'கூட்டிக் கழித்தாலும் கணக்கு சரியாகவில்லை பிரதமரே?' - நாசிக் நிலவரம்; வரிந்து கட்டும் வங்கிகள் | Demonetisation: Reason behind demand for new notes

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (01/12/2016)

கடைசி தொடர்பு:16:15 (01/12/2016)

'கூட்டிக் கழித்தாலும் கணக்கு சரியாகவில்லை பிரதமரே?' - நாசிக் நிலவரம்; வரிந்து கட்டும் வங்கிகள்

ரசு ஊழியர்களும் பென்சன்தாரர்களும் வங்கி வாசல்களில் காலை முதலே தவம் கிடக்கின்றனர். ' 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு ஈடுகட்டும் அளவுக்குப் புதிய தாள்கள் அச்சடிப்பது சாத்தியமில்லை. ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான நான்கு அச்சடிக்கும் மையங்களிலும் நிலவரம் அவ்வளவு எளிதாக இல்லை' என்கின்றன வங்கி ஊழியர் சங்கங்கள். 

மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் அதிர்ச்சியில் இருந்து சிறு வணிகர்கள் இன்னமும் மீளவில்லை. சில்லறை வர்த்தகம் அடியோடு முடங்கிவிட்டது. ஸ்வைப் இயந்திரம் வைத்திருக்கும் மளிகைக் கடைகளில் மட்டுமே மக்கள் கூட்டம் திரள்கிறது. இதனை சரிக்கட்டுவதற்காக புதிய 500 ரூபாய் தாள்கள் தமிழகத்தில் விநியோகம் செய்யப்பட்டாலும், முழுமையான புழக்கத்துக்குள் அவை வரவில்லை. இன்று காலை முதல் அரசு ஊழியர்களும் வங்கி வாசல்களில் கால்கடுக்க நிற்கின்றனர். பெரும்பாலான ஏ.டி.எம்கள் இயங்காததால், பென்சன்தாரர்கள் சொல்ல முடியாத கவலையில் ஆழ்ந்துள்ளனர். " தற்போது மக்களுக்குத் தேவையான ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆறு மாதம் காலம் தேவைப்படும். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருந்தாலும், தேவையான அளவு அச்சடித்து முடிக்க 2017-ம் ஆண்டு ஏப்ரல் வரையில் தேவைப்படும். பிரதமரும் ரிசர்வ் வங்கியும் சொல்வது போல 50 நாட்களில் ரூபாய் தட்டுப்பாடு தீர்வதற்கான வாய்ப்பு இல்லை" என ஆதங்கத்தோடு பேசினார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன். அவர் நம்மிடம், 

"ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு நான்கு மையங்கள் செயல்படுகின்றன. இதற்காக, 1995-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி 'ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட்' என்ற ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டது. இது ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான துணை நிறுவனம் ஆகும். நாட்டில் உள்ள தேவைக்கும் விநியோகத்துக்குமான இடைவெளியைக் குறைக்கும் வகையில் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்காக இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. கம்பெனிகள் சட்டப்படி தனியார் கம்பெனியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் இதன் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. மைசூரு மற்றும் மேற்குவங்க மாநிலம், சல்போனியில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சகங்களை நிர்வகிக்கிறது. இந்த இரண்டு அச்சகங்களும், ஒரு நாளைக்கு இரண்டு ஷிப்ட் அடிப்படையில் வருடத்துக்கு ரூபாய் தாள்களாக 1,600 கோடி அச்சடிக்கும் திறன் வாய்ந்தவை.

