வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (04/01/2017)

கடைசி தொடர்பு:13:53 (04/01/2017)

பெண்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை விமர்சிக்கும் 'நியாயவான்'களுக்கு 5 கேள்விகள்! #BengaluruNewYearsEve

புத்தாண்டு

பெங்களூருவில் புத்தாண்டு இரவுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், ஆண்களால் கூட்டு பாலியல் சீண்டல்களுக்கு ஆளானது, தேசத்துக்கே அதிர்ச்சி தந்த செய்தி.

கடந்த சனி அன்று, பெங்களூருவின் புகழ்பெற்ற எம்ஜி சாலை மற்றும் பிரிகேட் சாலைகளில் புத்தாண்டைக் கொண்டாடக் கூடினார்கள் மக்கள். 'இரவின் சாலைகளும், புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் நமக்கும்தான்' என்று நம்பி வந்த இளம் பெண்களை, பாலியல் பொருளாக மட்டுமே பார்த்தது அங்கிருந்த ஆண்களின் மனம்.

கூட்டத்தை சாக்காக வைத்து, கடந்த பெண்களை எல்லாம் அருவருக்கத்தக்க பாலியல் சீண்டல்கள் செய்தார்கள் ஆண்கள். அதிர்ச்சியில், அவமானத்தில், வேதனையில், கோபத்தில், கொந்தளிப்பில் எழுந்த பெண் குரல்களுக்கு, அந்தக் கூட்டத்தில் எந்த நியாயமும் தரப்படவில்லை. பத்திரிகையாளர்களின் கேமராவில் பதிவானதில் வெளியிடப்பட்ட, பெண் காவலர் ஒருவரின் தோளில் முகம் சாய்த்து விம்மும் அந்தப் பெண்ணின் புகைப்படமும், தனக்கு நேர்ந்த வக்கிரத்தால் ஆற்றாமையில் அழும் மற்றொரு பெண்ணின் புகைப்படமும், அந்தச் சாலைகளில் மற்ற பெண்கள் அனுபவிக்க நேர்ந்த அநியாயத்தை அறைந்து சொல்கின்றன.

'பாதுகாப்புப் பணிகளுக்கு அங்கு 1600 காவலர்கள் இருந்தார்கள். ஆனால், கிட்டத்தட்ட 60,000 மக்கள் அங்கு குழும, அந்தச் சாலைகள் எங்கள் கட்டுப்பாட்டை இழந்தன' என்று சொல்லியிருக்கிறார், காவல் துறை அதிகாரி. தேசத்தையே தலைகுனிய வைத்த இந்தச் சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட எந்தப் பெண்ணும் புகார் எதுவும் அளிக்கவில்லை என்பது, இன்னும் வேதனை அளிக்கிறது.

இந்நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவ், 'கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது, கூட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான்' என்று 'கவனிக்க வேண்டிய' தன் கருத்தை பதிவு செய்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து சமாஜ்வாடி கட்சியின் மகராஷ்டிர மாநில தலைவர், எம்.எல்.ஏ அபு ஆஸ்மி,  'பெண்கள் குட்டையான உடைகள் அணிவதால் பாலியல் தொல்லை சம்பவங்கள் நடக்கின்றன' என்று தான் கண்டறிந்த உண்மையைத் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கு மட்டுமல்ல, 'பெண்கள் புத்தாண்டு கொண்டாடுறோம், மாடர்ன் டிரெஸ் போடுறோம்னு வந்தா, இதெல்லாம்தான் நடக்கும்' என்ற மனநிலையில், இந்தச் சம்பவத்தை நியாயப்படுத்துபவர்களுக்கும், சலனமின்றிக் கடப்பவர்களுக்கும் இந்த 5 கேள்விகள்...

* 'புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பெண்கள் கலந்துகொண்டால் அப்படித்தான் நடக்கும்' என்ற உங்களின் அதிகார வார்த்தைகளின் மூலம், அந்த அயோக்கியர்களின் வக்கிரங்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் என்ற அடிப்படைப் பிழைகூடப் புரியாதா உங்கள் புத்திக்கு?

* வீட்டைவிட்டு வெளியேறும் பெண்களும், நாகரிக உடை அணியும் பெண்களும்தான் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறார்கள் என்றா  நினைக்கிறீர்கள். நீங்கள் வீட்டுக்குள் பொத்திப் பொத்தி வளர்க்கும் உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளும், தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழலில் பாலியல் தீண்டல்களுக்கு ஆளானவர்கள்தான் என்ற உண்மையை அறிவீர்களா? அதற்குக் காரணம், உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளின் உடையும், செயல்பாடுகளும்தான் என்று வழக்கம்போல் தீர்ப்பு சொல்லிவிடலாமா?

* 'புத்தாண்டு இரவுக் கொண்டாட்டம், பேன்ட், டி ஷர்ட் என வெஸ்டர்ன் கலாசாரங்களை பெண்கள் பின்பற்றுவதன் விளைவு இது' என்று சுட்டிக்காட்டுகிறீர்கள். பள்ளிச் சீருடையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளின் மரணங்களுக்கு தொகுத்துத் தரவும் உங்களிடம் ஆண் மைய நியாயங்கள் இருக்கிறதா?   

* ஐந்து வயதுப் பெண் குழந்தைகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' கற்றுக்கொடுக்கப்படுவது எவ்வளவு கொடுமையானது என்பதை அறிவீர்களா? அவளிடம் அவள் மழலையைப் பிடுங்கிக்கொண்டு, 'நீ பெண்' என்ற கவசத்தை மாட்டிவிடும் அவலத்தை தந்தது யார்? ஆண்கள் ஆண்கள் ஆண்கள்!
 
* 'ஆண்கள் அப்படித்தான். பெண்கள்தான் அதற்கு வாய்ப்புத் தராமல் இருக்க வேண்டும்' என்ற உங்களின் மேலான எண்ணத்தை நீங்கள் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறீர்கள். எந்தப் பெண்ணும் ஆணுக்கு வாய்ப்புத் தர விரும்பி எதையும் செய்வதில்லை. அவள் தன் உரிமையை, தனக்கான மகிழ்ச்சியை, கொண்டாட்டங்களை பெறவே விரும்புகிறாள். எப்போதும் பெண்களின் உறுப்புகளையே உற்றுநோக்கும் கண்களும், அதை நியாயப்படுத்தும் வாய்களும் வெட்கப்பட வேண்டுமே தவிர, இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்தை பெண் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.

புத்தாண்டும், இரவும், சாலைகளும், கொண்டாட்டங்களும் பெண்களுக்கும்தான். பெங்களூருவில் நடந்த அசிங்கத்துக்கு, ஒரு பெண்ணின் உடலை எந்தக் குற்ற உணர்வும் இன்றி வக்கிரமாகச் சீண்டலாம் என்று நினைத்து அந்த அசிங்கத்தைச் செய்த ஆண் மனங்களும், அந்த ஆண்களை அந்த மனநிலையில் வளர்த்தெடுத்த குடும்பங்களும், சக மனுஷி பாதிக்கப்பட்ட ஓலம் கேட்கும்நிலையில்கூட, 'பெண்கள் அப்படி இருக்கக்கூடாது' என்று வகுப்பெடுக்கும்   நாட்டாமைகளும்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தலைகுனியுங்கள்!

- தீபிகா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்