வெளியிடப்பட்ட நேரம்: 10:34 (03/12/2016)

கடைசி தொடர்பு:11:19 (03/12/2016)

உங்கள் சிக்னல் தோழர்கள் இவர்கள்தான்! #டெலிவரிபாய்ஸ்

டெலிவரி

அடுத்த முறை சிக்னலில் காத்திருக்கும்போது இவர்களைக் கொஞ்சம் கவனியுங்கள். மலையைச் சுமந்து செல்லும் அனுமனை போல, ஒரு பெரிய பையை முதுகில் மாட்டி இருப்பார்கள். எப்போதுமே பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பார்கள். ஆன்லைனில் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை உங்கள் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யும் இவர்களைக் கடக்காமல் மாநகரங்களில் யாராலும் வீடு சென்று விட முடியாது.  

இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டெலிவரி பாய்ஸ் இருக்கிறார்கள். வரும் ஆண்டுகளில் இந்தத் துறையில் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்கிறார்கள் வல்லுநர்கள். பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே இருக்கும் இந்தத் துறையில் 18 -28 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் பணி புரிகிறார்கள். மாத வருமானம் 10000 முதல் 15000 வரை அந்தந்த நகரத்துக்கு ஏற்றது போல் கிடைக்கலாம். பெட்ரோல் கம்பெனி தந்தாலும், மோட்டார் சைக்கிள் சொந்தமாக இருந்தால்தான் வேலைக்கே சேர முடியும். அதற்கான பரமாரிப்புச் செலவையெல்லாம் அந்த 10000 ரூபாய் சம்பளத்தில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ESI, PF போன்ற அடிப்படை நலன்களை நிறுவனங்கள் பார்த்துக் கொள்கின்றன. ஆனால், இவை தாண்டி இன்ஷூரன்ஸும் தர வேண்டும் எனக் கேட்கிறார்கள் டெலிவரி பாய்ஸ். இது பற்றிச் சென்னையைச் சேர்ந்த ரமேஷிடம் பேசினேன். 

“நிறையப் பொருள் டெலிவரி பண்ணாதான் டார்கெட் அச்சீவ் பண்ன முடியுங்க. அத தாண்டினாதான் இன்சென்டிவ் கிடைக்கும். பேக் சைஸ் பெருசு. போற வேகமும் கொஞ்சம் அதிகமாதான் இருக்கும். இந்தச் சைஸ் பையோட நம்ம ஊரு டிராஃபிக்ல போறது ஈசியான விஷயமா சொல்லுங்க. அதனால் விபத்து நடக்கச் சான்ஸ் இருக்கு. கைல இருக்கிற பொருட்கள் மற்றும் பணம் எப்பவும் ஆபத்துதான். அதுக்காகத்தான் இன்ஷூரன்ஸ் வேணும்னு கேட்கிறோம்” 

தினமும் காலை 7 மணி அளவில் குடோனுக்கு வந்து விடுகிறார்கள். டெலிவரி செய்ய வேண்டிய பொருட்களின் லிஸ்ட் வைத்து ஒரு ரூட் மேப் போடுகிறார்கள். பின், எந்த ரூட்டுக்கு யார் என்பதை முடிவு செய்து அவர்கள் இடத்தில் பொருட்களும், டெலிவரி சலானும் ஒப்படைக்கப்படுகின்றன. அங்கிருந்து கிளம்பி 80 முதல் 100கி.மீ வரை பயணிக்கிறார்கள். குறைந்தது 30 வாடிக்கையாளர்களையாவது சந்தித்துப் பொருட்களை டெலிவரி செய்ய வேண்டும் என்பது இந்தத் துறையின்பொது விதி. சில இடங்களில் பொருட்கள் திரும்பக் கொடுக்கப்படுவது உண்டு. அதையும் குடோனுக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். டெலிவரி செய்யப் போகும் இடத்தில் வாடிக்கையாளர் இல்லாமல் போனால், மீண்டும் அதைச் சுமந்து வந்தாக வேண்டும்.  

ஆன்லைன் ஷாப்பிங் முறையில் எல்லாமே வர்ச்சுவலாக நடப்பவை. வாடிக்கையாளர் யாரிடமும் பேசுவதோ, விசாரிப்பதோ இல்லை. ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டாலும் கால் சென்டருக்குத் தான் அழைக்க வேண்டும். இந்த மொத்த சுழற்சியில் வாடிக்கையாளர் சந்திப்பது டெலிவரி பாயை மட்டும்தான். தனது பாராட்டுகளையும், திட்டுகளையும் நேரில் சொல்ல கிடைத்த ஒரே ஆள் இவர்கள்தான். 

“சின்னச் சின்ன வெப்சைட்டுக்கும் நாங்க டெலிவரி செய்றது உண்டு. அப்படி  ஒரு நிறுவனத்துல கஸ்டமர் மொபைல் ஆர்டர் பண்ணியிருந்தாரு. டெலிவரி பண்ண பார்சல் உள்ள மொபைலே இல்ல. அவர் பிரிச்சு பாக்குறதுக்குள்ள நான் தெரு முனைக்குப் போயிட்டேன். என்னைத் துரத்திட்டு வந்தவரு வண்டியை தள்ளி என்னை அடிக்க வந்துட்டார். அவர் வீட்டுக்கு பக்கத்துல காலேஜ் ஸ்டூடண்ட் ஒருத்தர் இருந்தார். அவராலதான் தப்பிச்சேன். இல்லைன்னா அடி பிண்ணியிருப்பாங்க” சிரித்துக் கொண்டே சொல்கிறார் ரமேஷ். இது போன்ற பல எதிர்பாராத பிரச்னைகளையும் அவர்கள் சந்தித்தாக வேண்டும். 

