வெளியிடப்பட்ட நேரம்: 16:38 (03/01/2017)

கடைசி தொடர்பு:17:15 (03/01/2017)

"பிளான் பண்ணாமத்தான் பண்ணுவோம்!" - சிவாஜி சிலை RTI-க்கு அரசு பதில்

மோடி

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 24 டிசம்பர் 2016 அன்று மும்பை அருகே அரேபியக் கடலில் மன்னர் சிவாஜியின் 192 அடி உயர சிலை நிறுவப்படுவதற்கான அடிக்கல் நாட்டினார். அதற்கான மாதிரி வரைபடத்தையும் அரசு வெளியிட்டது. ‘‘சிலை கட்டுமானத்துக்காக 3,600 கோடி ரூபாய் செலவிடப்படும்’’ எனவும் அவர் தெரிவித்தார்.  கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகச் செல்லாக்காசு நடவடிக்கையை கடந்த நவம்பரில் அறிவித்தார் மோடி. இதையடுத்து நாடே பணசுழற்சி சிக்கலால் அவதிப்படும்போது 3,600 கோடி ரூபாய் செலவில் சிவாஜி சிலை அமைக்க வேண்டியது அவசியம்தானா என்ற கேள்வியை எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து எழுப்பி வந்தனர்.

இதையடுத்து சிவாஜி சிலை விவகாரம் தொடர்பாக புனேவைச் சேர்ந்த ஆர்.டி.ஐ செயற்பாட்டாளரான சஞ்சய் ஷிரோத்கர் என்பவர் சிவாஜி சிலை கட்டுமானத்துக்காக அரசின் செயலாக்க அறிக்கை, தொழில்நுட்ப மதிப்பீடு, சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் அதன் கட்டுமானத்துக்காக மகாராஷ்டிர அரசு அளித்துள்ள ஒப்புதல் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு அரசுக்கு ஆர்.டி.ஐ ஒன்றை அனுப்பியிருந்தார்.

இதற்கு, அரசுப் பொறியாளரும் அரசின் பொதுத் தகவல் அதிகாரியுமான ஜேத்ரா, ‘‘சிவாஜி சிலை தொடர்பாக எந்தவிதச் செயல்பாட்டு அறிக்கையும் தயார் செய்யப்படவில்லை’’ எனப் பதிலளித்துள்ளார். அவரது பதிலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சஞ்சய் ஷிரோத்கர், ‘‘அரசின் எந்தவொரு விரிவாக்கப் பணிகளுக்குமான அடித்தளமே அதன் செயல்பாட்டு அறிக்கைதான். அப்படியிருக்கும்போது, இந்த மிகப்பெரிய தயாரிப்புக்கு எந்தவித திட்டமிடலும் இல்லாமல் எப்படி அறிவிப்பை மட்டும் வெளியிட்டிருக்கிறார்கள்? இந்தத் திட்டத்தின் கான்ட்ராக்டர்தான், இதுதொடர்பான கேள்விகள் கேட்கப்பட வேண்டியவர். அவர்தான் திட்டமிட்டுத் தொடர்புடையவர்களுக்குச் செயல் அறிக்கையைத் தரவேண்டும். ஆகவே, கான்ட்ராக்டருக்கு இதுதொடர்பாக அடுத்த ஆர்.டி.ஐ அனுப்பப்படும்’’ என்று அறிவித்துள்ளார். 

அரசு பொறியாளர் கொடுத்துள்ள ஆர்.டி.ஐ பதிலில் ”செயல் அறிக்கையும் இல்லை. தொழில்நுட்ப மதிப்பீடும் இல்லை” என்று கூறியுள்ளார். ”க்ளியரன்ஸுக்கான அறிக்கையை மட்டுமே இணைத்துள்ள அவர். அரசு சிலைக்காக அனுமதி கொடுத்துவிட்டது என்றும், ஆனால் அனுமதிக்கான ஆவணத்தை அரசிடம்தான் கேட்டுப் பெற வேண்டும். அதனை அரசிடம் கேட்டுப் பெற்று தங்களிடம் ஒப்படைக்கப்படும்”  என்றும் பதிலளித்துள்ளார்.

‘‘மேலும், சிலை கட்டப்பட்டாலும்... அதற்கான வருடாந்திர பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக 500 முதல் 600 கோடி ரூபாய் வரை தேவைப்படும் என்றும், சிலைக்கான பாதுகாப்புக்காகக் கூடுதல் பாதுகாவலர்களை நிறுத்தவேண்டிய அவசியம் ஏற்படும்’’ என்றும் அவர் கூறியுள்ளார். ‘‘இதற்குப் பதிலாக மும்பை கரையோரங்களில் படகுகளை நிறுத்துவதற்கான கூடுதல் படகுத் துறைகளைக் கட்டினால், சிவாஜியின் ஆன்மா மகிழ்ச்சியுறும். ஏனெனில், அவரது ஆட்சிக் காலத்தில் கப்பல் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து தொடர்பாகத்தான் எண்ணற்ற மாற்றங்களைக் கொண்டு வந்தார்’’ என்றும் கூறியுள்ளார்.

சிலை இங்க இருக்கு. பிளான் எங்க?

அதான்ணே இது..

- ஐஷ்வர்யா

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்