இப்படித்தான் செயல்பாட்டிற்கு வந்தது செல்லாக்காசு அறிவிப்பு! #OneMonthofDemonetisation | How PM Modi kept the currency ban move a secret?

வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (10/12/2016)

கடைசி தொடர்பு:16:54 (10/12/2016)

இப்படித்தான் செயல்பாட்டிற்கு வந்தது செல்லாக்காசு அறிவிப்பு! #OneMonthofDemonetisation

ந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, 86 சதவீதம் அளவுக்கு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று, மிக முக்கியமான, கடுமையான முடிவை பிரதமர் நரேந்திர மோடி எப்படி எடுத்தார்? 'டீமானிட்டைசேஷன்' அறிவிப்பை திட்டமிட்டு எவ்வாறு செயல்படுத்தினார்? அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார்?  போன்ற தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நாடு முழுவதும் நிலவிய நிழல் பொருளாதாரத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், கறுப்புப் பண புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், தீவிரவாதிகள் மூலம் வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதைத் தடுக்கவும், குறிப்பிடத்தக்க முடிவான டீமானிட்டைசேஷன் முடிவை நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு 8.30 மணியளவில் பிரதமர் மோடி அறிவித்தார். அன்றிரவு முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், மக்கள் தற்போதுவரை, ஏ.டி.எம். மையங்களிலும், வங்கி வாசல்களிலும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி எவ்விதம் செயல்படுத்தினார்? என்பது பற்றிய மிக முக்கியமான தகவல்கள் தெரியவந்துள்ளன..

இந்திய நிதியமைச்சக வட்டாரத்தில் மிகப் பிரபலமாக அறியப்படாத, அதே நேரத்தில் நேர்மையான உயர் அதிகாரிகள் 6 பேரை, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹஸ்முக் அதியா தலைமையில் டீமானிட்டைசேஷன் திட்டத்திற்காக முதலில் மோடி தேர்வு செய்துள்ளார். அந்த 6 பேருக்கும், பழைய ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் மிகவும் முக்கியமான, அதேநேரத்தில் ரகசியத்தை பாதுகாக்க வேண்டிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு பிரதமர் மோடி பணித்துள்ளார். இப்பணிகள் அனைத்தும், மோடி பிரதமராகப் பதவியேற்றதுமே தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

இந்த அதிகாரிகளுக்கு உதவியாக நம்பகத்தன்மையுடன் கூடிய இளம் அதிகாரிகளைக் கொண்ட குழு ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளது. இதில் வேடிக்கையான அம்சம் 
என்னவென்றால், டீமானிட்டைசேஷன் குழுவினர், புதுடெல்லியில் உள்ள மோடியின் வீட்டில் உள்ள 2 அறைகளில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இயங்கி வந்ததுதான். அவர்களின் பணி என்னவென்பது, மோடியில் பாதுகாவலர்களுக்கே கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.

ரூபாய் நோட்டு ஒழிப்பு தொடர்பான தகவல் முன்கூட்டியே தெரிய வந்தால், கறுப்புப் பண முதலைகள் தங்களது பணத்தை, நிலம் உள்ளிட்ட இதர சொத்துகளில் முதலீடு செய்துவிடக்கூடும் என்பதால், மிகவும் ரகசியமாக வைத்து, ஒரேநாள் இரவுக்குள் செயல்படுத்துவது என்ற முடிவெடுக்கப்பட்டது.

டீமானிட்டைசேஷன் அறிவிப்பு என்பது மிகவும் முக்கியமான, அதே நேரத்தில் ரிஸ்க் அதிகம் என்பதால், அதனை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் தீவிரமான முயற்சிகளை எடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் பல்லாயிரக்கணக்கில் வங்கிகளில் காத்திருக்கும் நிலை ஏற்படும் என்றும், வங்களில் முதலீடு அதிகரித்து, அவற்றில் இருந்து அதிகளவிலான வரி வருவாய் அரசுக்குக் கிடைக்கும் என்று பெரும்பாலான வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும் புதிய கரன்சி அச்சடிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக, புதிய நோட்டுகள் புழக்கத்தில் வருவதற்கு சில மாதங்கள் பிடிக்கும் என்பதையும், உயர் அதிகாரிகள் ஓரளவு உணர்ந்தே இருந்தனர். 

