ரகசியம் காத்த மோடி! - பல மாதங்கள் முன்பே திட்டமிட்டாரா?

'500 மற்றும் 1000 ரூபாய்களைத் திரும்பப் பெறும் மோடியின் பெரும் திட்டம் கடந்த மார்ச் மாதத்திலேயே திட்டமிடப்பட்டது' என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? 

ஆனால், தகவலின் முக்கியத்துவம் காரணமாக இந்த செய்தி குறைந்த பேரிடம்தான் பகிரப்பட்டிருந்தது. இத்தனைக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில்தான் ரிசர்வ் வங்கியின் பொறுப்பு ரகுராம் ராஜனிடமிருந்து உர்ஜித் பட்டேலின் கரங்களுக்கு மாறியது. உர்ஜித் பட்டேலுக்குக்கூட இந்தத் தகவல் பதவியேற்றப் பிறகுதான் தெரிந்திருக்கிறது. அதுவரை ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கி துணை கவர்னர் காந்தி ஆகியோர் மட்டுமே அறிந்ததொரு ரகசியமாக இது இருந்திருக்கிறது.  அரசின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியத்துக்குக்கூட இது தெரிந்திருக்கவில்லை என்பது கூடுதல் தகவல். 

மார்ச் மாதத்தில் அரசின் பொருளாதாரச் செயலருக்கும் ரகுராம் ராஜனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையுடன் இந்தத் திட்டத்துக்கான முதல்படி தொடங்கியது. அதன் பிறகுதான் தேவைப்படும், அதே சமயம் நம்பகத்தன்மையுடைய நபர்களிடம் மட்டும் இந்தச் செய்தி பகிரப்பட்டுள்ளது.

செயல்திட்டத்தின் அடுத்தக்கட்டமாக பொருளாதாரச் செயலகத்துக்கும் ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் இடையே எழுத்துப் பூர்வ பரிமாற்றம் கடந்த செவ்வாய் அன்று நிகழ்ந்திருக்கிறது. இதன் பிறகு இருதரப்புகளும் அறிக்கையை தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகம் வழியாக மக்களுக்கு அறிவித்த பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் பிற அமைச்சர்களுக்கு இது தொடர்பான தகவல் பகிரப்பட்டிருக்கிறது.

தீபாவளி போன்ற பண்டிகைக்காலங்களில் இந்தத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தால், அது மக்களைப் பெரிதும் பாதித்திருக்கும் சூழல் இருந்தது. மற்றொரு பக்கம் மாநிலங்களுக்கான தேர்தல் வரும் சூழலில் இதனைத் தாமதமாகவும் வெளிக்கொண்டுவர முடியாது. ஏனெனில், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் குறைந்தபட்சம் 50 நாட்களாவது இயல்புச் சூழல் தேவை. அதனால், இதுதான் சரியான நேரம் எனக் கருதி நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளார்கள்.

“அரசியல் வியூகத்துடன் பொருளாதாரத்தை அடுத்த நகர்வுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார் மோடி. இது சிங்கப்பூரின் தலைவர் லீ க்வான் யூவுடன் ஒப்பிடும் அளவுக்கு அவரது மதிப்பை உயர்த்தி இருக்கிறது. தன் செயல்திட்டங்களை துரிதமாக செயல்படுத்தும் ஆர்வமும் அதே சமயம் அது துளியும் சிதறாமல் செயல்படுத்த வேண்டியது என்ற முன் ஜாக்கிரதையுடனும் செயல்பட்டிருக்கிறார்” என்று பெருமைப்படுகிறார்கள் பி.ஜே.பி-யினர்.

அரசு சார்பில் பிரதமர் மட்டுமே அறிந்துள்ள இதன் மீதான அடுத்தக்கட்ட செயல்பாடுகள் ஒருபக்கம் இருக்க, இன்னும் சில காலத்துக்கு அரசு இயந்திரமே புரியாத சூழலில்தான் இயங்கும் எனத் தெரிகிறது.

-ஐஷ்வர்யா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!