'பொது சிவில் சட்டமா? அப்படின்னா?' - கேள்வியெழுப்பும் பெண்கள்! | Indian Women have less awarness on Uniform civil code

வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (18/10/2016)

கடைசி தொடர்பு:12:48 (18/10/2016)

'பொது சிவில் சட்டமா? அப்படின்னா?' - கேள்வியெழுப்பும் பெண்கள்!

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மக்களிடம் அரசு கருத்துக் கேட்டு வருகிறது. இதுகுறித்து பல்வேறு சிறுபான்மை நலக் குழுக்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. கிட்டத்தட்ட சுதந்திர இந்தியாவின் பிரதமராக நேரு நியமிக்கப்பட்டது தொடங்கியே விவாதத்துக்கு உள்ளான சட்டம். 1949-ல் நேருவின் அமைச்சரவை இருந்தபோது பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44-வது ஷரத்து பரிந்துரை செய்தது. அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கரும் இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதில் தன்முனைப்புடன் இருந்தார். பொது சிவில் அல்லது பொது உரிமையியல் சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட நாட்டில் வாழும் எந்த ஒரு மத இன சமய பண்பாட்டைத் தழுவிய தனி நபருக்கும் பொதுவிலான உரிமை மற்றும் தண்டனை முறை விதிக்கப்படும். ஆனால், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்கிற அடையாளமும், 15 கோடி இஸ்லாமிய மக்கள் வாழும் சிறுபான்மையினர் சமூகமும் கொண்டதாக இருக்கிறது. எனவே, பொது சிவில் சட்டம் என்பது தனிநபர் சார்ந்த மத ஒழுக்கங்களுக்கும் கட்டமைப்புகளுக்கும் எதிராக இருப்பதாக முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சிகள் பல காலங்களாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

எதிர்ப்பு ஏன்?

1985-ல் சாஹாபானு என்கிற 73 வயது பெண்ணை அவரது கணவர் முகமதுகான் என்பவர் 40 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டப்படி மூன்று முறை தலாக் கொடுத்து விவாகரத்து செய்தார். அதோடு மட்டுமில்லாமல், அந்தச் சட்டத்தின்படி பானுவுக்கான ஜீவனாம்சமும் நிராகரிக்கப்பட்டது. இத்தனைக்கும் பானுவின் கணவர் முகமதுகானும் வழக்கறிஞர்தான். இந்தத் தலாக்குக்கு எதிராக பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் தீர்ப்பு பானுவுக்குச் சாதகமாக அமைந்தது. அவருக்கும் அவர் பிள்ளைகளுக்கும் ஜீவனாம்சம் கிடைத்தது. இந்தத் தீர்ப்பு ஷரியத் சட்டத்தை ஊடுருவிப் பார்க்கும் விதமாக இருந்தது. பொது சிவில் சட்டம் ஷரியத்தைக் கேள்விக்குள்ளாக்குவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. இதுவரை தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தில் மட்டும்தான் பெண்களுக்குச் சொத்துக்களில் சம உரிமை என்கிற சட்டம், இந்துத் தனிநபர் சட்டத்தின்படி அமலில் உள்ளது. இதை, அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைபடுத்தவும், ஆண், பெண் பாகுபாட்டை ஒருவிதத்தில் குறைக்கவும் பொது சிவில் சட்டம் வழிவகை செய்கிறது.
இதோடு மட்டுமல்லாமல் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது சட்டப்படி விவாகரத்து செய்யாமல், இஸ்லாமிய மதத்துக்கு மாறி இரண்டாவது அல்லது மூன்றாவது திருமணம் செய்வதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தண்டனை கொண்டு வருவது, திருமணமான ஆண் - பெண் அல்லது திருமணமாகாதவர்கள் எந்தவித மதம் சார்ந்த சட்டத்தின் தலையீடும் இல்லாமல் குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்ளலாம் என்பது போன்ற விதிகளும் அந்தச் சட்டத்தில் அடங்கும். ஆனால், இந்தச் சட்டத்தின் பெரும்பான்மை அம்சங்கள் சிறுபான்மை மக்களைத் தாக்கும் வகையில் இருப்பதால், தொடர்ந்து எதிர்ப்புக் கிளர்ந்தெழுந்தபடி இருக்கிறது.

