மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆதித்யா திவாரி என்பவர் 2016-ல் தான் 26 வயதாக இருக்கும்போது அவ்னிஸ் (Avnish) எனும் ஆண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளார். அவ்னிஸ் பிறப்பிலேயே வளர்ச்சிக் குறைபாடு உள்ள சிறப்பியல்புகள் கொண்ட குழந்தை (Down Syndrome). தற்போது அவ்னிஸ்க்கு 7 வயதாகும் நிலையில் இவரை எவரெஸ்ட் சிகரத்திற்கு அழைத்துச்செல்ல திட்டமிட்டுள்ளார் அவரின் தந்தை திவாரி. இது அவ்னிஸை மனதளவிலும் உடலளவிலும் குணப்படுத்தும் என்று கூறுகிறார்.
இதற்காக 6 மாதங்கள் அவ்னிஸ்க்கு பயிற்சி அளித்து வந்த அவரின் தந்தை, தற்போது இன்று (ஏப்ரல் 13-ல்) அவர்கள் இருவரும் 5364 மீட்டர் உயரத்தில் உள்ள எவெர்ஸ்ட் சிகரத்தின் அடிவார முகாம்க்கு (base camp of Mount Everest) பயணிக்க உள்ளனர். இது போல் எவெர்ஸ்ட் சிகரத்திற்கு பயணிக்கும் முதல் சிறப்பியல்புகள் கொண்ட குழந்தை (Down Syndrome) அவ்னிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் இது போல் ஜம்மு காஷ்மீர், லடாக் போன்ற இடங்களுக்கும் பயணித்துள்ளனர்.

இது பற்றிக் கூறிய அவரின் தந்தை, " என் 26 வயதில் திருமணமாகாதபோது ஜனவரி 2016-ல் அவ்னிஸை தத்தெடுத்தேன். என் மகனுக்கு டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) உள்ளது. நாங்கள் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமுக்கு மலையேறப் போகிறோம். அதற்காக நாங்கள் கடந்த ஆறு மாதங்களாகத் தயாராகி வருகிறோம். இதுவரை டவுன் சிண்ட்ரோம் உள்ள எந்தக் குழந்தையும் இவ்வளவு இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தின் முகாமுக்குச் சென்றதில்லை. பொதுவாக அங்கு செல்ல 12 நாட்களாகும், ஆனால் நாங்கள் பயணிக்க 21 நாட்கள் ஆகலாம். நாங்கள் வழிகாட்டி, ஷெர்பா மற்றும் மருத்துவ அவசரநிலைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். தேவைப்பட்டால் அவ்னிஸை விமானத்தில் கொண்டு செல்லவும் தயாராக உள்ளோம்" என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அவ்னிஸை சிறப்பு ஒலிம்பிக்கில் ஒரு தடகள வீரராகவும் ஈடுபடுத்தி வருகிறார் திவாரி. இதுபோல் தன் குழந்தையை மலை ஏறுதல், ஒலிம்பிக் போன்ற பல விளையாட்டு போட்டியில் ஈடுபடுத்தி வருவதாகவும் தற்போது அவ்னிஸ் மோவில் என்ற ஊரில் உள்ள ஒரு ராணுவப் பள்ளிக்குச் சென்று பயிற்சி பெற்றுவருவதாகவும் கூறினார். மேலும் வளர்ச்சி குறைபாடு உள்ள சிறப்பியல்புகள் கொண்ட குழந்தைகளை அனைவரும் இதுபோல் மலை ஏறுதல், ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுத்தி சாதனை படைக்க உதவேண்டும் என்றும் கூறினார் ஆதித்யா திவாரி. வாழ்த்துகள்!
