வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (26/12/2016)

கடைசி தொடர்பு:18:06 (26/12/2016)

நினைவில் நின்ற பேரலைகள்... - சுனாமி அனுபவங்களைப் பகிரும் எழுத்தாளர்கள்!

சுனாமி

ந்தியப் பெருங்கடல்! உலகின் மொத்த நீர்பரப்பில் 20% இந்தியப் பெருங்கடலினுடையது. இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, மாலத்தீவு, இலங்கை, மலேசியா என தெற்காசிய நாடுகளைப் மிகப் பெரும்பாலும் சூழ்ந்திருப்பது இந்தியப் பெருங்கடல்தான். கடலின் அடிமட்டத்தில் சிறிது அசைவு ஏற்பட்டாலும் நீரானது, இந்த ஆசியப்பகுதி நாடுகளுக்குள் புகுந்து விடும். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு, 26 டிசம்பர் 2004 அன்று நிகழ்ந்தது அதுதான்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் அருகே, கடலின் கீழ்மட்டத்தில் 9.3 ரிக்டர் அளவுக்கு பதிவான நிலநடுக்கம், மேல்மட்டத்தில் மிகப்பெரும் சுனாமி அலைகளை எழுப்பியது. நம் தலைமுறை மனிதர்கள் யாரும் வரலாற்றில் அப்படியொரு நிகழ்வை அதுவரைப் பார்த்ததில்லை. தமிழகத்தில், குமரியில் இருக்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் உச்சி வரை அந்த பேரலைகள் எழுந்ததாக அதனைக் கண்கூடாகப் பார்த்தவர்கள் இன்றளவும் கண்கள் விரிய ஒரு பயத்துடனேயே விவரிக்கிறார்கள். சென்னை மெரினா கடற்கரையில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, காலை 'வாக்கிங்' சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த அலையுடனே அடித்துச் செல்லப்பட்டார்கள். நாகை, கடலூர் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்கள் வீடுகளையும் குழந்தைகளையும் இழந்தார்கள். ஒரு சில வீடுகளில் இருந்த மொத்த உறுப்பினர்களுமே அந்த அலைகளுக்கு இரையான சோகமும் நடந்தேறியது. அமைதிக்குப் பெயர்போன அலைகள் 'ஆழிப்பேரலை' என தனது மற்றொரு பக்கத்தையும் காட்டிச் சென்ற தினத்தில் தனக்கு நிகழ்ந்த அனுபவங்களெனப் பகிர்ந்து கொள்கிறார்கள் இவர்கள்.

“சுனாமி வந்திருச்சாப்பா!” என்பாள் மகள்

“26 டிசம்பர் 2004. அப்போது நாங்கள் மாலத்தீவில் வசித்து வந்தோம். அன்று காலை 10 மணி வரை கடற்கரையில் உட்கார்ந்து விட்டு வீட்டுக்கு வந்தோம். எங்கள் வீட்டுக் கொல்லைப்புறம் கடல். வீட்டுக்கு வந்த பிறகு, ரோட்டில் எல்லோரும் ”கடல் வருது ஓடுங்க!” என்று உரக்கக் கத்தியபடியே சென்றார்கள். கடல் எப்படி வரும் என்று யோசிப்பதற்குள் கடல் நீர், எங்களைச் சூழத் தொடங்கி இருந்தது. எனது மகளை உடனே தூக்கிக்கொண்டு போய் அங்கு இருப்பதிலேயே உயரமான சுவாராகப் பார்த்து அமர வைத்தேன். அதற்குள் எனது மனைவி நீரில் தத்தளித்தபடியே பாதி தூரம் வந்து விட்டிருந்தார். எங்களது பாஸ்போர்ட்டை மட்டும் எடுத்துக் கொண்டு தீவின் மையப் பகுதிக்கு விரைந்தோம். அங்கு எங்களைப் போலவே, பலநூறு பேர் கூடி இருந்தார்கள். யாருடைய போனும் வேலை செய்யவில்லை.