பெயர் சொல்ல விரும்பாத இன்னொரு டெலிவரி பாயின் கதை இது. மதுரையில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஒருவருக்குப் பென் டிரைவ் டெலிவரி செய்திருக்கிறார். அடுத்த நாளே அது ரிப்பேர் ஆனது. அந்த ஏரியாவுக்கு டெலிவரிக்காகச் செல்லும்போதெல்லாம் பென் டிரைவை மாற்றித்தரச் சொல்லி சண்டையிட்டிருக்கிறார். அவர் தொல்லை தாங்காமலேயே சென்னைக்கு மாற்றலாகி வந்து விட்டார்.  

ஆன்லைன் வர்த்தகத்தின் அடிப்படைகள் இன்னும் பலருக்கு புரிவதில்லை.  டெலிவரி செய்யும் நபரின் மொபைல் எண்ணை நிறுவனத்தின் எண்ணாகவே பதிந்துக் கொள்கிறார்கள். அடுத்த ஆர்டர் வர தாமதமானல் அந்த டெலிவரி பாய்க்கு அழைத்து “ஏன் இன்னும் வரலை” எனக் கேட்பவர்களும் இருக்கிறார்கள். ரிட்டர்ன் பாலிசி இருப்பதால், அதற்கும் டெலிவரி செய்தவரையே அழைப்பதுண்டு.  

டெலிவரி வேலைக்குச் சேரும் அனைவருக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. லட்சக்கணக்கில் பணம் கையாளும் வேலை என்பதால், அது பற்றிய பயிற்சிகள் உண்டு. அடிப்படை ஆங்கிலம் படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அந்தந்த மாநில மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்பது பற்றியும் பயிற்சிகள் கொடுக்கிறார்கள். ஆனாலும், டிராஃபிக் நெருக்கடி நிறைந்த சாலையில் அந்த மெகா சைஸ் பையைக் கொண்டு செல்ல எந்தப் பயிற்சிகளும் உதவுவதில்லை. முதுகு வலி நிச்சயம் எனக் கவலையாகச் சொல்கிறார்கள் டெலிவரி பாய்ஸ்.  

சாதாரணமாக, ஒருவர் தன் உடல் எடையில் 15 முதல் 20 சதவிகித எடையைதான் முதுகில் சுமக்கலாம். அதாவது, 80 கிலோ எடையுள்ளவர் அதிகப்பட்சமாக 20 கிலோ எடையைச் சுமக்கலாம். அதையும் நாள் முழுவதும் சுமந்து கொண்டே இருப்பது சிக்கல்தான். அந்த அளவிற்கு  எடையைச் சுமக்கும்போது முதுகுத்தண்டு பாதிக்கப்படுகிறது.  

ரமேஷிடம் பைகளின் எடை பற்றிக் கேட்ட போது “பெரிய கம்பெனிங்க 15ல இருந்து 20 கிலோ எடை தருவாங்க. சின்னக் கம்பெனின்னா 25 கிலோ. நிறையச் சின்னப் பசங்கதான் வேலை செய்றாங்க. அதனால முதுகு வலி தெரியுறதில்லை. ஆனா, எதிர்காலத்துல வலிக்கும்னு பயமுறுத்துறாங்க. எனக்கு முதுகு மட்டுமில்ல.. தினமும் நைட்டு உடம்பு முழுசுமே வலிக்கும்” என்கிறார்.  

இந்தத் தொழிலில்  கரியர் வளர்ச்சிக்குப் பெரிதாக வாய்ப்பில்லை. 10 வருட அனுபவம் இருந்தாலும் டெலிவரி பாயாகவோ, அல்லது டெலிவரி கோ-ஆர்டினேட்டராகவோதான் இருக்க முடியும். 50 முதல் 100 டெலிவரி பாய்களுக்கு ஒரு கோ-ஆர்டினேட்டர் இருப்பார். சினிமா, காதல், ஊரில் சண்டை எனப் பல்வேறு காரணங்களுக்காகச் சென்னைக்கு வருபவர்களுக்கு இந்த வேலை உதவலாம். தற்காலிகமாகப் பணம் கொடுக்கும் வேலையாக இதைப் பெரும்பாலோனோர் பார்க்கிறார்கள். ஆனால், தினம் 12 மணி நேரம் வேலை பார்க்காமல் இதில் சர்வைவ் செய்வது எளிதான காரியம் அல்ல. எனவே, இந்த வேலையிலே வாழ்க்கையைத் தொலைத்து விடும் வாய்ப்புகள் உண்டு. ஆண்டுதோறும் கிடைக்கும் சம்பள உயர்வும் இங்கே சாத்தியமில்லை. பழைய ஆட்களை எடுத்துவிட்டு புதிய ஆட்களைக் குறைந்த சம்பளத்துக்குச் சேர்த்துக் கொள்வார்கள். சென்னை போன்ற மாநகரத்துக்குத் தினமும் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் குடிபெயரும்போது ஆட்கள் கிடைப்பதில் சிக்கலே இருப்பதில்லை. 

புதுப் பொருட்கள் என்பது எல்லோருக்குமே மகிழ்ச்சியைக் கொடுக்கும் விஷயம் தான். நமக்காக அதைக் கொண்டு வரும் இந்த நண்பர்கள் நம்மிடம் எதையும் கேட்பதில்லை. எப்போதாவது குடிக்கக் கொஞ்சம் தண்ணீர், எப்போதும் முகத்தில் சிறு புன்னகை. அவ்வளவுதான்.  

-கார்க்கிபவா

ஓவியம்: ஹாசிப்கான்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்