ஒவ்வொரு முறை மத்தியில் அரசாங்கம் மாறும்போதும் பேசப்படும் சிவில் சட்டம் இந்த முறை கொண்டு வரப்படுமா?

‘‘மத்தியில் பி.ஜே.பி ஆட்சியில் அமரும்போதெல்லாம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்தும், காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் 370-ஐ அகற்றுவது குறித்தும் தொடர்ந்து பேசப்படுகிறது. சென்ற முறை ஆட்சியிலும் இதனைச் செயல்படுத்த முயற்சி எடுத்தார்கள். 2014 - 2016 வரையிலான காலகட்டத்தில் மத்தியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா, ‘முஸ்லிம்கள் சிறுபான்மையினரே இல்லை’ என்றார். மத்திய அரசு, வருடாந்திர இஃப்தார் விருதுகளை ரத்து செய்தது. அந்த வரிசையில்தான் பொது சிவில் சட்டத்தை இவர்கள் அமல்படுத்த நினைப்பதும் இருக்கிறது. இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டம் பெண்களைப் பாதுகாக்கும் விதத்தில் இருப்பதில்லை என்பது இவர்களது வாதம். ஆனால், இஸ்லாமிய சட்டம் முழுமையாக, நம் நாட்டில் அமலில் இல்லை. பொது சிவில் சட்டத்தில் உரிமையியல் அடிப்படையில் இந்து, இஸ்லாமியர்கள் இருவருக்கும் பெரும்பாலும் ஒரே மாதிரியான உரிமைகோரல் நிலைப்பாடுதான் சொல்லப்பட்டிருக்கிறது. தண்டனைச் சட்டத்தைப் பொறுத்தவரையில், இஸ்லாமியர்களின் ஷரியத் முக்கியப் பிரச்னையாக இருப்பதால், அதனை நீக்க வேண்டும் என்கிற பார்வை தவறு. தலாக் முறை பற்றிய மாற்றுக் கருத்து அவர்கள் சமூகத்திலேயே இருக்கும்போது, அவர்களை ஒன்றுகூடிப் பேசவைத்து இதுதொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும். அரைகுறை மதவாதத்தைக் கடைப்பிடிக்கும் காங்கிரஸும் இதே தவற்றைத்தான் செய்ய முயன்றது. இப்படி ஒரு சட்டம் கொண்டு வருவது நிச்சயம் 15 கோடி இஸ்லாமியர்கள் மனதில் வேற்றுமை உணர்வை ஏற்படுத்தும்” என்கிறார் எழுத்தாளர் அ.மார்க்ஸ்.

பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறதா பொது சிவில் சட்டம்?

“எந்த ஒரு சட்டம் அமல்படுத்த இருக்கும் நிலையிலும் சட்ட கமிஷன் மக்களிடம் கருத்துக்கணிப்பு கேட்கும். மக்களின் ஒப்புதலுடன் இது நடத்தப்படுகிறது என்பதற்கான ஆதாரம். ஆனால், உயர்மட்ட அளவில் அமைச்சர்கள் மட்டுமே சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஒன்றுகூடி முடிவெடுப்பார்கள்.  பொது வாக்கெடுப்பு எடுக்கலாமே என்கிற கருத்து முன்வைக்கப்படும். ஆனால், இந்துக்கள் பெரும்பான்மை இருக்கும் நாட்டில் பொது வாக்கெடுப்பு அரசுக்குச் சாதகமாகத்தான் கிடைக்குமே தவிர, அது நியாயமான முறையில் இருக்காது. வேண்டுமென்றால், முஸ்லிம்களுக்கு மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தலாம். மேலும், இப்போது இருப்பதுபோல நேரு அமைச்சரவையில் இந்தச் சட்டம் குறித்து கருத்து முன்வைக்கப்பட்டபோது மதம் சார்ந்த பிரச்னைகள் இல்லை. அப்போதே நேருவும் அம்பேத்கரும் முடிவெடுத்து இந்தச் சட்டத்தை அமல்படுத்தியிருந்தால் எளிதாக நடைமுறைப்படுத்தி இருக்க முடியும். இப்போது மனதளவில் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை.

