Published:Updated:

ஆந்திரா : `கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் திடீர் தீ’ - 9 பேர் பலி

தீ விபத்து
தீ விபத்து

``தீ பரவுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நோயாளிகளில் இரண்டு பேர் தங்களது உயிரைக் காப்பாற்ற மாடியில் இருந்து குதித்துள்ளனர். அதில் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.”

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் கடுமையாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 21.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் கொரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஹோட்டல்கள் உள்ளிட்ட பல இடங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்கி இருந்த ஹோட்டலில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 2.17 லட்சம் மக்கள் கொரோன வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 1,939 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீ விபத்து
தீ விபத்து

ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஹோட்டல் ஒன்று தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இங்கு கொரோனா நோயாளிகள் பலரும் சிகிச்சை பெற்று வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் மருத்துவமனை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. சுமார் 30 நிமிடங்களில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தரைத்தளத்தில் முதலில் தீ ஏற்பட்டிருக்கலாம் என்றும் பின்னர் முதல் மற்றும் இரண்டாவது என பிற தளங்களுக்கும் தீ பரவியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். தீ பரவுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நோயாளிகளில் இரண்டு பேர் தங்களது உயிரைக் காப்பாற்ற மாடியில் இருந்து குதித்துள்ளனர். அதில் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 20-க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

விபத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முகமது இம்தியாஸ் பேசும்போது, ``அதிகாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அனைவரையும் வெளியேற்றி வருகிறோம். விபத்து தொடர்பான விசாரணை நடைபெறுகிறது” என்று தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் பெரும்பான்மையானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இன்னும் சிலரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு சுமார் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் இந்தச் சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குஜராத் : `கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் தீ விபத்து!’ - ஐ.சி.யு நோயாளிகள் 8 பேர் பலி
அடுத்த கட்டுரைக்கு