உணவு அளிக்காமல் பட்டினி போட்டதால் நான்கு நாய்க்குட்டிகள் பரிதாப மரணம்

பட்டினி

ஹைதரபாத்தில் உணவளிக்காமல் பட்டினிப் போட்டதால், நான்கு நாய்க்குட்டிகள் பரிதாபமாக இறந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்தவர் எல்வீஸ் கேமரான். இவர் ஹைதரபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலையில் படித்து வந்தார். இதற்காக செகதிரபாத் புறநகரான யாப்ரல் பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்தார். பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் பணிக்காக எல்வீஸ் கேமரான் தாய்நாட்டுக்கு போக வேண்டியது இருந்தது. இவரது வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வந்தார். அதில், பெண் நாய்  4 மாதங்களுக்கு முன் குட்டிகள் ஈன்றன. நான்கு குட்டிகளையும் எல்வீஸ கேமரான் வாஞ்சையுடன் வளர்த்து வந்தார். ஆனால், பாஸ்போர்ட் விஷயமாக தாய்நாட்டுக்கு எல்வீஸ் அவசியம் போகும் வேண்டிய நிலை இருந்தது. 

ஆனால், குட்டிகளையும் அதன் பெற்றோரையும் யாரிடம் விட்டு செல்வது என்ற குழப்பத்தில் இருந்தார். பின்னர் தனது நண்பர் பீட்டர் என்பவரிடம் 'தனது நாய்களையும் குட்டிகளையும் பார்த்துக் கொள்ள முடியுமா?' எனக் கேட்டார். அவரும் தான் பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்தார். இதற்கிடையே கிறிஸ்துமஸ் தினத்தன்று விபத்தில் சிக்கியதில் பீட்டரின் கால்கள் உடைந்து போயின. அவரால் நகரக் கூட முடியாத நிலை. தன்னால் நடக்க முடியாத நிலையில் நாய்க்குட்டிகளை அவர் மறந்து விட்டார். தொடர்ந்து நான்கு நாட்களாக நாய்க்குட்டிகளுக்கு உணவளிக்க அவரால் போகவில்லை.

நாய்க்குட்டிகள் உணவுக்காக குரைத்தும் எந்த பலனும் இல்லை. நான்கு நாட்களாக உணவும் நீரும் கிடைக்காமல் அறைக்குள்ளேயே நாய்க்குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தன. வழக்கமாக நாய்க்குட்டிகள் குரைத்துக் கொண்டிருக்கும். நேற்று நாய்க்குட்டிகள் குரைக்காமல் அமைதியாக எல்வீசின் வீடு இருந்துள்ளது. இதையடுத்து, சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் மிருகவதை தடுப்பு அமைப்பினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அவர்கள் வீட்டு ஜன்னலை உடைத்து பார்த்தனர். உள்ளே நான்கு பப்பிகளும் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தன.  இந்த சம்பவம் குறித்து எந்த வழக்குப்பதிவும் செய்யப்படவில்லை. ஆனாலும் உரிமையாளர் நினைத்தால், மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியும். 

அதே போல அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சி ரகம்தான். ஒரு நபர், டிரக் ஒன்றில் நாயை ஏற்றி வந்து, அதனை தரதரவென இழுத்து வருகிறார். ஒரு விலங்குகள் நல மையத்தின் முன், அதனைப் போட்டு விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார். அந்த நபரின் இந்தச் செயல்,  விலங்குகள் நல மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த நாயை விலங்குகள் காப்பக ஊழியர்கள் மீட்டு, வளர்ப்பு பிராணிகள் நல மையத்தில் சேர்த்தனர். ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டு அந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  

நாயின் உடல் முழுவதும் காயங்கள் தென்பட்டன. புண்கள் வந்து  பல நாட்களாக அதற்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதனால் உடல் முழுவதும் பரவி ரணமாகியிருந்தது.  உடனடியாக அதன் புண்கள் ஆற மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்தனர். சிறிய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அந்த நாய்க்கு 10 ஆயிரம் டாலர்கள் மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைத்ததையடுத்து அதற்கு 'ஹோப்' என பெயரிடப்பட்டுள்ளது. 

அந்த நாயை மீட்கும் போது உயிர் பிழைக்க 10 சதவீத வாய்ப்பே இருந்தது. ஆனாலும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அதனை பிழைக்க வைத்து விட்டனர். 

-எம்.குமரேசன்

புகைப்பட உதவி: டெக்கான் கிரானிக்கிள்

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!