'ஒளிக்கீற்றாக... மங்கலாக பார்க்கிறேன்... கடவுளுக்கு நன்றி!' - வைக்கம் விஜயலட்சுமியின் உருக்கம்

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பார்வை கிடைப்பதற்காக அவர் தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது அந்த சிகிச்சை பலன் அளித்துள்ளது. 

பிரபலத் தமிழ் மற்றும் மலையாள பாடகியான விஜயலட்சுமிக்கும் (35), கேரளத்தைச்  சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷுக்கும், கடந்த டிசம்பர் 13-ம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டது. வரும் மார்ச் 29-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. 

வைக்கம் விஜயலட்சுமிக்கு கண்பார்வை

அண்மையில் ஒரு பேட்டியில், ''என் மனதில் எப்போதுமே ஒரு கேள்வி எழுந்துகொண்டே இருந்தது. என்னைப் போன்ற கண் பார்வையற்ற ஒருவரை யாராவது திருமணம் செய்து கொள்வார்களா?’ இதுதான் அந்தக் கேள்வி. இப்போது ஒரு மனிதர்  வந்திருக்கிறார். என்னைப் பற்றியும், என் பலவீனங்களைப் பற்றியும் முழுமையாக அறிந்த ஒருவர் என்னைத் திருமணம்  செய்ய முன்வந்துள்ளார். எனக்குத் திருமணம் நடைபெற வேண்டுமென எனது பெற்றோர் வைக்கத்தான் கோயிலில் வேண்டாத நாளில்லை. இப்போது அந்த வேண்டுதலுக்கு பலன் கிடைத்துள்ளது. கண் பார்வையற்ற எனக்கு, இப்போது கணவர் வடிவில் கடவுள் கண்களை அளித்துள்ளார்'' என  விஜயலட்சுமி நெகிழ்ந்திருந்தார். 

ஆனால், தற்போது உண்மையிலேயே விஜயலட்சுமியின் கண்களைத் திறந்துள்ளார் கடவுள்.  பார்வை இழந்தாலும், தனது இசைப் பணிக்கிடையேயும் பார்வை கிடைக்க சிசிக்சை பெற்று வந்தார்  விஜயலட்சுமி. தற்போது அவருக்கு பார்வை  கிடைத்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரால் பார்க்கவும் முடிகிறது. ஓரளவு கண்பார்வை கிடைத்திருப்பதால் விஜயலட்சுமி மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளார். அவரது வருங்கால கணவர், குடும்பத்தினர் என அவரது நலம்விரும்பிகள் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர். 

கண்பார்வை கிடைத்தது குறித்து ‛மனோரமா’ இதழுக்கு விஜயலட்சுமி அளித்த பேட்டியில், ''எனக்குப் பிறவியிலேயே பார்வைக்குறைபாடு இருந்ததால் முற்றிலும் குணப்படுத்தி விட முடியாது. ஆனால், தற்போது என்னால் உருவங்களைப் பார்க்க முடிகிறது. பொருட்களும் கண்களுக்குத் தென்படுகின்றன. பார்வை முழுமையாகத் தெரியாமல் பனி படலம் போலத் தெரிகிறது'' என்றார். விஜயலட்சுமி கருவில் இருக்கும் போதே மூளையில் நரம்பு பாதிப்பால் கண்பார்வை கிடைக்காமல் போயிருக்கிறது. அவருக்குத் தற்போது பார்வை கிடைத்ததை அறிந்து திரைத்துறையினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

கடந்த 2013-ம் ஆண்டு பிரிதிவிராஜ் நடிப்பில் வெளி வந்த 'செல்லுலாயிட்'  மலையாளப் படத்தில் 'காற்றே காற்றே ' என்ற பாடலை முதன்முறையாக விஜயலட்சுமி பாடினார். இந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்து மலையாளத்தில் சில பாடல்கள். தமிழில் 'குக்கூ ' படத்தில் 'கோடயில' என்ற பாடலைப் பாடினார். தமிழில் 'பட்டதாரி ' படத்தில் 'சிங்கிள் சிம்முதான் நானடா' என்ற பாடலும் சக்கைப் போடு போட்டது. டூயட் பாடலுக்கும் தனது குரல் பொருந்தும் என்று இந்த பாடல் வழியாக விஜயலட்சுமி நிரூபித்தார். தமிழைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் இமான்,  விஜயலட்சுமிக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தார். என்னமோ ஏதோ, வெள்ளைக்காரத் துரை, ரோமியோ ஜூலியட், வீர சிவாஜி போன்ற பல படங்களில் இமானின் இசையில் விஜயலட்சுமி பாடியுள்ளார். பாகுபலி படத்தில் கீரவாணி இசையில் ‘யாரு இவன் யாரு இவன்’ பாடல் இவர் குரலில் வேறு ஸ்டைலில் ஒலித்தது.

வேறென்ன சொல்ல... இது, வைக்கம் விஜயலட்சுமிக்கு கடவுள் அளித்த திருமணப் பரிசு!

- எம்.குமரேசன்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!