வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (30/12/2016)

கடைசி தொடர்பு:17:07 (30/12/2016)

டியர் மோடி... பலவாறாகப் புழங்கும் கறுப்புப் பணத்தை எப்படி, எப்போது ஒழிப்பீர்கள்!? 50DaysOfDemonetisation

கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொருட்டு, பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு செல்லாது என அறிவித்து 50 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டன. ஆனால் இதுமட்டுமே போதுமான நடவடிக்கை இல்லை என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. எப்படி?

modi, 50 Days of Demonetisation


பண மதிப்பு நீக்கத்தின் முக்கிய நோக்கமே கறுப்புப் பணத்தை ஒழிப்பது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினையடுத்து பணமில்லாப் பரிவர்த்தனை, டிஜிட்டல் இந்தியா என விளம்பரம் செய்து வருகிறார் பிரதமர். உண்மையில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்கத்தின் மூலம் எவ்வளவு கறுப்புப் பணம் இதுவரை பிடிபட்டுள்ளது, இந்தியர்கள் கையில் ரொக்கமாக எவ்வளவு கறுப்புப் பணம் உள்ளது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் புரியாத புதிராகவே உள்ளது. 

வெள்ளை அறிக்கை! 

பொதுவாகக் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதை ரொக்கமாகவே வைத்திருப்பதில்லை. கறுப்புப் பணத்தை தங்கத்திலும், ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்கின்றனர். வரி ஏய்ப்பு வசதிகள் உள்ள நாடுகளில் தங்களது கறுப்புப் பணத்தை மாற்றிவிடுகின்றனர். அங்கிருந்து மீண்டும் இந்தியாவுக்கு, அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் என்ற பெயரில் இந்திய பங்குச் சந்தைகளிலும், கடன் சந்தைகளிலும் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகி்ன்றன. இதுதான் இந்தியாவில் பெரும்பாலும் நடப்பதாகக் கூறப்படுகிறது. எனவே கறுப்புப்பணத்தின் ஒரே அடைக்கலம் ரொக்கம் மட்டுமில்லை.

கடந்த 2012 மே மாத நிலவரப்படி, நிதி அமைச்சகம் கறுப்புப் பணம் குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில், வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கைப்பற்றவை குறித்த தகவல்களைப் பார்ப்போம். 

கணக்கில் காட்டாத பணம்! 

வருமான வரித்துறை நடத்திய சோதனையில், கணக்கில் காட்டாத வருமானத்தில் ரொக்கத்தின் மதிப்பு மிகச்சிறிய அளவே ஆகும். உதாரணத்துக்கு 2011-12ம் நிதி ஆண்டை எடுத்துக்கொண்டோமேயானால், 9,289.43 கோடி ரூபாய் கணக்கில் காட்டாத வருமானத்தில், வெறும் 499.91 கோடி ரூபாய் மட்டுமே பணமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதி கறுப்புப் பணம் தங்க நகைகளாகவும், பிற சொத்துகளாகவுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமில்லை, 2006-07 முதல் 2011-12 வரையிலான ஆறு நிதி ஆண்டுகளில் 24,000 முறை வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது. இந்தச் சோதனைகளில், 40,426.47 கோடி ரூபாய் அளவுக்குக் கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால், இதில் வெறும் 4.9 சதவிகிதம் மட்டுமே ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த விகிதம் ஒரு சில நிதி ஆண்டுகளில் 3.7% முதல் 7.4% வரை வேறுபட்டுள்ளதே தவிர, பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. 

அதிகாரபூர்வமாக அறிவிப்பு! 

இந்தத் தகவல்கள் சொல்லும் உண்மை நிலவரம் என்ன? கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் கையில் ரொக்கமாக வைத்திருப்பதில்லை என்பதைத்தான் அடுத்த கேள்வி இந்தியாவில் கறுப்புப் பணம் மொத்தம் எவ்வளவு உள்ளது என்பதுதான்.

நிதி அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தேசிய பொது நிதி நிறுவனம் மற்றும் கொள்கை (NIPFP) மூலம் கறுப்புப் பணம் குறித்த ஆய்வு  1985ல் நடத்தப்பட்டது. அதில் 1975-76ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கறுப்புப் பணத்தின் அளவு 15 முதல் 18 சதவிகிதம் வரை இருக்கும் என்றும், 1983-84ல் 19 முதல் 21 சதவிகிதம் வரை இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக வங்கி கணக்கீடு! 

இதனையடுத்து, 1999 முதல் 2007-ம் ஆண்டு வரையிலான காலத்தில் கறுப்புப் பணம் குறித்த மதிப்பீட்டினை உலக வங்கி 2010ல் வெளியிட்டுள்ளது. உலக வங்கி மதிப்பீட்டின் படி, 1999ல் இந்தியாவில் கறுப்பு பணம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20.7 சதவிகிதமாக இருந்தது. இது 2007ல் 23.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்தப் புள்ளி விவரங்கள் மூலம் இந்தியாவில் கறுப்புப் பணம் ஐந்தில் ஒரு பங்கு உள்ளது என்ற முடிவுக்கு வரலாம். 

2015-16ம் நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 135.76 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில் ஒட்டுமொத்த கறுப்புப் பணம் 27.15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் ஒட்டுமொத்தக் கறுப்புப் பணத்தில், வருமான வரித்துறை நடத்திய சோதனையின் போது பணமாக கைப்பற்றப்பட்டது வெறும் 4.9 சதவிகிதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கணக்கீட்டின்படி, 27.15 லட்சம் கோடி ரூபாயில் 4.9 சதவிகிதம் எனில் 1.33 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே இந்தியாவில் கறுப்புப் பணம், பதுக்கல்காரர்களிடம் ரொக்கமாக உள்ளது. 

சாமானியனின் கேள்வி? 

இப்போது கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்களிடம் இருந்து வரி விகிப்பதன் மூலம் 50 சதவிகிதம் என்றளவிற்காவது பணத்தைக் கைப்பற்றும் பட்சத்தில் 66,000 கோடி ரூபாயை மட்டுமே அரசு கைப்பற்ற முடியும். அதுவும் சந்தேகம்தான். ஆனால், பண மதிப்பு நீக்கத்தின் பாதிப்பு இதைவிடப் பல மடங்கு அதிகம் என்கின்றனர். பணமதிப்பு நீக்கத்தையடுத்து பரிவர்த்தனை செலவு மட்டும் 1.28 லட்சம் கோடி ரூபாய்க்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஆக, இந்தப் புள்ளிவரங்களைப் பார்க்கும்போது பணமதிப்பு நீக்கம் உண்மையில் தேவையான நடவடிக்கையா என்ற கேள்வியே கேட்கத் தோன்றுகிறது. பண மதிப்பு நீக்கத்தின் மூலம் கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்க முடியுமே தவிர, கறுப்புப் பணத்தை முழுவதுமாக ஒழிக்க முடியாது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உண்மையில் கறுப்புப் பணத்தை ஒழிக்க, பண மதிப்பு நீக்கம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்றாலும், கறுப்புத் தங்கம், ரியல் எஸ்டேட், பாண்டுகள், பங்குகள் எனப் பல்வேறு வடிவங்களில் காணப்படும் கறுப்புப் பணத்தை ஒழிப்பது ஒன்றுதான் முழுமையான, ஆக்கபூர்வமான பொருளாதார நடவடிக்கையாக இருக்கும்.

- சோ.கார்த்திகேயன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்