சபரிமலை விவகாரம்! மேல் முறையீடு தற்போது இல்லை!- கேரள காங்கிரஸ்

"பெண்கள் ஏன் மத வழிபாட்டு தலங்களில் அனுமதிக்கப்பட கூடாது? பாலியல் சார்ந்த பாகுபாடுகளை மதவழிபாட்டுத் தலங்களில் எதற்காக அனுமதிக்க வேண்டும்? வழிபாட்டுத் தலங்களில் இருப்பவர்களும் பெண்கள் வயிற்றில் பிறந்தவர்கள்தானே?" மும்பை ஹாஜி அலி தர்கா விவகாரம், சனி கோயில் விவகாரம், தற்போது உச்சநீதிமன்றத்தின் பதிலுக்காக காத்திருக்கும் சபரிமலை கோயில் விவகாரம் வரை எழுப்பப் பட்டிருக்கும் பொதுவான, சற்றே சிந்திக்க வேண்டிய கேள்வியும் இதுதான்.தற்போது சபரிமலை விவகாரத்தில், திடீர் என தனது தரப்பு கருத்தை மாற்றிக்கொண்டுள்ள கேரள அரசும் நேற்று உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கின் மீதான விவாதத்தில் இதே கேள்வியை முன்வைத்துள்ளது. இதன் மூலம்  சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான பத்து வருடம் பழமையான இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 1991-ல் கேரள உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், பந்தள சமஸ்தானத்தையும் அப்போதைய சபரிமலை மேல்சாந்தியாக இருந்த நீலகண்டரரு தந்திரியையும், பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பியது. மேல் சாந்தி, "1950-க்கு முன்பிருந்தே 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை" என பதிலளித்தார், பந்தள சமஸ்தான நிர்வாகி, "ஐயப்பன் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பவர். அதனால் பெண்களுக்கான அனுமதி அங்கு கிடையாது" என பதில் அளித்தார்.  இதனையடுத்து, "அரசியலமைப்புச் சட்டம்  எழுதப்படுவதற்கு முன்பு இருந்தே இது நடைமுறையில் இருப்பதால், மத கோட்பாடுகளை அவமதிக்கும்  வகையில் சட்டம் செயல்படாது, அதனால் சபரிமலைக்கு 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்தது சரியே" என தீர்ப்பளித்தது.

அதன் பிறகு, 2007ல் இந்தப் பிரச்னை மீண்டும் எழுப்பப்பட்டபோது, "சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்வதில் அரசுக்கு எந்தவித முரண்பாடும் இல்லை" என அப்போது ஆட்சியில் இருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு கூறியது, அதையடுத்து கேரளாவில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, "இந்த கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது, மேலும் பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்படும் சில நடைமுறைகளை மாற்றுவது தவறு" என்று கூறியது. தற்போது இடதுசாரி ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், பத்து வருடங்களுக்கு முன் இளம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பாக, மீண்டும் தொடங்கப்பட்ட சபரிமலை விவகாரத்தின் மீதான விசாரணையை வருடத் தொடக்கத்தில் உச்சநீதிமன்றம் மீண்டும் கையிலெடுத்துக் கொண்டது. அப்போது கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கிரி, 1991-ல் கேரள உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடந்த வழக்காடு ஆதாரங்களை சமர்ப்பித்தார். அதையடுத்து, "பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என எந்த அரசியலமைப்புச் சட்டத்திலும் இல்லை" என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயில் இடம்பெற்றுள்ள திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேட்டுக்கொண்டதை ஏற்று,  இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிய இவ்வழக்கில் பல கட்ட விசாரணைகளை நடத்தி வருகிறது, தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு. இதன் ஒரு கட்டமாகவே தற்போதைய கேரள அரசு, சபரிமலை விவகாரத்தில் பெண்ணுரிமை இயக்கங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் வகையில், தனது முந்தைய நிலையை மாற்றி மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் மீதான அடுத்த விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் பிப்ரவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள திருவிதாங்கூர் தேவசம்போர்டு, சபரிமலை விவகாரத்தில் இப்படியான கருத்தை தெரிவிக்க, அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை எனக் கூறியுள்ளது.

 

காங்கிரஸ் தரப்பு என்ன கூறுகிறது?

தற்போதைய அரசின் இந்த நிலைப்பாட்டை அடுத்து காங்கிரஸ் தரப்பு என்ன செய்ய இருக்கிறது?, திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் கூறுகையில், 
”சில வருடங்களுக்கு முன்பு இதே இடதுசாரிகள் கூட பெண்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்றுதான் கூறி வந்தார்கள், தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்கள். பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்படும் சிலவற்றை சட்டத்தின் பெயரால் கேள்விக்குறியாக்குவது தவறு. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறட்டும். இருப்பினும் வழக்கின்மீது மேல்முறையீடு செய்யும் எண்ணம் கட்சித் தரப்புக்கு தற்போது இல்லை” எனத் தெரிவித்தார்.

-ஐஷ்வர்யா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!