வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (04/11/2016)

கடைசி தொடர்பு:13:17 (04/11/2016)

'இதுவா உலகத்தரம் வாய்ந்த கல்வி?'  -மத்திய அரசை சாடும் ம.ம.க.

த்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சககத்தின் சார்பில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ' இடஒதுக்கீட்டு முறையை  ஒழிக்கும் இந்தத் திட்டத்தால், எளிய மக்களின் உயர்கல்வியை பறிக்கும் சூழல் உருவாகியுள்ளது' என ஆதங்கப்படுகிறார் பேராசிரியர் ஜவாஹிருல்லா. 

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்து, அவற்றில் 20 உயர்கல்வி நிறுவனங்களை உலகத்தரம் வாய்ந்தவையாக மாற்றுவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கான கருத்துக் கேட்புப் பணிகளில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. அதாவது, நாடு முழுவதும் 10 அரசுத்துறை பல்கலைக்கழகங்களை தேர்வு செய்யும் மத்திய அரசு, அப்பல்கலைக்கழகங்களுக்கு 2016-17 முதல் 2020-21 வரை ஆண்டுக்கு தலா ரூ.100 கோடி வழங்கி அதன் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும். இந்த வசதிகளைக் கொண்டு கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த வேண்டியது பல்கலைக்கழக நிர்வாகத்தின் கடமையாகும். இதற்காக மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளும் விதித்துள்ள கட்டுப்பாடுகளும் கல்வியாளர்கள் மத்தியில் அச்சத்தை விதைத்துள்ளது. குறிப்பாக, ' இடஒதுக்கீட்டை பறிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன' எனவும் குற்றம் சுமத்துகின்றனர். 

 "மத்திய அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்கைப்படி, ' அரசு உருவாக்கும் உலகத்தர கல்வி நிறுவனங்களுக்கு மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில் முழுமையான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் என்றும், ஒருகட்டத்துக்கு மேல் மத்திய அரசின் நிதி உதவி நிறுத்தப்படும்' என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் இடஒதுக்கீட்டு முறை என்பதே கேள்விக்குள்ளாக்கப்படும் அபாயம் உள்ளது. இது சமூகநீதிக்கு எதிரானது" எனக் கொந்தளிக்கிறார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர்.ஜவாஹிருல்லா. தொடர்ந்து, 

"இப்படியொரு திட்டம் அமல்படுத்தப்பட்டால், இடஒதுக்கீட்டு முறையை ஒழிக்கப்படுவது மட்டுமல்ல, ஏழை, எளிய மக்களின் உயர்கல்வியை பறிக்கும் நிலை உருவாகியுள்ளது. உலகத்தரம் வாய்ந்த கல்வி நிலையங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கும். இந்த மானியத் தொகையை வைத்துக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். உலகத்தரம் கொண்ட பல்கலைக்கழகமாக ஒரு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும் போது, அந்நிறுவனம், 'நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க வேண்டும்' என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அப்படி ஒரு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டால் தமிழ்நாட்டில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீடு முறைக்கு பதிலாக, தற்போது ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் 49.5 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே கடைப்பிடிக்கப்படும். 

மேலும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), ஆதிதிராவிடர் (அருந்ததியர்) போன்ற சமூகங்களின் உள்ஒதுக்கீட்டு முறை சத்தமில்லாமல் சவக்குழிக்குள் அனுப்பப்படும். இதுபோன்ற நிலையை உருவாக்க நினைக்கும் மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம். எனவே, உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, அதற்கு செலவிட உள்ள பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஏற்கெனவே உள்ள உயர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும். படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கவும் இந்த நிதியினை பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் ஆதங்கத்தோடு. 

- ஆ.விஜயானந்த் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்