வருகிறது 'ஒரிஜினல்' இந்திய ரூபாய் தாள்கள்! #MakeinIndia

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ரூபாய்களான 500 - 1000 ஆகியவற்றை திரும்ப பெறும் முடிவை இந்திய அரசு எடுத்துள்ளது. இதன் சாதக பாதகங்கள் பல்வேறு தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த முடிவினை துணிச்சலாக  மத்திய அரசு எடுக்க பின்னால் இருந்தது ஒரே ஒரு அரசு நிறுவனம்தான், அது புதிதாக தொடங்கப்பட்ட 'மைசூரு வங்கித்தாள் அச்சடிப்பு நிறுவனம்"  அங்கிருந்து வரப்போவதுதான் இந்தியாவின் சிறப்புமிக்க புதிய ரூபாய்கள். 

கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி அன்று மும்பையில் நடந்த ரிசர்வ் வங்கி விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி " நாம் இனியும் நமது ரூபாய்தாள்களை அச்சடிக்க வெளிநாடுகளை நம்பிக்கொண்டிருக்க கூடாது. நமது பலவீனங்களில் அதுவும் ஒன்று "என குறிப்பிட்டார். 

இந்திய ரூபாய்கள்

அதே ஏப்ரலில் அடுத்த பத்தாவது நாள் டெல்லியில் நடைபெற்ற மற்றொரு விழாவில் " இந்திய நாணவியல் கழகமும், ரிசர்வ் வங்கி முத்திரை ப்ரைவேட் லிமிடெட்டும் இணைந்து மைசூரில் கட்டப்பட்டு வரும் புதிய அச்சகத்தில் முழுக்க முழுக்க இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட ரூபாய்களை அச்சடிக்க உள்ளது" என்கிற அறிவிப்பை வெளியிட்டார். இது 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் ஒன்றாக கருத வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

இதன் தொடர்ச்சியாக 500 மற்றும் 1000 ரூபாய்களின் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் புதிய 500 மற்றும் 2000 ரூபாய்கள் வர இருக்கின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றன. 

இந்திய ரூபாய்கள் நாம் நினைப்பது போல் உண்மையில் காகிதங்களில் மட்டும் அச்சடிப்பதில்லை. அதில் பருத்தி,லினன்,  பால்சம் என்கிற மரப்பிசின் மற்றும் சில வகை சிறப்பு மை பயன்படுத்தப்படுகின்றன. இவை மட்டுமில்லாமல் பல்வேறு துணி இழைகளும் இதில் பயன்படுத்தப்படுகின்றன. எளிதில் மடங்கவும் லேசில் கிழியாதவாறும் இருக்கும்படி பல்வேறு விதமான அழுத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உருவாக்கப்படுகின்றது. இதிலுள்ள பாதுகாப்பு உறுதிமுறைகள் எளிதில் போலியான தாள்களை அச்சிடமுடியாத வண்ணம் உருவாக்கப்படுகிறது.  

ஸ்வீடன், நார்வே, மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து ஸ்டார்ச் பேப்பர் என்கிற கஞ்சித்தாள் இறக்குமதி செய்யப்படுகிறது அதனுடன் வாழைநார் மற்றும் இந்திய பருத்தி இழைகள் சேர்த்து ரூபாய்தாள் உருவாகிறது.  அதில் ஸ்விட்சர்லாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிறப்பு அச்சு மைகள் கொண்டு தாள்கள் அச்சிடப்பட்டு வந்தன. மேலும் ரூபாய்களின் உறுதித்தன்மையை பாதுகாக்க ஜெலட்டின் என்கிற மிருக கொழுப்புக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. 

இந்நிலையில் மைசூரு ரூபாய் அச்சகத்தில் இந்த பணிகள் முழுமையாக கடந்த ஆண்டு நவம்பரிலே முழுமையாக தொடங்கப்பட்டுவிட்டன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் ரகசியமாக புதிய 2000 ரூபாய்களும் 500 ரூபாய்களும் பல்வேறு ரிசர்வ் வங்கி மாநில தலைமையிடங்களில் சேமிக்கப்பட்டன. இப்படி மைசூரிலிருந்து பல்வேறு பகுதிகளில் சேமிக்க கொண்டு செல்லப்பட்ட பணம்தான் பல்வேறு பகுதிகளில் கண்டெயினர்களில் கொண்டு செல்லப்படும்போது சோதனைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜூலை மாதம் கரூரில் பழுதாகி நின்ற 1600 கோடி பணம் கூட மைசூரு ரூபாய் அச்சகத்தில் இருந்து திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கி கிளைக்கு கொண்டு செல்லப்பட்ட பணம்தான்.   

இந்திய ரூபாய்கள்

தற்போது ரூபாய்களை திரும்பப்பெறும் திட்டத்தின் கீழ் தாள்கள் திரும்பப்பெற்ற பின் வரப்போகும் புதிய தாள்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'இந்திய ரூபாய்கள்'. இதில் பயன்படுத்தப்படும் சிறப்பு வாய்ந்த மைகள் கூட இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு.  

- வரவனை செந்தில்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!