”தேர்வில் தேசிய கீதத்துக்கு அர்த்தம் கேட்டால், இந்தியன் என்ன செய்வான் தெரியுமா?'' - ராம்கோபால் வர்மா | Director Ram Gopal Varma asks Why not national anthem in bars and clubs

வெளியிடப்பட்ட நேரம்: 18:49 (02/12/2016)

கடைசி தொடர்பு:12:38 (03/12/2016)

”தேர்வில் தேசிய கீதத்துக்கு அர்த்தம் கேட்டால், இந்தியன் என்ன செய்வான் தெரியுமா?'' - ராம்கோபால் வர்மா

தேசிய

நாடு முழுவதும் தியேட்டர்களில் படம் தொடங்குவதற்கு முன், தேசிய கீதம் பாடப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 1975-ம் ஆண்டு வரை இந்தியாவில் தியேட்டர்களில் தேசிய கீதம் பாடப்பட்டு வந்துள்ளது. ஆனால், படம் முடிந்த பின்னர்  இசைக்கப்பட்டுள்ளது. ஆனால் ரசிகர்களோ  உரிய மரியாதை கொடுக்காமல் தேசிய கீதம் இசைக்கப்படும்போது,  தியேட்டரை விட்டு வெளியேறியுள்ளனர்.

இது அவமதிப்பது போல இருந்ததால், தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கப்படுவது நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது  திரையில் இந்தியக் கொடி காட்டப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் வந்தனா கட்டாரியா ஹரித்வாரில் உள்ள சினிமா தியேட்டருக்கு குடும்பத்துடன் 'டியர் ஜிந்தகி' படம் பார்க்கப் போனதாகவும் சினிமா தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தியேட்டர் மேலாளரிடம் வந்தனா கேட்டுள்ளார். அதற்கு அவர், 'தங்களுக்கு உத்தரவு வரவில்லை ' என பதில் அளித்துள்ளார். ஆவேசமடைந்த வந்தனா, ''தேசிய கீதத்தையும்  கொடியையும் மதிக்க நீதிமன்ற  உத்தரவு வரவேண்டும் என காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தேசிய சின்னங்களுக்கு மரியாதை செலுத்த முடியாத நாம் இந்தியர் என்று சொல்லிக் கொள்ள தகுதி இல்லை''.என கூறி சினிமாவை பார்க்காமல்  வெளியேறினார். தொடர்ந்து சமூக வலை தளங்களில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை நெட்டிசன்கள் எழுதி வருகிறார்கள். பிரபலங்களும் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. எந்த ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் வந்தாலும், தனது கருத்தை ட்வீட் செய்ய இவர் தவறுவதே இல்லை.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும் ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில் தொடர்ச்சியாக கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதில், ''பார்களிலும், நைட் கிளப்புகளிலும் மது அருந்துவதற்கு முன் ஏன் தேசிய கீதத்தை இசைப்பதை கட்டாயப்படுத்தக் கூடாது'' என ராம்கோபால் வர்மா வினா எழுப்பியிருக்கிறார். 'தேசத்தின் ஒவ்வொரு பத்திரிகையும் முதல் பக்கத்தில் இந்திய நாட்டுக் கொடியை மட்டும்தான் பிரின்ட் செய்ய வேண்டும். வாசகர்கள் 2-வது பக்கத்தில் இருந்துதான் செய்திகளை படிக்க வேண்டும்'' என ஏன் உத்தரவிடக் கூடாது என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

'சினிமா தியேட்டர்களை மட்டும் ஏன் கட்டாயப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு தொலைக்காட்சித் தொடர் தொடங்குவதற்கு முன்பும் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும்' என்றும்' ரேடியோவில் ஒவ்வொரு புரோகிராமின் போதும் ஜன கன மன படிக்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டியதுதானே என்றும் ராம் கோபால் ட்விட்டில் கூறியிருக்கிறார். 

அது போல். 'நாட்டில் உள்ள கோயில்கள், ஆலயங்கள், மசூதிகளிலும் பிரார்த்தனைக்கு முன்பும் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் 'என்றும் உத்தரவிட வேண்டும் என்றும் ராம் கோபால் வர்மா கூறியிருக்கிறார். தேர்வில் தேசிய கீதத்துக்கு அர்த்தம் கூறுமாறு  கேள்வி கேட்கப்பட்டால், எந்த இந்தியனும் பாஸ் ஆக மாட்டான்' என்றும் ராம் கோபால் வர்மா ட்விட் செய்திருக்கிறார். 

 

- எம்.குமரேசன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்