குஜராத் பேரவையில் 'ஆபாச படம் பார்த்த 2 பிஜேபி எம்.எல்.ஏ.க்கள்'

காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவையில் பிஜேபியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் ஐ-பேட் மூலம் ஆபாச படம் பார்த்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையைத் தொடர்ந்து, குஜராத்தில் இத்தகைய சர்ச்சை எழுந்திருப்பது பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

குஜராத் மாநில சட்டப்பேரவையில் நேற்று கூட்டம் நடந்துகொண்டு இருந்தபோது பிஜேபி எம்.எல்.ஏ.க்கள் சங்கர் சவுத்திரி, ஜீத்தாபாய் பார்வார் ஆகியோர் ஆபாசப் படம் பார்த்ததாக, அம்மாநில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது.

அவ்விரு எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து ஐ-பேடில் ஆபாச புகைப்படங்களை பார்ப்பது போன்ற சில நிமிடக் காட்சி வெளியாகியுள்ளது. செல்போன் மூலம் அந்த காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

பேரவை இன்று மீண்டும் கூடியதும், இப்பிரச்னையை எழுப்பிய காங்கிரஸ் கட்சியினர், சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கருத்து கூறுகையில், "பிஜேபி ஆளும் மாநிலங்களில் ஜனநாயகத்தின் கோயில்களில் விதிமீறல் நிகழ்வது கவலைக்குரியது. அவர்கள் தங்களது உண்மையான முகத்தை காட்டி வருகின்றனர்," என்றார்.

முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த குற்றச்சாட்டால், 3 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யபட்டது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!