வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம்: கனவு கனவாகவே போய்விடுமோ?

கனவு

கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் வரவு வைப்பேன் என்று சபதமிட்டார் மோடி. இது  அவரது கனவும் கூட. அதற்காக நான் எந்த எல்லைக்கும் போவேன் என்றவர் அதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரமாக இறங்கினார்.

அவர் எடுத்த டிமானிட்டைசேஷன் நடவடிக்கையால் இதுவரை 8.45 லட்சம் கோடி டெபாசிட் ஆகியுள்ளது. ஏற்கெனவே ரிசர்வ் வங்கியிடம் 4.06 லட்சம் கோடி இருந்தது. மீதமிருக்கும் 2.5 லட்சம் கோடி டிசம்பர் 30-க்குள் டெபாசிட் செய்யப்படலாம். மொத்தப் பணமும் வங்கிக்கு வந்துவிட்டது. ஆனால் இவற்றில் எது கறுப்புப் பணம் என்று எப்படி கண்டுபிடிக்கப் போகிறார்கள்.  

ஜன் தன் யோஜனா முதல் டிமானிட்டைசேஷன் வரை!

அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் ஜன் தன் யோஜனா, தானாக முன்வந்து வருமானம் அறிவிக்கும் பொதுமன்னிப்பு திட்டம், புதிய பினாமி தடைச் சட்டம், 500 1000 செல்லாது என்ற டிமானிட்டைசேஷன் நடவடிக்கை, தங்கம் வைத்திருப்பதன் மீதான கட்டுப்பாடுகள் என அதிரடியாக இறங்கிக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ரிசர்வ் வங்கியின் கணக்குப் படி செல்லாமல் ஆக்கிய 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ. 15.44 லட்சம் கோடி. இதில் 4.06 லட்சம் கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியின் கையில் உள்ளது. மீதமுள்ள 11.38 லட்சம் கோடி வங்கிகளிலும், மக்களிடமும் என புழக்கத்தில் இருந்தன. இவையல்லாமல் புழக்கத்தில் கணிசமான கள்ள நோட்டுகளும் இருந்தன.

20 நாளில் ரூ. 8.45 லட்சம் கோடி டெபாசிட்!

லட்சம்

மோடி அரசின் அதிரடி டிமானிட்டைசேஷன் நடவடிக்கையைத் தொடர்ந்து மொத்த கறுப்புப் பணமும் வெளியே வந்திருக்கிறது. நவம்பர் 28-ம் தேதி நிலவரப்படி, டிமானிட்டைசேஷன் நடவடிக்கை எடுக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு 20 நாட்களில் வங்கியில் செய்யப்பட்டுள்ள மொத்த டெபாசிட் மதிப்பு  ரூ. 8.45 லட்சம் கோடி.

பல கணிப்புகளின் படி 3 முதல் 5 லட்சம் கோடி வரை மட்டுமே டெபாசிட் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் 8.45 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டது பலரையும் பெரும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கி உள்ளது.

மேலும் பணத்தை டெபாசிட் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 30 வரை இருக்கிறது. இன்னும் ஒரு மாதம். இந்த இரு மாதத்தில் மீதமிருக்கும் ரூ. 2.93 லட்சம் கோடியில் பெரும்பகுதி டெபாசிட் செய்யப்படுவதற் வாய்ப்புள்ளது.

வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம்?

மொத்தப் பணமும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு விட்ட பிறகு அதில் எவ்வளவு நல்ல பணம், எவ்வளவு கறுப்புப் பணம் என்பதைக் கண்டறிந்து அவற்றிற்கு வரியும், அபராதமும் விதிக்கும் நடவடிக்கைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இறங்குவார்கள். அதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயைக் கொண்டு மோடி கூறியது போல் நமது வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படலாம்.

ஆனால் வங்கிக் கணக்குகளில் ஒன்றுக்கு ரூ. 15 லட்சம் வரவு வைப்பதாக இருந்தால் அவருக்கு மொத்தம் ரூ. 1,950 லட்சம் கோடி தேவை. ஏனெனில் இந்தியாவில் மொத்தம் 143.98 கோடி வங்கிக் கணக்குகள் உள்ளன.

டெபாசிட் செய்யப்படும் (ரூ. 8.45 லட்சம் கோடி + 2.93 லட்சம் கோடி=ரூ. 11.38 லட்சம் கோடி) மொத்த பணமும் கறுப்புப் பணம் என்று எடுத்துக்கொண்டால்கூட வரி(25%), அபராதம்(200%) எல்லாம் சேர்த்தால் (2.845 லட்சம் கோடி + 5.69 லட்சம் கோடி) ரூ. 8.535 லட்சம் கோடி தான் வருகிறது. இதை வைத்து ஒரு வங்கிக் கணக்குக்கு தோராயமாக ரூ. 5900 வரவு வைக்கலாம்.

மோடி சொன்னபடி ரூ. 15 லட்சம் ஒரு வங்கிக் கணக்கு வரவு வைக்க வேண்டுமெனில், அவர் பதுக்கப்பட்ட தங்கத்தையும், சொத்துக்களையும், ஸ்விஸ் வங்கி டெபாசிட்டையும், பனாமா பேப்பர்ஸ் ஊழலையும் வெளிக்கொண்டுவந்தால் மட்டுமே முடியும்.

அதையெல்லாம் வெளிக்கொண்டு வருவாரா மோடி? ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வருமா?

- ஜெ.சரவணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!