ஓபிஎஸ் முதல்வராக உதவியதா மத்திய அரசு? வெங்கையா நாயுடு பதில்

தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனதில் மத்திய அரசுக்கு பங்கு இருக்கிறதா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு பதில் அளித்துள்ளார்.

சென்னை கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கையா நாயுடு, ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிரான போர் தொடரும் என்றும், சொல்வதைச் செய்பவர் என்பதால்தான், கறுப்புப் பணத்தை ஒழிக்க மோடி முனைந்துள்ளார் என்றும் கூறினார்.

சுதந்திரத்துக்குப் பிறகு கறுப்புப் பணத்துக்கு எதிராகப் போராடிய முதல் பிரதமர் மோடிதான் என்று கூறிய வெங்கைய்ய நாயுடு, கறுப்புப் பணம் மற்றும் வெள்ளைப் பணம் அனைத்தும் தற்போது வங்கிக் கணக்கில் வந்துள்ளது என்றும், பணமதிப்பிழப்பால் வரி கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், புதிய இந்தியா உருவாவதில் நேர்மையானவர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

கறுப்புப் பணத்தை ஒழிக்க காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று கேள்வி எழுப்பிய வெங்கைய்ய நாயுடு, பிரதமர் மற்றும் மத்திய அரசு மீது காங்கிரஸ் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது என்றும், பொருளாதார நிபுணராக விளங்கிய மன்மோகன் சிங், கறுப்புப் பண ஒழிப்புக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனதில் மத்திய அரசின் பங்கு இல்லை என்று தெரிவித்த அவர், தமிழக அரசின் உள் விவகாரங்களில் மத்திய அரசு தலையிடாது என்றார்.

சசிகலா முதல்வராக வேண்டுமென மக்களவை துணைச் சபாநாயகர் லெட்டர் பேடில் அறிக்கை விட்டதை தம்பிதுரை தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றி விவாதிக்க அவசியமில்லை என்றும், உடல் நிலை தேறிவந்த நிலையில், திடீரென அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள் என்றும் வெங்கையா தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்று கூறுவது அருவருப்பானது என்றும், ஆதாரமின்றி ஜெயலலிதாவின் மரணத்தைச் சந்தேகிப்பது தவறு என்றும் வெங்கைய்ய நாயுடு கூறினார்.

- ரா.வளன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!