கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6,000 உதவித்தொகை!

 

 

புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடியின் உரை தற்போது தொடங்கியுள்ளது. ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்து 50 நாட்கள் முடிந்த நிலையில்,  ’தீபாவளி முடிந்த பின்பு, கறுப்பு பணத்தை ஒழிக்கும் தூய்மைக்கான யாகம் நடந்துள்ளது.

இதனால் நாட்டிற்கு நீண்ட கால பலன் கிடைக்கும் என்பது உறுதி. இந்த நடவடிக்கையை சிலர் அரசியலாக்கி விளையாடுகிறார்கள். நவம்பர் மாதத்திற்கு நாம் பல சவால்களை சந்தித்து வருகிறோம். மக்கள் தற்போது எதிர்கொண்ட துயரம் பிற்காலத்தில் பலனை தரும்.  கிராமங்களில் உள்ள சிறு சிறு பிரச்னைகள் முடிவுக்கு கொண்டு வரப்படும்.

 

மக்கள் தங்களது துக்கத்தை என்னுடன் பகிர்ந்துள்ளனர். விரைவில் வங்கிகளில் நிலைமை சீராகும். பண மதிப்பிழப்பு விவகாரம், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ரூ.500 மற்றும் 1,000 கறுப்பு பணமாக இருந்தது. அதை வைத்து தனி பொருளாதாரமே செயல்படுகிறது. கறுப்புபணம், கள்ளச் சந்தை, விலைவாசி ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். புழக்கத்தில் இருந்த கறுப்புப் பணம் தற்போது குறைந்துள்ளது.

தீமையை ஒழிக்க மக்களும், அரசும் இணைந்து போராடுவதே பண மதிப்பிழப்பு நடவடிக்கை. ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற துடிப்பு மக்களிடம் உள்ளது. நேரடி பண பரிவர்த்தனையை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏழைகள் வாழ்க்கை முன்னேற இதுபோன்ற நடவடிக்கை தேவைப்படுகிறது. நாட்டில் 24 லட்சம் பேர்தான், தங்களது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேலாக உள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். 

இந்த அரசு நேரடியாக மக்களின் நண்பான இருக்கிறது. தீய சக்திகள் நாட்டில் ஊடுருவுவதை நாம் தடுக்க வேண்டும். இந்த அரசு நேர்மையானவர்களை ஊக்குவிக்கும், நேர்மையற்றவர்களை திருத்தும். மக்களின் பொறுமையையும், துணிவையும் எண்ணி லால் பகதூர் சாஸ்திரி, ராம் மனோகர் லோஹியா போன்றோர் நிச்சயம் பெருமைபட்டு இருப்பார்கள் நேர்மையை கடைபிடிக்கும் மரபு காப்பாற்றப்பட்டு இருக்கிறது.  அதேபோல், காமராஜர் உயிரோடு இருந்திருந்தால் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டி இருப்பார்.

இறைவன் படைப்பில் மனிதன் நல்லவன் என்றாலும் தீமையின் பிடியில் சிக்குகிறான். குழந்தைகள் வன்முறை பாதையில் நுழைவதை தடுக்க வேண்டும். குறிப்பாக, தற்போது தொழில்நுட்ப உதவி மூலம் தவறு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கும் கறுப்பு பணமே உதவியுள்ளது. விளிம்பு நிலை மக்களின் பொருளாதாராம் பலமடைந்தால், நாட்டின் பொருளாதாரமே பலமடையும்.

மக்களுடன் இணைந்து வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் பெரும் உதவி புரிந்து இருக்கிறார்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தப்பிக்க முடியாது . தவறு செய்த வங்கி அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும். புதிய வருடத்தில் அரசு புதிய திட்டங்களை கொண்டுவர உள்ளது. 

நாடு சுதந்திரமடைந்து 60 வருடங்கள் ஆகியும் பல மக்கள் வீடுகள் இன்றி இருக்கின்றனர். பிரதம மந்திரி ஆவாஷ் யோஜன திட்டம் மூலம் ஏழைகளுக்கு 2 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அதன்படி, கிராமப்பகுதிகளில் ஏழைகளுக்கு வீட்டுக்கடன் வழங்கப்படும். இதில், ரூ. 9 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு 4 சதவீத வட்டியும், ரூ. 12 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு  3 சதவீதம் வட்டி விலக்கு அளிக்கப்படும். விவசாயிகள் கடனுக்கு மேலும் ரூ. 20,000 கோடி ஒதுக்கப்படும். விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு ரூபே கார்டுகளாக மாற்றப்படும். விவசாயிகளுக்கான கடன் மற்றும் மானியத்தொகை அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும். கடன் பெற்று விதை கொள்முதல் செய்தவர்களுக்கு 60 சதவீதம் வரிச்சலுகை செய்யப்படும். 

இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு கடன் வழங்க, வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறுவணிகர்களுக்கான வங்கி இருப்புத் தொகை உயர்த்தப்படும். சிறு வணிகர்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும்.

நாடு முழுவதும் 640 மாவட்டங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6,000 உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். இல்லத்தரசிகளுக்கும் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.

மூத்த குடிமகன்கள் வங்கிக் கணக்கில் ரூ. 7.5 லட்சம் பணத்தை 10 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால்,8 சதவீதம் வட்டி வழங்கப்படும். என்றார்.

ஆனால், நிலைமை 50 நாட்களில் சரியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், மோடி அதுகுறித்து பேசாதது சற்று வருத்தம்தான் என்றாலும், பட்ஜெட்டுக்கு முன்பாகவே பல திட்டங்களை அறிவித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் மோடி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!