தீவு அலுவலகத்தில் உள்ள ரேடியோ போன் மட்டும் வேலை செய்தது. அதிலிருந்து தொடர்பு கொண்டதில் அனைத்து தீவுகளுமே பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. விமான நிலையமும் சேர்த்து பாதிக்கப்பட்டிருந்தது. எங்களால் அங்கிருந்து எங்கும் நகர்ந்திட முடியவில்லை. கடல் அலை உள்வாங்கியும் மேலெழுந்தும் என கால் மணி நேரம் வரை, எங்களை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. அனைத்தும் ஓய்ந்த பின், அதற்கடுத்த நாட்களில் சுனாமியால் முறிந்த மரங்களை அப்புறப்படுத்த தொடங்கியபோது, இடிபாடுகளில் சிக்கிக்கிடந்த பல பிணங்களை அகற்றி, ஆளற்ற தீவுகளுக்கு எடுத்துச் சென்று புதைத்தோம். அதற்கடுத்து வந்த நாட்களில் மாலத்தீவு மட்டுமில்லாமல் இந்தோனேசியா, இந்தியா என பல நாடுகளும் பாதிக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டோம். மாலத்தீவைச் சுற்றி இருந்த பவளப் பாறைகள் சுனாமியின் தாக்கத்தை கட்டுப்படுத்தி இருந்தது. சுனாமியின் தாக்கத்தில் நாங்கள் பிடிபட்டிருந்த அந்த பத்து நாட்களில் எனது மகளை அருகிலிருந்த ஒரு பள்ளியின் முதல் மாடியில்தான் படுக்க வைப்பேன். ‘சுனாமி வந்திருச்சாப்பா!’ என்று ஒருவித பயத்துடனேயே கேட்பாள். இன்றும் கூட, அதை அவ்வப்போது நினைவுபடுத்திப் பேசுவாள். நினைவுகளானாலும் அந்த நிமிடங்களைப் பற்றிய அச்சம் மட்டும் அப்படியே இருக்கிறது” என்கிறார் எழுத்தாளர் நக்கீரன்.

வேறு எந்த இடமும் எங்களைப் பேரலையிடமிருந்து காப்பாற்றமுடியாது

"எனது ‘ஆழி சூழ் உலகு’ புத்தகத்தின் அட்டைப் படமே அலை பொங்கி வருவது போல இருக்கும். எனக்கு ஒருநாள் இரவில் தோன்றிய கனவு அது. அது போலத்தான் சுனாமி அலையும், கடல் குமுறிக் கொந்தளித்துச் சீறியது. பாறைகளில் அறைந்து சிதறியது. சுனாமி வந்தபோது அதுதான் சுனாமியென்றே எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அனுபவமிக்க கடலோடிகளைக் கூப்பிட்டுக் கேட்டேன். ஜப்பானிய மொழியில், துறைமுகங்களைத் தாக்கும் பெரும் அலைகள் என்று பொருள் எனக் கூறினார்கள். துறைமுகத்துக்குச் சென்றேன். இரண்டு, மூன்று கப்பல்கள் மோதிக்கொண்டு நின்றன. துறைமுகத்தைச் சுற்றி சுவர் இருந்ததால் பெரும் அலைகள் எதுவும் தாக்கவில்லை. ஆனால் நீர்மட்டம் மூன்று அடிவரை உயர்ந்திருந்தது. துறைமுகத்தில் இருந்தவர்கள், அனைவரையும் உடனடியாக அப்புறப்படுத்தினேன். அங்கிருந்து இராயபுரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தால் நாங்கள் வசிக்கும் தெருவில் அனைவரும் சாலையில் நின்று கொண்டிருந்தார்கள். என் மனைவி குழந்தைகள் இருவரையும் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார். 'இராயபுரத்தை விட்டு வெளியேறி விடலாம்' என்றார்கள் அனைவரும். ஆனால், 'சுனாமியிடமிருந்து தப்பிக்க, அந்தப் பகுதியைவிட பாதுகாப்பான இடம் வேறுஎதுவுமில்லை. எல்லோரும் அங்கேயே இருப்போம்' என்றேன். அங்கேதான் இருந்தோம். அனைத்தும் ஒய்ந்து அடங்கியபின் மாலையில் சென்னையின் கடற்கரைப் பகுதியே கிழிந்திருந்தது. ஜப்பான் போன்ற நாடுகளில், சிறு தூறல் என்றாலும் இத்தனை மணிக்கு வரும் என சரியாகக் கணித்துச் சொல்ல, துல்லியமான தொழில்நுட்பம் உண்டு. அதுபோல நாமும் தொழில்நுட்ப அளவில் முன்னேற்றம் அடைந்தாலே, இப்படியான பேரழிவுகளை எதிர்காலத்தில் தற்காப்புடன் சந்திக்க முடியும். இயற்கையுடனான நமது தொலைந்த உறவை மீட்டெடுக்க வேண்டும்” என்கிறார் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்.

பேரலைகள் அன்று போல வேறென்றும் உயரம் கொள்ளவில்லை;

பார்த்த விழிகளுக்கோ அவை அன்றுபோல்தான் இருந்தன என்றுமே!

- ஐஷ்வர்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்