இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரின் சிறப்புகள் இவைதான்! | Birthday remembrance of Savitribai Phule, India's first teacher of female gender

வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (03/01/2017)

கடைசி தொடர்பு:12:47 (03/01/2017)

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரின் சிறப்புகள் இவைதான்!

சாவித்திரி பாய் பூலே

ம்பேத்கரின் ‘சாதியை அழித்தொழித்தல்’ நூலில் ஒரு பகுதியில் இப்படியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும், “தமக்கென ஒரு குலத்தொழிலைக் கொண்ட, இந்து சமூகத்தில் இருக்கும் சுமார் நான்காயிரம் அகமணமுறை சாதிகள் நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள். இதற்கு வெளியே இருப்பவை அவர்ண சாதிகள்- அதி சூத்திரர்கள், மனிதம் மறுக்கப்பட்டவர்கள், அவர்களுக்குள்ளாகவே ஒரு படிநிலையில் பிரிக்கப்பட்டவர்கள்- தீண்டத்தகாதவர்கள், காணத் தகாதவர்கள், எதிர்வரத் தகாதவர்கள்..” அதாவது தீண்டத்தகாதவர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்களிடையே கூட உட்பிரிவுகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார் அவர்.1947க்கு முன்பும் பின்புமான இந்தியாவின் நிலை.

இதில் அவர் குறிப்பிடத் தவறிய ஒன்று இத்தனை சாதியப் படிநிலைகளிலும் இருந்த மக்களின் வீட்டில் இருக்கும் பெண்களின் மீதான ஒடுக்குமுறை. உயர் சாதியாக இருந்தாலும், தீண்டத்தகாதவர்களின் எந்த உட்பிரிவாக இருந்தாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் வெளியே வருவதை மிகப் பெரும் குற்றமாகக் கருதியது சமூகம்.தாழ்த்தப்பட்டவர்களிலும் தாழ்த்தப்பட்டவளாக பெண் கருதப்பட்டாள். அப்படியான சூழலில்தான் சாவித்திரி பாய் பூலே தடைகளை உடைத்து தன் கணவர் நடத்திய பள்ளியில் ஆசிரியர் பணியாற்றச் சென்றார். ஆம், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் பூலே.

சாவித்திரி பாய் பூலே 1831-ல் இதே நாளில்தான் குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் உள்ள கண்டலா துறைமுகத்தின் அருகே இருக்கும் நைகோன் என்னும் சிற்றூரில் பிறந்தார்.  சாதிய ஆதிக்கங்களுக்கு எதிராகப் போராடிய முதன்மையான நபர்களில் சாவித்திரி பாய் மற்றும் அவரது கணவர் மகாத்மா ஜோதிபாய் பூலே குறிப்பிடவேண்டியவர்கள்.தாழ்த்தப்பட்டவர்களுக்கான முதல் பள்ளியை இந்தியாவில் தொடங்கியவர்கள் இவர்கள்தான். சிறுவயதிலேயே மணமுடிக்கப்பட்டுவிட்ட சாவித்திரிக்கு படிப்பறிவு இல்லை. ஆனால் ஜோதிபாய் பூலே தனது இணை அப்படியிருக்க விரும்பியிருக்கவில்லை. அவரை கல்வி கற்க நிர்பந்தித்தார். கற்றலில் இருக்கும் ஒரு ஈர்ப்பு விசையை நீங்கள் உணர்ந்தது உண்டா?. உண்மையான கல்வி கற்பவரைத் தனக்குள் ஈர்த்துக்கொள்ளும் வல்லமை உடையது. கற்பவரின் செயல்பாடுகளை தான் திட்டமிடும் ஆற்றல் படைத்தது. சாவித்திரி பாயிடமும் அப்படியான மாற்றத்தைதான் ஏற்படுத்தியது. தான் கற்றது மற்றும் போதாது என, அதனை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க தன் கணவருடன் பள்ளிக்குச் சென்றார். இவர்கள் இருவரும் பள்ளிக்குச் செல்வதை எதிர்த்து இவர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. மாட்டுச் சாண இவர்கள் மேல் எறியப்பட்டது. பெண்ணை வெளியே அழைத்து வந்ததற்காக ஜோதிபாய் தாக்கப்பட்டார், ஒரு பெண் கற்பித்து இந்த சமூகம், அதுவும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகம் வளரவேண்டுமா என சாவித்திரி தாக்கப்பட்டார்.இரட்டைக் குவளை முறை மிகவும் தீவிரமாக அமலில் இருந்த ஒருகாலகட்டத்தில் இருவரும் தங்கள் வீட்டிலேயே கிணறு வெட்டி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு குடிநீர் எடுத்துக்கொள்ள வழி செய்தனர். சாவித்திரி நல்ல கவிஞரும் கூட.

