வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (12/10/2016)

கடைசி தொடர்பு:10:19 (13/10/2016)

லண்டனில் திரையிடப்பட்ட மைசூர் பெண்ணின் வாழ்க்கை!

லக அளவில், குழந்தைகள் திருமணம் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 50 சதவிகிதம் பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்துவைக்கப்படுகிறது. அந்த வரிசையில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த செல்வியும் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு 14 வயதிலேயே திருமணம் செய்துவைத்துவிடுகின்றனர். தன்னுடைய குழந்தைப் பருவம் முடிவதற்கு முன்பே இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிவிடுகிறார் செல்வி. அதற்குபின் செல்விக்கு நடந்தது பெரும் அவலம். கணவனின் கொடுமையைத் தாங்கமுடியாமல் வீட்டைவிட்டு ஓடிவந்து மைசூரில் உள்ள 'ஒடநாடி' என்ற பெண்கள் காப்பகத்தில் சேர்ந்தார். இங்குதான் செல்வி, வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டார். தற்போது மைசூரில் டாக்சி ஓட்டி தன் குழந்தைகளைக் காப்பாற்றி வரும் செல்வி, தென் இந்தியாவின் முதல் பெண் டாக்சி ஓட்டுநர்.

'' என் வாழ்வில் எல்லாமே என நான் நம்பிய கணவரே, என்னை பணத்துக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வற்புத்தினார். உலகமே இருண்டு விட்டதைப் போல தோன்றி, என்னுடைய வாழ்கை முடிந்துவிட்டது என்ற நிலைக்கு வந்துவிட்டேன். மனம் முழுக்க இருந்த தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டு, எப்படியாவது வாழ்ந்துகாட்டவேண்டும் என்று எண்ணி வீட்டைவிட்டு ஓடிவந்து மைசூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்ந்தேன். வெட்டியாக இருப்பதுபிடிக்காமல் டிரைவிங் கற்றுக்கொண்டு, டாக்சி டிரைவர் ஆனேன். என் வாழ்க்கை பயணம் இப்போது சரியான பாதையில் செல்கிறது" என்கிறார் செல்வி.

கனடாவைச் சேர்ந்த எலிசா பலோச்சி என்பவர், 2004-ம் ஆண்டு மேற்கொண்ட இந்தியப் பயணத்தின்போது யதேட்சையாக செல்வியைச் சந்திருக்கிறார். அப்போது செல்விக்கு 18 வயது. செல்வியின் அனுபவங்கள் குறித்து, 'டிரைவிங் வித் செல்வி' (Driving With Selvi) என்ற பெயரில் ஆவணப் படம் எடுத்து, சென்ற ஆண்டில் வெளியிட்டுள்ளார் எலிசா பலோச்சி. சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நேற்று (அக்டோபர் 11) லண்டனில் இந்த ஆவணப் படம் திரையிடப்பட்டது.

படத்தின் டிரைலரைக் காண:


'டிரைவிங் வித் செல்வி' படத்தைப் பார்த்த பிரிட்டனின் யூனிசெப் துணை நிர்வாக இயக்குனர் லில்லி கப்ரானி (Lily Caprani), ''செல்வியின் துணிச்சல் பெண்களுக்கு முன்மாதிரியாக உள்ளது" என்று பாராட்டைத் தெரிவித்துள்ளனர். அவரைத் தவிர மனித உரிமை ஆர்வலர்களும் இந்தப் படத்தை பல இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்றனர்.

வாழ்வது என முடிவெடுத்துவிட்டால் பாதைகள் பல உண்டு என வாழ்ந்துகாட்டும் செல்விக்கு சல்யூட்!

- என். மல்லிகார்ஜூனா
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்