ஓடி ஒளிந்த மல்லையாவை வெளிக்கொண்டு வரும் ஹேக்கர்கள்!

மல்லையா

இந்திய வங்கிகளிடம் கடன் வாங்கி, அவற்றில் ரூ. 9 ஆயிரம் கோடியைத் திருப்பித் தராமல் ஓடி ஒளிந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அதிலேயே அவர் குறித்த ரகசிய தகவல்களை வெளியிடத் தொடங்கி இருக்கிறார்கள் ஹேக்கர்கள்.

லண்டனில் செட்டில்!

ரூ. 9 ஆயிரம் கோடி வாராக் கடனை இந்திய வங்கிகளுக்கு சுமையாக்கி விட்டு, ஜாலியாக லண்டன் தப்பித்து ஓடிய விஜய் மல்லையாவைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டுவதாகத் தெரியவில்லை. இதற்கிடையில் பாரத ஸ்டேட் வங்கி வாராக் கடன் வைத்துள்ளோர் பட்டியலில் இருந்து விஜய் மல்லையா உள்ளிட்ட சிலரது பெயர்களை நீக்கம் செய்தது. வாராக் கடன்களைப் பெற வங்கி சார்பில் பல நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், ரூ. 7,016 கோடி வாராக்கடன்-ஐ, Advance Under Collection Account (AUCA) என்ற திட்டத்தின்படி, எஸ்பிஐ வங்கி ரத்து செய்துள்ளது என்று செய்தி வெளியிட்டு இருந்தது. இதனால், எஸ்.பி.ஐ வங்கி வேண்டுமென்றே மல்லையா உள்ளிட்டோரை தப்பிக்க வைத்து விட்டதாக மக்கள் குமுறத் தொடங்கினார்கள். லண்டனில் இருப்பவர், தொடர்ந்து தனது நிறுவனங்களின் வேலைகளை அங்கிருந்தபடியே செய்து கொண்டுதான் இருக்கிறார்.

விஜய் மல்லையாவின் கடனை எஸ்பிஐ வங்கி ரத்து செய்ததை கேள்விப்பட்ட பாபுராவ், எஸ்பிஐ வங்கிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ''நான் எனது மகனின் உடல்நிலை சரியில்லாமல் போனதற்காக கடன் வாங்கினேன். மல்லையாவின் கடனை ரத்து செய்யும் போது எனது கடனை ரத்து செய்யக் கூடாதா? எனக் கேள்வி கேட்டிருந்தார்.

யார் அந்த லெஜியன்?

இந்த நிலையில், அரசு அவரை இங்கிலாந்திலிருந்து மீட்டு வருமா வராதா என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்கின்றனர். அது நடப்பதாக தெரியவில்லை. ஆனால் அவரை வெளிக்கொண்டுவர ஹேக்கர்கள் முடிவு செய்துவிட்டார்கள். அவரது ட்விட்டர் அக்கவுண்டை, லெஜியன் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் ஹேக்கர்கள், மல்லையாவின் மின்னஞ்சல் பாஸ்வேர்டுகள், வலைதளப் பக்கங்களின் பாஸ்வேர்டுகள், மிக முக்கியமான ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் என அனைத்துத் தகவல்களையும் ஹேக் செய்து சேகரித்து வைத்திருப்பதாகவும், அவற்றை ஒவ்வொன்றாக, ஒவ்வொரு நாளும் ரிலீஸ் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர். அதுவும் அவருடைய அக்கவுண்ட் மூலமாகவே வெளியிடுகின்றனர். தற்போது அவருடைய பல மின்னஞ்சல்களின் பாஸ்வேர்டுகள் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளன. 

லெஜியன் (Legion) என்றால் ஆயிரக்கணக்கானோர் என்பது பொருள். ஹேக்கர்கள் தங்களை லெஜியன் என்று குறிப்பிடும் அதே நேரத்தில் 'எங்களிடம் வாலாட்டாதீர்கள்' என்றும் எச்சரித்துள்ளனர்.

மல்லையா கண்டுகொள்ளவில்லை!

இந்த எச்சரிக்கையைக் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை மல்லையா. அவர்களுக்கு கூலாக பதில் அளித்துள்ளார். "லெஜியன் என்ற பெயரில் யாரோ அடையாளம் தெரியாதவர் என்னுடைய மின்னஞ்சலை ஹேக் செய்துள்ளனர். என்னை 'பிளாக்மெயில்' செய்கின்றனர். வாட் எ ஜோக்" என்று மல்லையா பதிவிட்டுள்ளார். அவர் அரசு நடவடிக்கைகளையே ஜோக் என்று தான் நினைத்துக் கொண்டு ஜாலியாக இருக்கிறார். எஸ்பிஐ வங்கியும் அரசும் விஜய் மல்லையாவிடம் இருந்து கடனை வசூலிக்காமல் விட மாட்டோம் என சூளுரைத்தனர்.  ”நீங்கள் எதாவது பேசிட்டு போங்க... கடன் கட்டுவதை பற்றி நான்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று மல்லையா லண்டனில் கூறி இருக்கிறார். 

இதெல்லாம் அவருக்கு எந்த மூலை? ஆனால் விஜய் மல்லையாவை வெளிக்கொண்டு வருவதில் அரசைக்காட்டிலும் மூன்றாம் நபர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். என்ன சொல்வது? இப்படி எதாவது வெளிவந்து அவரை வெளிக்கொண்டு வந்தால் நல்லதுதானே.

ஆனால், இந்த நாட்டில் விவசாயிகளாக இருப்பதுதான் கடினம். விஜய் மல்லையாக்களாக இருப்பது மிக மிக எளிது! 

- ஜெ.சரவணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!