்டும்; பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளுக்கு ராணுவம் ஆதரவு தெரிவிக்க வேண்டாம்" என்று நவாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் நாளிதழ்கள் உறுதிப்படுத்தியுள்ளன.  ராணுவத்தை கண்டிக்கும் வகையிலான நவாஸ் ஷெரீப்பின் இந்த உத்தரவுக்கு ராணுவத்தின் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பயங்கரவாதிகளை ஆதரிக்கும் போக்கை கடைபிடிக்கவில்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ள போதிலும், நவாஸ் ஷெரீப்பின் இதுபோன்ற நடவடிக்கைகள் ராணுவத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள  நெருக்கடியைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஐ தலைவர் ரிஸ்வான் அக்தர், வெளியுறவுத்துறை செயலாளர் ஐஷாஸ் சவுத்ரி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நவாஸ் ஷெரீப் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டங்களில், பாகிஸ்தான் ராணுவத்திற்கு நவாஸ் உத்தரவிட்டதாகவும், பயங்கரவாதிகளை ஆதரிப்பதை ராணுவம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ன.

வளர்த்த கடா மார்பில் பாய்வதைப் போன்று, நவாஸ் ஷெரீப்பால் வளர்க்கப்பட்ட தீவிரவாதம். தற்போது அவரது அரசுக்கே நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் உருவெடுத்துள்ளது.பாகிஸ்தானின் நலன் கருதி. பயங்கரவாத சம்பவங்ளை ஆதரிக்காமல், ஆயுத உதவிகளை குறைத்துக் கொள்வதே அந்நாட்டிற்கு உகந்தது என்பதை நவாஸ் ஷெரீப் தாமதமாக உணர்ந்துள்ளார்.

ராணுவத்திற்கும் நவாஸ் ஷெரீப்பிற்கும் இடையேயான மோதல் மீண்டும் ஒரு ராணுவப் புரட்சிக்கும் வித்திட்டாலும் ஆச்சர்யமில்லை. அப்போதாவது. இந்தியாவிற்கு எதிரான எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு முடிவு ஏற்படும் என நம்புவோம்.

- சி.வெங்கட சேது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!