வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (19/12/2016)

கடைசி தொடர்பு:13:27 (19/12/2016)

இந்தியாவில் இப்படியும் ஒரு எம்.பி.! நாடாளுமன்றம் முடங்கும் நாட்களில் சம்பளம் வாங்க மாட்டார்!

நாடாளுமன்றம்

பரிசுப் பொருட்களை லாரியில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு செல்லும் ஜனாதிபதியை பார்த்தாச்சு. நாடாளுமன்றத்தில் உறங்கும் அமைச்சர்களை பார்த்தாச்சு. சட்டமன்றத்தில் ஆபாச படம் பார்க்கும் எம்.எல்.ஏக்களை பார்த்தாச்சு. நாடாளுமன்றத்தை முடக்குவதையே லட்சியமாகக் கொண்ட எம்.பி-க்களையும் பார்த்தாச்சு...!

ஆனால், இப்போதுதான் நாடாளுமன்றம் முடங்கினால், அந்த நாட்களுக்கு சம்பளமே வாங்காத எம்.பி-யைப் பற்றி கேள்விப்படுகிறோம். அந்த எம்.பி-யும் கடந்த 16 ஆண்டுகளாக நாடாளுமன்றத்துக்கு வந்து போய் கொண்டிருக்கிறார். ஆனால்விஷயம் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது.

ஒடிஷாவை சேர்ந்தவர் பையந்த் ஜே. பாண்டா (வயது 52). பிஜு ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த இவர், கேந்திரபாரா நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன், கடந்த 2000-ம்  முதல் 2009 ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி-யாகவும் இருந்துள்ளார். இன்ஜீனியரிங் படிப்புடன் மேலாண்மை கல்வியும் படித்தவர். எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் மக்களுக்காக உழைப்பது மட்டும்தான் இவரது பணியே. மக்கள் நினைத்தால் இரவு பகல் என எந்த நேரத்திலும் பையந்த் ஜே. பாண்டா வீட்டு கதவைத் தட்டலாம். அந்தளவுக்கு எளிமையான, மக்கள் அணுகக் கூடிய மனிதராக இருந்திருக்கிறார். கேந்திரபாரா தொகுதி மக்கள், பையந்த் ஜே. பாண்டாவை தொடர்ந்து இரு முறை எம்.பியாக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த பையந்ந் ஜே. பாண்டாதான் நாடாளுமன்றம் நடக்காமல் முடங்கும் காலத்தில் சம்பளத்தை அரசுக்கு திருப்பித் தரும் எம்.பி.

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அண்மையில் முடிவடைந்தது. குளிர்காலக் கூட்டத் தொடரின் பெரும்பாலான நாட்களில் நாடாளுமன்றம் நடைபெறவில்லை.  உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு காரணமாக எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடங்கிப் போனது. மக்களின் வரிப்பணத்தில் ஒரு நாள் நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு பல கோடி ரூபாய் செலவாகிறது. குளிர் காலக் கூட்டத் தொடரில் மக்களவை 18 மணி நேரமே நடந்திருக்கிறது. 92 மணி நேரம் முடங்கியிருக்கிறது. ராஜ்யசபா 22 மணி நேரம் நடந்திருக்கிறது. 86 மணி நேரம் முடங்கி போனது.

மக்கள் வரிப்பணம் வீணாவதைப் பொறுக்காத பையந்த் ஜே. பாண்டா,  அந்த நாட்களுக்கான சம்பளத்தை அரசுக்கே திருப்பி செலுத்தி விடுகிறார். பல ஆண்டுகளாக இவர் இதை செய்து வருகிறார். இது குறித்து பையந்த். ஜே. பாண்டா,” மக்களின் வரிப்பணத்தில் நாடாளுமன்றம் நடைபெறுகிறது. அதன் மதிப்பை நான் அறிந்திருக்கிறேன். அதனால் நாடாளுமன்றம் முடங்கும் சமயத்தில், எனது சம்பளத்தின் ஒரு பகுதியை அரசுக்கே திருப்பி அளித்து விடுகிறேன். மேலும் அந்த நாட்களில் நான் படிகளையும் பெறுவதில்லை. பல ஆண்டுகளாக இதனை செய்து வருகிறேன். மக்களின் பணம் வீணாவதற்கு முன், நான் சம்பளத்தை திருப்பித் தருவது எல்லாம் ஒரு விஷயமே அல்ல. எம்.பிக்களாக இருந்து கொண்டு எவ்வளவோ சலுகைகளை பெறுகிறோம். ஆனால் நாம் செய்ய வேண்டிய பணியை முறையாக செய்வதில்லை. என் மனசாட்சி சொல்கிறபடி நான் நடக்கிறேன்'' என்கிறார்.

கடந்த 16 ஆண்டுகளாக பையந்த் ஜே. பாண்டா எம்.பியாக இருக்கிறார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் முடிந்த வரை பங்கேற்று விடுவார். தவிர்க்க முடியாத காரணங்கள் அல்லது தொகுதி மக்களுக்கான பணிகளுக்காக மட்டுமே விடுப்பு எடுப்பார். இத்தனை ஆண்டுகால தனது எம்.பி வாழ்க்கையில் ஒருநாள் கூட பையந்த் ஜே. பாண்டா, நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதில்லை. 

-எம்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்