வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (16/11/2016)

கடைசி தொடர்பு:18:32 (16/11/2016)

’7,016 கோடி ரூபாய் வாராக்கடன் ரத்து...?’ - இல்லை என்கிறது எஸ்.பி.ஐ நிர்வாகம்!

வாராக்கடன்

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனக்கு திரும்ப வரவேண்டிய 7,016 கோடி ரூபாய் வாராக்கடனை ரத்து செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 7,016 கோடி ரூபாய் கடனை கட்டாமல் ஏமாற்றியவர்கள் விஜய் மல்லையா உள்ளிட்ட நாட்டின் மிகப்பெரிய 63 பண முதலைகள் என்பது மேலும் அதிர்ச்சி தரக் கூடியது. இதன்மூலம், கடன் தொல்லையால் நாட்டில் இருந்து தப்பி ஓடிய அதிபர் விஜய் மல்லையாவின் 'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்'-க்கு வழங்கப்பட்ட ரூ. 1,000 கோடி கடன் உட்பட 7,016 கோடி ரூபாய் கடன் தொகை இனி எஸ்.பி.ஐ கடன் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கி திரும்பக் கட்டாதவர்கள் என 100 பெரும் பணக்காரர்களின் பட்டியல் அவ்வங்கியிடம் உள்ளது. இதில் விஜய் மல்லையா உள்ளிட்ட 63 பேரின் 7,106 கோடி கடனை எஸ்.பி.ஐ ரத்து செய்துள்ளது. மேலும் 31 பேர் வாங்கிய கடனில் பாதி தொகையைக் கட்டினால் போதும் என எஸ்.பி.ஐ தெரிவித்திருப்பது கூடுதல் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஏனெனில், இவர்கள் வேண்டுமென்றே வாங்கிய கடனை கட்டாமல் ஏமாற்றி வந்தவர்கள். வங்கி சார்பில் பல நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், திரும்ப வரவே வராத இந்த 7,016 கோடி வாராக்கடன்-ஐ, Advance Under Collection Account (AUCA) என்ற திட்டத்தின்படி, எஸ்.பி.ஐ ரத்து செய்துள்ளது என்று Daily News Analysis இணையதளம் செய்தி வெளியிட்டு இருந்தது.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, அதிக மதிப்புள்ள பழைய 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை செல்லாது என மத்திய அரசு அறிவித்த ஒரு வாரத்துக்குள், எஸ்.பி.ஐ வங்கியின் 7,016 கோடி ரூபாய் வாராக் கடன் தள்ளுபடி குறித்த தகவல்கள் வெளியாகி, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள்,  தாங்கள்  கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை எடுக்க, வங்கியில் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்த தெம்பிருந்தும் வேண்டுமென்றே கட்டாமல் ஏய்ப்பு செய்த பண முதலைகளுக்கு எஸ்.பி.ஐ சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது.

இப்போது ரத்து செய்யப்பட்ட வாராக் கடன்களில், அதிக பலனடைந்தது விஜய் மல்லையாவே! அவர் எஸ்.பி.ஐயிடம் வாங்கியிருந்த ரூ 1,201 கோடி கடன் ரத்தாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கே.எஸ். ஆயில் நிறுவனத்தின் ரூ 596 கோடி கடன். சூர்யா மருந்துகள் நிறுவனத்தின் ரூ. 526 கோடி கடன்,  ஜி.ஈ.டி பவர் நிறுவனத்தின் ரூ. 400 கோடி கடன் மற்றும் சாயி இன்ஃபோ சிஸ்டம் நிறுவனத்தின் ரூ 376 கோடி கடனும் ரத்தாகியுள்ளது. இவர்கள் அனைவரும்  வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தத் தவறியவர்கள்.

 விஜய் மல்லையாவின் 'கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம்' நாட்டில் உள்ள 17 வங்கிகளிடம் பெற்ற ரூ. 6,963 கோடி கடன் பெற்றுக் கொண்டு, திரும்ப கொடுக்காமல் உள்ளது. மல்லையாவின் கடனை பெறுவதற்காக, சமீபத்தில், கோவாவில் மல்லையாவின் 'கிங் ஃபிஷர் வில்லா' உட்பட அவரின்  சொத்துகள் ஏலத்தில் விடப்பட்டன. ஆனால், இதனை ஏலத்தில் எடுக்க ஒருவர் கூட முன்வராததால் வங்கிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

வெள்ளைப்பணம் வைத்திருக்கும் சாமான்ய மக்களுக்கு கறுப்பு மை, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் கடனை ரத்து செய்து அவர்களுக்கு வெள்ளை கொடியா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுகிறது.

இதுகுறித்து அருண் ஜெட்லி மற்றும் எஸ்பிஐ வங்கி தலைவர் அருந்ததி பட்டாசார்யா கொடுத்துள்ள விளக்கம்:

Advance Under Collection Account (AUCA) என்ற வாராக் கடன் மீட்பு திட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்ட கடன்கள் கடன் புத்தகத்திலிருந்து நீக்கப்படும். ஆனால் அந்தக் கடன்களை மீட்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.  

-ஆ.நந்தகுமார்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்