“இன்னொரு புறம் இது பெண்களுக்காக இயற்றப்படும் சட்டம் என்கிறார்கள். ஆனால், இதனை அமல்படுத்துவதால் அவர்களுக்கு இன்னும் சிக்கல்தான் அதிகரிக்கும். 1985-ல் சாஹாபானு  விவகாரம் பேசப்பட்டபோது பானு மற்றும் அவரது நான்கு பிள்ளைகளுக்கான பராமரிப்புச் செலவாக அப்போதைய குற்றவியல் நடைமுறைப்படி நிர்ணயிக்கப்பட்டது 500 ரூபாய். அதுகூட நியாயமான தீர்ப்பு முறை கிடையாது. தற்போது சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்குச் சேரவேண்டும். அது சொத்தாக இல்லாத நிலையில், இஸ்லாமியர்களுக்கான வக்த் வாரியம் வழியாக அந்தப் பெண்களுக்கான முழுப் பணத்தைத் தர அவர்கள் முன்வர வேண்டும். பொது சிவில் சட்டமாக அமல்படுத்தப்பட்டால் இத்தனை சிக்கல்களையும் கடந்துதான் அந்தப் பெண்ணுக்கு உரிய பலன் சென்றடையும். தலாக் முறைக்கும் சேர்த்து முற்றுப்புள்ளி வைக்கத்தான் இது கொண்டுவரப்படுவதாக இன்னொரு புறம் பேசப்படுது. ஆனால், 1956 வரை ஒருத்தருக்கு மூன்று மனைவிக்கு மேல் இருக்கலாம் என்பது இந்துக்களிடமே நடைமுறையில் இருந்த விஷயம்தான். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒருவருக்கு பல வாரிசுகள் உருவாகும் சட்டச் சிக்கலைத் தீர்க்கதான் இந்துக்கள் திருமணச் சட்டத்தின்படி திருத்தம் கொண்டுவரப்பட்டது. மேலும், இஸ்லாமிய கணவன் - மனைவியர், ‘எனக்கு நீ... உனக்கு நான்’ என இறப்பின்வரை ஒன்றாக இருக்கும் பலரை நான் தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கிறேன். தனிப்பட்ட ஒருவர் மூன்றாவது திருமணம் செய்துகொள்கிறார் என்பதற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தையே மொத்தமாக மாற்ற முடிவெடுப்பது தவறு. பெண்களுக்கான சொத்துரிமைக்காகக் கொண்டுவரப்படுகிறது என்றால், இஸ்லாமிய சட்டமாக தனியாக இயற்றி அதனை நடைமுறைப்படுத்தலாம் அல்லது ஷரியத் இன்னும் இங்கு முழுக்க முழுக்க அமல்படுத்தப்படாத நிலையில் இஸ்லாமியர்களின் ஒத்துழைப்புடன் அதில் மாற்றம் கொண்டுவந்து அதனை இங்கே, நம் நாட்டில் நடைமுறைப்படுத்தலாம். பொது சிவில் சட்டம் கொண்டுவருவது அடுத்த சிறுபான்மையான கிறிஸ்தவர்களை அவ்வளவாக எந்த விதத்திலும் பாதிக்கும் சாத்தியக் கூறுகள் இல்லை. ஏற்கெனவே இந்துக்களுக்கான சட்டம் என அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும்போது இஸ்லாமியச் சட்டத்தை தனியாகக் கொண்டுவந்து நடைமுறைபடுத்துவது மட்டுமே இதற்கான ஒரே தீர்வு. இல்லையென்றால், பல அரசுகள் கடந்தும் இதே சிக்கல் தொடர்ந்துகொண்டிருக்கும்” என்கிறார் மூத்த வழக்கறிஞர் விஜயன்.

பெண்களுக்கு இதுபற்றி விழிப்பு உணர்வு இருக்கிறதா?

பெண்களைத் தொடர்புபடுத்திதான் இந்தச் சட்டம் இப்போது கொண்டுவரப்பட வேண்டுமா, இல்லையா என்பது பற்றிக் கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டு வரும் நிலையில், பெண்கள் இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவது பற்றி என்ன நினைக்கிறார்கள்? சாமானிய பெண்கள் சிலரிடம் கேட்கப்பட்டது, கிடைத்த பதில் இதுதான், ‘‘பொது சிவில் சட்டமா... அப்படின்னா?’’.

அடித்தளம் இல்லாமல் எதனை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்?

- ஐஷ்வர்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்