வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (04/12/2016)

கடைசி தொடர்பு:11:46 (04/12/2016)

தேர்தல் சீர்திருத்தங்களுக்கு பா.ம.க. வரவேற்பு! 

தேர்தல் களத்தை தூய்மைப்படுத்துவதற்கான சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் தேர்தலை ரத்து செய்யும் வகையில் சட்டத்திருத்தம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 47 தேர்தல் சீர்திருத்தங்களை மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருப்பதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்திருத்திருக்கிறார். தேர்தல் களத்தை தூய்மைப்படுத்தும் நோக்கத்துடன் கூடிய இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.

தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான 47 பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பியிருப்பதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதாகவும் தேர்தல் ஆணையம் கூறியிருப்பது நம்பிக்கையளிக்கிறது. இந்தியாவில் தேர்தல் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே பா.ம.க. போராடி வருகிறது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். எனது நிலைப்பாட்டை அவர்கள் ஆதரித்தனர். அத்துடன், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது தான் தமது நிலைப்பாடு என்றும் பிரதமர் கூறினார்.

தேர்தல் சீர்திருத்தங்களுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவை திரட்டும் நோக்குடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசியுள்ளேன். மற்ற தலைவர்களையும் விரைவில் சந்தித்து பேசவுள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இதுதொடர்பாக விரிவான கடிதம் விரைவில் எழுதுவதற்கும் திட்டமிட்டிருக்கிறேன்.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிலும் நான் வலியுறுத்தியுள்ளேன். இனிவரும் நாட்களிலும், தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் படி நிலைக்குழு மூலம் மத்திய அரசை வலியுறுத்துவேன். அதேபோல், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான 47 பரிந்துரைகளையும் விரைந்து செயல்படுத்தும்படி அரசை தேர்தல் ஆணையம் வலியுறுத்த வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க