ஐம்பதாயிரத்தையும் ஒப்படைத்தார்... அன்பளிப்பையும் மறுத்தார்... நேர்மை போலீஸ்!

‛போலீஸ்காரங்க கைக்கு போயிட்டா, கிடைக்குற பணமும் கிடைக்கமாப் போயிடும்’ என்பதே மக்களின் மனநிலை. ஆனால், இந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கியிருக்கிறார் டெல்லியைச் சேர்ந்த ஒரு ஹானஸ்ட்ராஜ்.

நேர்மையான போலீஸ்காரர் மதன்சிங்

தொழிலதிபர் ஜக்ரீத் சிங் கடந்த 7-ம் தேதி, டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு, காரில் போய்க் கொண்டிருந்தார். திடீரென கார் பழுதானது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸ் தவறி விழுந்துள்ளது. இதனை ஜக்ரீத்சிங் கவனிக்கவில்லை. நிஜாமுதீன் என்ற இடத்தில் பர்ஸ் தவறியுள்ளது. சாலையில் கிடந்த பர்ஸை சைக்கிளில் சென்ற ஒருவர் எடுத்துள்ளார். சரியான நேரத்தில்  டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் மதன் சிங் அந்த பகுதிக்கு வந்துள்ளார். சைக்கிள்காரர் பர்ஸை எடுப்பதைக் கவனித்து, அவரிடம் இருந்து பர்ஸைக் கைப்பற்றியுள்ளார். பின்னர் பர்ஸை திறந்து பார்த்தபோது, அதில் ரூ. 35,000 பணமும் 300 டாலரும் இருந்தன. அதுதவிர டெபிட், கிரெடிட் கார்டுகள், டிரைவிங் லைசென்ஸ், விசிட்டிங் கார்டும் இருந்துள்ளன.

அதே வேளையில், பர்ஸைத் தவறவிட்ட ஜக்ரீத் சிங்கோ பதறிக் கொண்டு இருந்தார். மதன் சிங்கிடம் பர்சைக் கொடுத்த சைக்கிள்காரர், 'இனி எங்கே சம்பந்தப்பட்டவர்களுக்கு பர்ஸ் போகப் போகிறது? என்றவாறு போய் விட்டார். மதன்சிங் என்ற போலீஸ்காரருக்குள் மறைந்திருக்கும் 'நேர்மை' சைக்கிள்காரருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பர்சில் இருந்த விசிட்டிங் கார்டில் உள்ள எண்ணுக்கு போன் அடித்தார் மதன்சிங். 'உங்கள் பர்ஸ் கிடைத்துள்ளது. நிஜாமுதீனுக்கு வந்து பெற்றுக் கொள்ள முடியுமா?' எனக் கூறியுள்ளார். அப்போதுதான் ஜக்ரீத் சிங்குக்கு உயிரே வந்துள்ளது.  உடனடியாக ஓடிப் போய், மதன் சிங்கிடம் இருந்து பர்சை வாங்கிப் பார்த்துள்ளார். உள்ளே  வைத்திருந்த பணத்தில் சல்லிக் காசு கூட குறையாமல் பர்ஸ் அவரைப் பார்த்து சிரித்தது. ஆச்சரியப்பட்ட ஜக்ரீத் சிங், மதன் சிங்குக்கு 5 ஆயிரம் அன்பளிப்பு கொடுத்தார். அதனைப் பெற்றுக் கொள்ள மதன்சிங் மறுத்து விட்டார். தவறவிட்ட பர்ஸ் ஒரு மணி நேரத்தில் ஜக்ரீத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. 

நிகழ்ந்த சம்பவத்தை ஜக்ரீத் சிங், தனது ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டிருந்தார். நேற்று முழுவதும் ஃபேஸ்புக்கில் மதன் சிங்தான் டிரெண்ட். இந்த சம்பவம் குறித்து ஜக்ரீத்சிங் கூறுகையில், ''சப் இன்ஸ்பெக்டர் மதன்சிங் என்னை போனில் அழைத்ததும் காலியான பர்ஸ்தான் அவரிடம் கிடைத்திருக்கும். பணம், கார்டுகளை எல்லாம் யாராவது எடுத்துவிட்டு போட்டிருப்பார்கள் என்றே நினைத்தேன். ஆனால், அவர் என்னிடம் பர்ஸை அப்படியே திருப்பிக் கொடுத்ததும் ஸ்தம்பித்து போனேன். வைத்தது வைத்தபடியே இருந்தது. பணம் போனாலும் பரவாயில்லை உள்ளே இருக்கும் கார்டுகள் முக்கியமானவை. அவற்றை எல்லாம் திரும்ப பெறுவதற்கும் கஷ்டப்பட வேண்டி இருக்கும். உண்மையில் போலீஸ்காரரின் நேர்மை கண்டு மிகுந்த மகிழ்வுற்றேன். 

எனக்கு செய்த உதவிக்கு கைமாறாக அவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்து 5 ஆயிரம் அன்பளிப்பாக கொடுத்தேன். ஆனால், அதனை பெற்றுக் கொள்ள மறுத்த மதன்சிங், 'நான் எனது கடமையை செய்துள்ளேன். பிரதிபலன் எதிர்பார்த்து இதை நான் செய்வதில்லை. நீங்கள் இனிமேல் பத்திரமாக வைத்துக் கொள்ளப் பழகுங்கள்' என அறிவுரை வழங்க நான் நெகிழ்ந்து போனேன். மதன் சிங்கின் நேர்மையை உலகுக்கு தெரிவிக்க வேண்டுமென நினைத்தேன். அதனால்தான் ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். ஆனால் டிரெண்டாகும் என்று நினைக்கவில்லை. மதன் சிங் தன்னை புகைப்படம்  எடுப்பதைக் கூட விரும்பவில்லை. அதற்கே அவரை கஷ்டப்பட்டுதான் ஒப்புக் கொள்ள வைக்க வேண்டி இருந்தது'' எனக் கூறியுள்ளார் இன்னும் ஆச்சரியம் விலகாமல்...

இந்த சம்பவம் குறித்து, டெல்லி டிராபிக் போலீஸ் டிசிபி குப்தா கூறுகையில், ‘மதன்சிங் எங்களைப் பெருமைப்பட வைத்துள்ளார். துறைரீதியாக மதன்சிங் கவுரவிக்கப்படுவார்’ எனத் தெரிவித்துள்ளார். தற்போது 54 வயதான சப் இன்ஸ்பெக்டர் மதன் சிங்குக்கு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். 

காவல்துறை மதன்சிங் போன்றவர்களால் நிரம்பியிருந்தால் எப்படியிருக்கும்? கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!

- எம். குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!