இதுதவிர, மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள தேவாஸ் ஆகிய இடங்களில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் இரண்டு அச்சகங்கள் செயல்படுகின்றன. இந்த இரண்டும் செக்யூரிட்டி பிரிண்ட்டிங் அண்ட் மின்ட்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மூலமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. நிதி அமைச்சகத்தின் சமீபத்திய வருடாந்திர அறிக்கையின்படி, இந்த இரண்டு அச்சகங்களும் மொத்த ரூபாய் தாள்களின் தேவையில் 40 சதவீதம் வரையில் அச்சடிக்கும் தகுதி வாய்ந்தவை. மைசூருவிலும் சல்போனியிலும் உள்ள இரண்டு அச்சகங்கள் 60 சதவீதம் வரை ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் திறன் வாய்ந்தவை. ஆக, நான்கு அச்சகங்களும் இணைந்து மொத்தமாக இரண்டு ஷிப்டுகளிலும் பணிபுரிந்தால் வருடத்துக்கு 2,666 கோடி ரூபாய் அளவுக்கு அச்சடிக்க முடியும்.
 
அதேவேளையில், மத்திய அரசின் புள்ளி விபரப்படி, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியில் புழக்கத்தில் இருந்த ரூபாய் தாள்களின் மதிப்பு 17,54,000 கோடி ரூபாய். இதில் 45 சதவீதம் 500 ரூபாய் நோட்டுகள். இதன் மதிப்பு 7,89,000 கோடி ரூபாய். புழக்கத்தில் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 6,84,000 கோடி ரூபாய். இது 39 சதவீதம் ஆகும். எண்ணிக்கையில் 684 கோடி தாள்கள். ஆக, 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க 342 கோடி தாள்களே போதுமானது. புதிய இரண்டாயிரம் ரூபாய் தாள்களை அச்சடிக்கும் பணியை, கடந்த செப்டம்பர் மாதமே மத்திய அரசு தொடங்கிவிட்டதாகக் கூறுகிறது. அதன்படி பார்த்தால், இரண்டு மாத காலத்தில் பணிகள் நிறைவடைந்திருக்கும். 
அதேபோல், மூன்று ஷிப்டுகளில் பணிபுரிந்தால் 500 ரூபாய் தாள்களின் எண்ணிக்கை 4000 கோடி தாள்களாக உயரும். இதில், 20 சதவீத வேலைத் திறன் 10 ரூபாயிலிருந்து 100 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 80 சதவீத வேலைத் திறன் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்காக பயன்படுத்துவதாக எடுத்துக் கொண்டால், வருடத்துக்கு 3,200 கோடி தாள்கள் அச்சடிக்கப்படும். புழக்கத்திலிருந்து செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 1,578 கோடி தாள்கள். 

இதில், சுமார் 20 சதவீதம் வரையில் கறுப்புப் பணமாக இருக்கும் என்பதால், அந்தப் பணம் வங்கிகளுக்கு வராது என்கின்றனர். எனவே, 1,578 கோடி தாள்களில் 20 சதவீதத்தைக் கழித்தால் மீதமுள்ள 80 சதவீதமான 1,262 கோடி தாள்கள் அச்சடிக்கப்பட வேண்டும். ஆனால், 1000 ரூபாய் நோட்டுகள் முற்றிலும் நீக்கப்பட்டதால், குறைந்தபட்சம் அதில் 25 சதவீதமாவது புதிய 500 ரூபாய் நோட்டுகள்தான் வந்தால்தான் நிலைமை சகஜமாகும் என்கின்றனர். அப்படியானால், ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பில் 25 சதவீதம் கூடுதலாக 500 ரூபாய் தாள்கள், அதாவது கூடுதலாக 342 கோடி தாள்கள் அச்சடிக்கப்பட வேண்டும். இதன்படி மொத்தத் தேவையான 1,604 கோடி எண்ணிக்கையில் 500 ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்பட வேண்டும். இவற்றை அச்சடிக்க ஆறு மாதம் காலம் தேவைப்படும். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தப் பணிகள் தொடங்கியிருந்தால், அரசு சொல்வதுபோல் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி முடிவடைய வாய்ப்பில்லை. மக்களின் இயல்பு நிலை திரும்புவதற்கும் வாய்ப்பில்லை. என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை, பிரதமர் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். நிலைமையை சீர்செய்வதற்கான மாற்று ஏற்பாடுகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்" என்றார் கவலையோடு. 

- ஆ.விஜயானந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்