Published:Updated:

டெல்லி: `அலங்கார ஊர்திகள் முதல் சாகச நிகழ்ச்சிகள் வரை' - 73-வது குடியரசு தின விழா ஹைலைட்ஸ்!

குடியரசு தின விழா

குடியரசுத் தலைவர் முன்னிலையில் ராணுவ அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்வுகளுடன் நாட்டின் 73-வது குடியரசு தின விழா டெல்லி ராஜபாதையில் நடைபெற்றது.

டெல்லி: `அலங்கார ஊர்திகள் முதல் சாகச நிகழ்ச்சிகள் வரை' - 73-வது குடியரசு தின விழா ஹைலைட்ஸ்!

குடியரசுத் தலைவர் முன்னிலையில் ராணுவ அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்வுகளுடன் நாட்டின் 73-வது குடியரசு தின விழா டெல்லி ராஜபாதையில் நடைபெற்றது.

Published:Updated:
குடியரசு தின விழா

இன்று நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ராம்நாத் கோவிந்த் இந்திய தேசிய மூவர்ணக் கொடியேற்றி விழாவைத் தொடங்கிவைத்து, ராணுவ வீரர்களின் அணிவகுப்பை ஏற்றார். குடியரசு தின விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித், பிற மத்திய அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்த ஆண்டு வெளிநாட்டுத் தலைவர்கள் யாரும் குடியரசு தின விழாவில் பங்கேற்கவில்லை. மேலும், குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் 24 ஆயிரமாகக் குறைக்கப்பட்டது. இந்த விழாவின் ஒரு பகுதியாக விருது வழங்கும் நிகழ்வில், வீரதீரச் செயலுக்காக, ஸ்ரீநகரில் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்று வீரமரணமடைந்த உதவி ஆய்வாளர் பாபுராம் உட்பட ஆறு பேருக்கு `சௌரிய சக்ரா' விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். மேலும், சிறப்பாகப் பணியாற்றிய வீரர்களுக்குப் பதக்கங்களையும் குடியரசுத் தலைவர் வழங்கினார்.

அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு

அதைத் தொடர்ந்து 1965 மற்றும் 1971-ம் ஆண்டு போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகளின அணிவகுப்பு குடியரசுத் தலைவர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த பீரங்கி அணிவகுப்பில் சென்னை ஆவடியில் தயார்செய்யப்பட்ட அர்ஜுன் ரக பீரங்கியும் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து, இந்தியாவின் படை வலிமையை உலக நாடுகளுக்கு உணர்த்தும்விதமாக, இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மின்னணுப் போர் சாதனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், இந்திய விமானப்படையைச் சேர்ந்த 75 போர் விமானங்கள் சாகசங்களை நிகழ்த்தின. அடுத்ததாக மெட்ராஸ் ரெஜிமென்ட், அஸ்ஸாம் ரெஜிமென்ட் படை வீரர்கள் உட்பட ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். இதில் ஜம்மு காஷ்மீர் மற்றும் சீக்கிய படைப்பிரினரும் ராணுவ அணிவகுப்பு நடத்தினர்.

அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு

குடியரசு தின விழாவின் இறுதியாக மத்திய அரசால் அனுமதி அளிக்கப்பட்டிருந்த மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் மேகாலயா, கோவா, உத்தரகாண்ட், ஹரியானா, கர்நாடகா, அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றிருந்தன.

அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு

இந்த அலங்கார ஊர்திகளில் அரவிந்தர், புத்தர், சர்தார் வல்லபாய் பட்டேல், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், குடியரசு தின அணிவகுப்பில் மத்திய அரசு சார்பாக, ராணுவ ஆராய்ச்சி மையம், விமானப்படை மற்றும் தபால் துறையின் சாதனை விளக்க அலங்கார ஊர்திகள் அணிவகுத்துச் சென்றன. அதையடுத்து, இந்தியாவின் தனித்துவமான `வேற்றுமையில் ஒற்றுமை' மற்றும் பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை வெளிப்படுத்தும்விதமாக பரதநாட்டியம், கதகளி போன்ற பல்வேறு மாநிலங்களின் நடனம் மற்றும் இசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இப்படியாக ராணுவ அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் என டெல்லி ராஜபாதையில் கோலாகலமாகக் குடியரசு தின விழா நடைபெற்றது.