வெளியிடப்பட்ட நேரம்: 13:39 (09/01/2017)

கடைசி தொடர்பு:15:11 (09/01/2017)

'பொண்ணு செத்ததைவிட ஆம்புலன்ஸ் கொடுக்காததுதான் வலிக்குது!' கதறும் தந்தை

ஒடிசா மாநிலம், காலாகண்டி மாவட்டம் மேலகாகரா கிராமத்தைச் சேர்ந்த டானா மஜி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையில் உயிர் இழந்த மனைவியின் உடலை எடுத்துச் செல்ல, மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் 10 கிலோ மீட்டர் தூரம், உடலை சுமந்து சென்றார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போன்ற ஒரு சோக சம்பவம் அதே ஒடிசாவில் மீண்டும் நடந்துள்ளது.

ஆம்புலன்ஸ்

ஒடிசாவின் கிழக்குப் பகுதியில் உள்ள அங்குல் மாவட்டத்தில் உள்ள பிசாமூண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தகீபர். இவருடைய ஐந்து வயது மகள் சுமி. சுமிக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் அங்குல் மாவட்டத்தில் உள்ள பாலாஹாடா கம்யூனிட்டி ஹெல்த் சென்டர் மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார் தகீபர். சிகிச்சை பலனில்லாமல் சமீபத்தில் சுமி இறந்து விட்டார். மகள் உடலைச் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் கேட்டு இருக்கிறார் தகீபர். ஆனால், மருத்துவமனையில் காவலில் இருந்தவரும், இளநிலை மேலாளரும் ஆம்புலன்ஸ் தராமல் இழுத்தடித்து இருக்கிறார்கள். இதனால் மனமுடைந்து தனது மகளை 15 கிலோ மீட்டர் தூரம் வரை சுமந்து சென்று இருக்கிறார் தகீபர்.  

மகள் உடலை தகீபர் சுமந்து செல்லும்போது பொதுமக்கள் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. ஆனால் இந்த தகவல் மாவட்ட ஆட்சித் தலைவரின் காதுக்கு சென்றது.

தகவல் அறிந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அனில் குமார் சமால், மண்டல அலுவலகத்தில் உள்ள மருத்துவமனை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார். அத்துடன் சம்பவம் நடைபெற்ற மருத்துவமனைக்குச் சென்று விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துணை ஆட்சியர், தகீபரின் வீட்டுக்குச் சென்று விசாரித்து இருக்கிறார்.

அப்போது, மருத்துவமனையில் காவலாளியும், பணியில் இருந்த மருத்துவமனை மேலாளரும் உதவி செய்ய மறுத்த விஷயத்தைச் சொல்லி கதறி இருக்கிறார்கள் தகீபரின் குடும்பத்தினர். மகளின் மரணத்தை விட மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸ் தராமல் இழுத்தடித்து பிரச்னை செய்ததே மிகப்பெரிய துன்பத்தை கொடுத்து இருக்கிறது என்று கதறி இருக்கிறார்கள். துணை ஆட்சியர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி, உடனே மாவட்ட ஆட்சியர் அனில் குமாரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, பாலாஹாடா கம்யூனிட்டி ஹெல்த் சென்டர் மருத்துவமனையில் உள்ள பாதுகாவலர், மருத்துவமனை பணியில் இருந்த இளநிலை மேலாளர் இருவரையும், மாவட்ட ஆட்சித் தலைவர் பணியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்தார்.

ஒடிசாவில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து நடைபெற்று 21 பேர் மரணமடைந்தனர். ஆம்புலன்ஸ் தராமல் இழுத்தடித்த சம்பவமும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி வருகிறது. என்ன தான் நடக்கிறது மருத்துமனையில் என்ற விவரம் தெரியவில்லை.

இனியும், இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க மத்திய அரசின் சுகாதாரத் துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுகாதார துறையினை தூய்மைப்படுத்த மிகப்பெரிய திட்டத்தை நாடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறது என்பதை மேற்கண்ட சம்பவங்கள் உணர்த்துகின்றன என்றே சொல்லலாம். 

- ஞா. சக்திவேல் முருகன்


டிரெண்டிங் @ விகடன்