ஒரு நாள் பில்லியனர் ஆன டாக்ஸி டிரைவர்... வங்கியின் திடுக் பரிசு!

டாக்ஸி பஞ்சாப் மாநிலத்தில், பிரதம மந்திரியின் ஜன்தான் கணக்கு வைத்திருந்த டாக்ஸி டிரைவர் ஒருவரின் வங்கிக் கணக்கில் ஒரே நாளில் ரூ. 9,806 கோடி சேர்ந்துள்ளது.

நாட்டில் கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டு, புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை பெற வங்கி வாசலிலும் ஏடிஎம்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஆனாலும் மக்கள் போதிய பணம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வணிகம், வியாபாரம் என அனைத்தும் ஸ்தம்பித்து போயிருப்பதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாடி வருகின்றன. மத்திய அரசு தனது முடிவில் உறுதியாக இருக்கிறது. இதற்கிடையே நாட்டில் பல்வேறு கூத்துகளும் அரங்கேறி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது. 

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்தவர் பல்வீந்தர் சிங். டாக்ஸி டிரைவரான பல்வீந்தர், அங்குள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலாவில் கணக்கு வைத்திருந்தார். கடந்த நவம்பர் 4ம் தேதி பல்வீந்தர்சிங், தனது கணக்கை சோதித்து பார்த்த போது 98,05,95,12,231 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 9,806 கோடி பல்வீந்தரின் கணக்கில் இருந்தது. கடந்த நிதி ஆண்டில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் மொத்த வருவாய் இது. பஞ்சாப் மாநிலத்தில் தனிநபர் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மிகப் பெரியத் தொகையும் ஆகும்.

பல்வீந்தர்சிங்கிற்கு ஒரே ஆச்சரியமாகிப் போனது. ஆனால், அவருக்கு அதில் ஏதோ தவறு இருப்பது தெரிய வந்தது. அதனால் வங்கிக்கு சென்று 'எனது கணக்கில் ஏராளமான பணம் டெபாசிட் ஆகியுள்ளது. அது என்னவென்று பாருங்கள்' என கூறியுள்ளார். ஆனால், வங்கி ஊழியர்கள் வழக்கம் போல அதனைக் கண்டு கொள்ளவில்லை.

பல்வீந்தர்சிங்கின் பாஸ்புக்கை மட்டும் நவம்பர் 7ம் தேதி வரை பிடுங்கி வைத்துக் கொண்டுள்ளனர். பின்னர் தவறு கண்டுபிடிக்கப்பட்டு, அடுத்த நாளே அவரது கணக்கில் இருந்து 9,806 கோடியும் காணாமல் போய் விட்டது. பின்னர் பல்வீந்தரின் பாஸ்புக்கை அவரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இது குறித்து பல்வீந்தர்சிங் கூறுகையில், ''நான் பிரதான் மந்திரி ஜன் யோதான் திட்டத்தின் கீழ் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். சாதாரணமாக எனது வங்கிக் கணக்கில் 3 ஆயிரம்தான் இருக்கும். ஆனால் நசம்பர் 4ம் தேதி எனது கணக்கில் கோடிக்கணக்கானத் தொகை இருந்தது கண்டு அதிர்ச்சியுற்றேன். வங்கிக்கு தகவல் கொடுத்தும் உதாசீனப்படுத்தினர்'' என்கிறார். 

இது குறித்து வங்கி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது, ''பல்வீந்தர்சிங்கின் கணக்கில் 200 ரூபாய் வரவு வைப்பதற்கு பதிலாக வங்கியின் துணை மேலாளர் தவறுதலாக 11 டிஜிட் இன்டர்னல் பேங்கிங் பொது கணக்கு எண்ணை பல்வீந்தரின் கணக்கில் பதிவு செய்துள்ளார். அப்படித்தான் பல்வீந்தர்சிங்கின் கணக்கில் 9,806 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது.

வருவாய்துறை இணைக்கமிஷனர் இதனை பூபேந்திர சிங் இதனை உறுதி செய்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ''வங்கி ஊழியர்கள் தொடர்ந்து இது போன்றத் தவறுகளை செய்து வருகின்றனர். கணக்கு வைத்திருப்பவர்களே முன்வந்து தவறினை சுட்டிக் காட்டினாலும் அதனை சட்டை செய்வதும் இல்லை'' என குற்றஞ்சாட்டியுள்ளார்.

-எம்.குமரேசன்


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!