அவரின் கவிதை ஒன்று இப்படியாக விரிகிறது.,

உன்னில் நம்பிக்கை கொள்,

விழித்திரு உழைத்திரு

கல்வி இல்லையேல் எதுவுமில்லை

ஞானம் இல்லையேல் மிருகங்களே மிச்சமாகும்

அறிவினைத் திரட்டிக்கொள்

ஒடுக்கப்பட்டவர் துன்பம் நீக்கு

ஆழ்மணல் தங்கத்துகள் போல்தான் கற்றலும்

கற்றுக்கொள், 

அறிவின் ஆதி வரை சிந்தித்திரு,

சாதி என்னும் சங்கிலியை அறுத்து எறி

ஆதிக்கம் எனும் சொல்லை தூர வீசு

ஆசிரியர் பணியோடு மட்டும் நின்றுவிடாமல் 1852ல் மகிளா சேவா மண்டல் அமைப்பை தொடங்கி, பெண்களிடையே மனித உரிமைகள் பற்றிய விழிப்பு உணர்வையும் போராட்டங்களின் அவசியம் பற்றியும் வலியுறுத்தத் தொடங்கினார். முடிதிருத்துபவர்களை ஒன்றினைத்து, கணவரை இழந்த பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கத்துக்கு எதிராக போராட்டம் ஒன்றையும் நிகழ்த்தினார். 1876ல் இந்தியாவில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின்போது இணையர்கள் இருவருமே இலவசமாக அனைவருக்கும் உணவு வழங்கினார்கள்.அப்போது ப்ளேக் நோய் தாக்கம் உச்சத்தில் இருந்த சமயம், நோயாளிகளின் சிகிச்சைக்கு உதவி செய்து வந்த சாவித்திரி நோய் தொற்று ஏற்பட்டு இறந்தார்.

சாவித்திரி தன் கணவருக்கு கடிதங்கள் எழுதும் பழக்கமுடையவர். அதுவும் பஞ்ச காலத்தில் தனது குழுவினருடன் பணியாற்றக் கிளம்பிய சாவித்திரி புனேவிலிருந்து ஜோதிபாய்க்கு தொடர்கடிதங்களை எழுதினார். அவை காதல் கடிதங்கள் அல்ல, காதல் இப்படியாகவும் இருக்கும் என சமூகத்தின் பார்வையை மாற்றிய கடிதங்கள். தனது மற்றும் தனது கணவரின் செயல்பாட்டைக் குறித்து தனது அண்ணன் கோபம் கொள்ள அதற்கு தான் அவருக்கு விளக்கம் கொடுத்ததைப் பற்றி 1858ல் அவர் எழுதிய கடிதம், 1877ல் பஞ்ச காலத்தில் மனமுடைந்து எழுதிய கடிதம் என அவரின் கடிதங்கள் அன்றைய சமூக நிலையின் சாட்சியமாக இருக்கின்றன. 77ல் எழுதப்பட்ட கடைசி கடிதத்தில், பஞ்சத்தால் மக்கள் எப்படி தனது சிறுநீரைத் தானே குடிக்கும் கொடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று விவரிக்கிறார். அதனை சித்தரித்துப் பார்க்க மனதுக்கு அவ்வளவு வலிமையில்லை. இதைவிடக் கொடிய செயல்கள் நிகழ்ந்ததையும் அந்த கடிதத்தில் விவரிக்கிறார். இறுதியாக அவரது கடிதம் இப்படி முடிகிறது,”காலம் எவ்வளவு பெரிய இடரை ஏற்படுத்தினாலும், நமது செயல்பாடுகள் தடைபடக்கூடாது” என்கிறார்.

இன்றைய இந்திய அரசியலில் ’ஆசிரியர் தினம்’ ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதியில் தான் அனுசரிக்கப்படுகிறது. வரலாறு திருத்தப்பட்டால், உண்மை வரலாறு அறியப்பட்டால் சாவித்திரிபாய் பூலே பிறந்ததினம் நிச்சயம் அப்படியாக  அனுசரிக்கப்படும்.

- ஐஷ்வர்யா   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close