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலின் முடிவுகள், மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை தொடர்வாரா? என்பதை தீர்மானிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

நீண்டகால பயன்களுக்காக மிகக் குறுகிய காலம் கஷ்டத்தை அனுபவிக்க நேர்ந்தால் பரவாயில்லை என்பதே பிரதமர் மோடியின் எண்ணமாக இருந்துள்ளது. ரூபாய் நோட்டுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் முன், அனைத்து ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டதாகவும், தனது நடவடிக்கை தோல்வியடைந்தால் தன் மீது குறைகூறலாம் என்று நவம்பர் 8-ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்திலேயே பிரதமர் அறிவித்தார் என அவருக்கு நெருக்கமான 3 மத்திய அமைச்சர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஹஸ்முக் அதியாஅதியாவைப் பொருத்தவரை, நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரியாவார். அவரது தலைமையிலான குழுவினர் செயல்படுத்தலாம் என தெரிவித்ததன் அடிப்படையிலேயே மோடி இத்தகைய உறுதியான, மிகத் திடமான முடிவை அறிவித்தார்.

மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, 2003 முதல் 2006-ம் ஆண்டுவரை, அவரது முதன்மைச் செயலாளராக பதவி வகித்தவர் அதியா. மேலும் இவர், மோடிக்கு யோகாவை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து அவர் யோகா பயிற்சி செய்வதற்கு வழிவகுத்தவர் என்பது கூடுதல் தகவல்.

2015-ம் ஆண்டு மத்திய நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு, நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் கட்டுப்பாட்டில் அவர் செயல்பட்ட போதிலும், அதியாவைப் பொருத்தவரை, மோடியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மோடியைச் சந்திக்கும் போதெல்லாம், குஜராத்தி மொழியில் இருவரும் நாட்டு நடப்புகள் குறித்து உரையாடிக் கொள்வார்களாம்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், ஒவ்வொரு இந்தியனும் வங்கியில் தனது பழைய ரூபாய் நோட்டுக்குப் பதிலாக புதிய நோட்டுகளைப் பெறும் வகையிலான மிகப்பெரிய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை புரட்சிகரமான முறையில் நிறைவேற்றியதன் பின்னணியில் சிறுதுளி அளவுக்கும் ரகசியம் வெளிவராமல் பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் 3-வது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியாவில் 15.4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, அதாவது 86 சதவீதம் அளவிலான 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என்பது மிகவும் சவால் நிறைந்தது. இதனை, தனக்கு நெருக்கமான உயர் அதிகாரிகள் குழுவைக் கொண்டு, ரகசியத்தைப் பாதுகாத்து வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார் மோடி.

இந்த அதிரடியான நடவடிக்கையை பொருளாதார நிபுணர்கள் பலரும் வரவேற்றுப் பாராட்டியுள்ளனர். "ரூபாய் ஒழிப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் சிறிதுகாலம் சங்கடங்களை எதிர்கொண்டாலும், நீண்டகால பலனுக்காக கறுப்புப் பண ஒழிப்பில் அனைவரும் முதன்மை வீரர்களாக செயல்படுவோம்" என்று மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

ரூபாய் நோட்டு ஒழிப்பு தொடர்பான பிரதமரின் அறிவிப்பு வெளியான உடன், "அரசின் கறுப்புப் பணத்திற்கு எதிரான நடவடிகை, உறுதியான, மிகவும் தைரியமான நடவடிக்கை" என்று அதியா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். 

கறுப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கையை ஒரு ஆண்டுக்கு முன்பே யோசித்து திட்டமிட்ட போதிலும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தையும் மீட்க, தீவிரமாக மோடி யோசித்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் புதிய கரன்சி அச்சடிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும், அழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகள் முழுவதுமாக அச்சடிக்க சுமார் 400 நாட்களாகி விடும் என்று தெரிய வந்துள்ளது. என்றாலும் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்றும், அதற்கான வடிவமைப்புப் பணிகள் நடைபெறுவதாகவும், ரிசர்வ் வங்கி கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்தான், 2,000 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், அதன் டிசைன் குறித்தும் சமூக வலைதளங்களில் தகவல் பரவத் தொடங்கியது. இதனால், நவம்பர் 18-ம் தேதிவாக்கிலேயே டீமானிட்டைசேஷன் அறிவிப்பை வெளியிடத் திட்டமிட்டிருந்த மோடி, முன்கூட்டியே அதாவது நவம்பர் 8-ம் தேதியே அறிவித்தார் என்றும் அதிகாரிகளை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

-சி.வெங்கட சேது

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்