வெளியிடப்பட்ட நேரம்: 12:02 (31/12/2016)

கடைசி தொடர்பு:14:48 (31/12/2016)

மக்களை நேரிடையாக பாதிக்கும் இந்த விஷயங்களுக்கு ‘APP’ தராதா அரசு?!

App

பணமில்லா வர்த்தகத்தை அதிகரிக்க பிரதமர் மோடி பீம் என்ற ஆப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறார். பணமில்லா வர்த்தகத்தை நோக்கி செல்வது நல்லதா, கெட்டதா என்ற விவாதம் ஒரு புறமிருக்க, இந்தியா போன்ற நாட்டில் முன்னேற்றப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன என்பதே யதார்த்தம். மொபைல் ஆப் உண்மையில் ஒரு நல்ல மாற்றத்தை, ஆக்கபூர்வமான செயல்பாட்டை கொண்டு வரும் என்றால் இன்னும் சில அரசு சேவைகளுக்கு ஆப் கொண்டு வரலாமே!


1) உள்ளாட்சி நிர்வாகத்துக்கு:
நம் தெருவில் தண்ணீரில் சாக்கடை கலந்து விட்டது என்றால் என்ன செய்வோம்? நகர நிர்வாகத்திடம் சொல்வதற்கு பதில் அந்த தண்ணியை எடுத்து குடித்துவிடலாம் என்னும் அளவிற்கு அவர்களது நடவடிக்கைகள் இருக்கும். அதற்கு பதில், அனைத்து நகர நிர்வாக குறைபாடுகளுக்கும் ஒரு ஆப் கொண்டு வரலாம். 10-வது தெருவில் தண்ணீர் பிரச்னை என குடிமகன் ஒருவர் புகார் தெரிவித்தால், அந்த புகார் எந்த நிலையில் இருக்கிறது என்பதை பிரதமர் வரை பார்க்க முடியும். தீர்க்கப்படாத பிரச்னைகள் எந்த ஊரில்/வார்டில் அதிகம் என்பதை ஒரே ஒரு க்ளிக்கில் பார்க்க முடியும். எந்த கட்சியின் நிர்வாகி சோம்பேறியாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ளலாம். இதற்கு ஒரு ஆப் வருமா?


2) மருத்துவமனைக்கு:
அரசு மருத்துவமனைக்கு போக அரசியல்வாதிகளே யாரும் தயாராய் இல்லை என்பதுதான் கள நிலவரம். எந்த மருத்துவமனையில் என்ன சேவைகள் இருக்கின்றன, என்ன என்ன மாத்திரைகள் கைவசம் இருக்கின்றன என்பது எல்லாம் யாருக்கும் தெரிவதில்லை. பொதுமக்கள் கேட்டால், ஸ்டாக் இல்லை என ரேஷன் கடை ரீதியிலே பதில் சொல்கிறார்கள். வேலை நேரத்தில் மருத்துவர்கள் அங்கே இருக்கிறார்களா என்பதே தெரிவதில்லை. இதற்கு ஒரு ஆப் கொண்டு வரலாம். பண பரிவர்த்தணையில் வெளிப்படையாய் இருக்க விரும்பும் அரசு இந்த விஷயத்திலும் இருக்கத்தானே வேண்டும்?

3) பட்ஜெட்:
நாட்டின் பட்ஜெட்டை வெளிப்படையாக பொதுவில் அறிவிக்கிறார்கள். ஒரே ஒரு ரூபாயில் எந்த எந்த விஷயத்துக்கு எவ்வளவு செலவு செய்யப் போகிறோம் என்பது வரை துல்லியமாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்கள். ஆனால், அதில் என்ன என்ன செய்தார்கள் என்பதை யாராவது சொல்லியிருக்கிறார்களா? 2ஜி ஊழலில் 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு என்றார்கள். ஒருவேளை அந்த வருவாய் வந்திருந்தால், அரசு என்ன செய்திருக்கும்? அது வராததால் என்ன நடக்கவில்லை? இதையெல்லாம் ஒரு ஆப் சொல்லிவிடாதா? வழிகள் உண்டுதானே...

4) சர்வே ஆப்:
பிரதமர் தொடங்கி கவுன்சிலர் வரை மக்கள் தானே தீர்ப்பு எழுதுகிறார்கள். அவர்களிடம் ஒரு மாற்றம் கொண்டு வருவது பற்றி கேட்டால் நல்லதுதானே? கூடங்குளத்தில் அணுமின் நிலையம் தேவையா, பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்கலாமா என்பது போன்ற விஷயங்களை அந்தந்த மாநில மக்களிடம் கருத்து கேட்கலாம். அதற்கு தேவை ஒரே ஒரு ஆப்தான். ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற மக்களை தான் கேட்டது. மக்களிடம் எதற்கெல்லாம் கருத்து கேட்கலாமோ, அதையெல்லாம் கேட்க ஒரு ஆப் விடலாமே மோடிஜி?

இன்னும் இன்னும் ஏராளமான அடிப்படை விஷயங்களுக்கு டெக்னாலஜி நல்ல தீர்வை தரும். அதையெல்லாம் செய்துமுடிக்காமல் பண பரிவர்த்தணைகளுக்கு மட்டும் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டியது ஏன் என்பது தான் கேள்வி.

சர்வே ஆப் வந்திருந்தால், மத்திய அரசின் இந்த முடிவையே 90% மக்கள் நிராகரித்திருப்பார்கள் என்பதுதான் சமூக வலைதளங்களில் வரும் கருத்துகள் நமக்கு சொல்கின்றன.

- கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்