Published:Updated:

`சத்தீஸ்கர் பேப்பர் மில்லில் விஷ வாயுக் கசிவு; 3 பேர் கவலைக்கிடம்!’ - விபத்தை மறைத்த நிறுவனம்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்

சத்தீஸ்கரில் பேப்பர் மில்லில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா நோய்த்தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் சில நிபந்தனைகளுடன் நிறுவனங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கரில் ஊரடங்கு காரணமாகப் பேப்பர் மில் ஒன்று 40 நாள்களாகச் செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக மீண்டும் அந்த நிறுவனம் செயல்பாட்டுக்கு வர இருந்தது. இந்நிலையில் பேப்பர் மில்லில் இருந்து வாயு கசிந்ததில் 7 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்கள்
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்கள்

ராய்காட் மாவட்டத்தில் உள்ள இந்தப் பேப்பர் மில்லை மீண்டு இயக்கவுள்ளனர். இதன்காரணமாகப் பேப்பர் மில்லைத் தூய்மை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரத்தில் ஆலையில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது இதையடுத்து ஊழியர்கள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஊழியர்களை மாவட்ட ஆட்சியர் யஷ்வந்த் குமார் நேரில் சந்தித்தார். காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஊழியர்களிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர்.

`இயக்கப்படாமல் இருந்த டேங்குகள்; கொடிய ஸ்டைரீன் வாயு!' - விசாகப்பட்டினத்தை உலுக்கிய கொடூர சம்பவம்

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``பேப்பர் மில்லில் வாயுக் கசிவு ஏற்பட்ட விவரத்தை சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் எங்களிடம் தெரிவிக்கவில்லை. இந்தச் சம்பவத்தை மூடி மறைக்க முயன்றுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்பேரில் இந்த விவகாரம் எங்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டோம். நேற்று இரவு பேப்பர் மில்லில் இருந்த டேங்கை தூய்மைப்படுத்தும் பணியில் 7 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போதுதான் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்

இதேபோல் ஒரு வாயுக் கசிவு சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. தெர்மாகோல் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வாயு கசிவினால் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வாயுக் கசிவு காரணமாக சாலையில் பொதுமக்கள் மயங்கிவிழும் காட்சிகள் அதிர்ச்சிகரமானதாக இருந்தது. சாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர்.வெங்கடேஷ் பட்டினம் என்ற கிராமத்துக்கு அருகிலிருந்த எல்.ஜி பாலிமர் இந்தியா என்ற தெர்மக்கோல் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென கசிவு ஏற்பட்டுள்ளது. அந்தத் தொழிற்சாலையைச் சுற்றியிருந்த மூன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாயு பரவி 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துவிட்டனர். வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு