மின்கழிவுகளை சீலாம்பூர் நகரில் என்ன செய்கிறார்கள் ? #EWaste

கடைசியாக நீங்கள் ஒரு புதிய மொபைலை வாங்கியது எப்போது? இந்த நொடி உங்கள் வீட்டுக்குள் எத்தனை மொபைல்கள் இருக்கின்றன? அதில் எத்தனை நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தாரோ பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்?

மின்கழிவு

நாம் பயன்படுத்தாத மின்னணு பொருட்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் டெரா பைட் அளவுக்கு உயர்ந்துவிட்டது. இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு 18 லட்சம் டன் மின் கழிவுகளை நாம் கொட்டிக் கொண்டிருக்கிறோம். 2018ல் இது 30 லட்சத்தை எட்டிவிடும். அதை விட அதிர்ச்சியான தகவல், பல லட்சம் டன் மின்கழிவுகளை மற்ற நாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்துக் கொண்டிருக்கிறோம். குப்பையை எதற்கு இறக்குமதி செய்ய வேண்டும்?

மின்கழிவுகளில் இருந்து உதிரி பாகங்களை பிரித்தெடுத்து அதை மறுசுழற்சிக்கு உட்படுத்துவதுண்டு. அப்படி செய்வதில் பல ஆபத்துகள் இருக்கின்றன. சில சமயம் கதிர்வீச்சுகள் கூட இதில் சாத்தியம். தேவையான பொருட்களை பிரித்தெடுத்த பின் எதற்குமே பயன்படுத்தாத பொருட்களை மண்ணில் தான் கொட்ட வேண்டும். அது சுற்றுசூழலுக்கு கேடு. அதனால் பல முன்னேறிய நாடுகள் மின்கழிவுகளை சட்டத்துக்கு விரோதமாக நம் நாட்டுக்குள் கொட்டி விடுகின்றன. அதை, பிரித்தெடுக்கும் ஆபத்தான வேலையையும், அந்த மின்கழிவுகள் சுற்றுசூழலுக்கு ஏற்படுத்தும் பாதகங்களையும் நம் தலையில் சுமத்துகின்றன. வெகு சில நிறுவனங்கள் மட்டும்தான் முறையாக உரிமம் பெற்று மின்கழிவுகளை இறக்குமதி செய்கின்றன. மற்ற எல்லா இறக்குமதிகளுமே இல்லீகல் தான்.

மின்கழிவுகள் என்றதும் ஹாலிவுட் ஸ்டைலில்  பூமியை அழிக்க நினைக்கும் வேற்று கிரகவாசிகளின் சதி திட்டம் என நினைக்க வேண்டாம். நாம் தூக்கி எறியும் ரிமோட், மொபைல் சார்ஜர்கள், கேபிள்கள் தொடங்கி எல்லா தேவையற்ற மின் மற்றும் மின்னணு பொருட்கள் தான் மின்கழிவுகள். 

இப்படி நாம் உருவாக்கும் மற்றும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மின்கழிவுகள் டில்லிக்கு அருகில் இருக்கும் சீலாம்பூர் என்ற நகருக்குத்தான் வருகின்றன. இந்தியாவில் மின் கழிவுகளை கையாளும் மிகப்பெரிய இடம் சீலாம்பூர். சிறியதும் பெரியதுமாக 3000 மின் கழிவு கடைகள் இங்கே இருக்கின்றன. உலகம் முழுவதும் உருவாகும் மின்கழிவுகளில் 70 சதவிகிதம் சீலாம்பூருக்குதான் வருகின்றன. இன்னும் முறைப்படுத்தத்தபடாத இந்த தொழிலால் இந்தியா முழுவதும் ஒரு லட்சம் பேர் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் சீலாம்பூரில் மட்டும் 30000 பேருக்கும் மேல் இருக்கிறார்கள்.

சீலாம்பூர்

சீலாம்பூர் பகுதியில் வேலை செய்வதில் பெரும்பாலானோர் பதின்மவயதினர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் தினம் 200-300 ரூபாய் வருமானத்திற்காக குழந்தைகளும், இளைஞர்களும் இங்கே வேலை செய்கிறார்கள். இந்த இளைஞர்களின் தலைமுடி கூட தங்கம் போல் மின்னுகின்றன. இந்நகரின் காற்றில் கலந்திருக்கும் காப்பர்தான் அதற்கு காரணம். இவர்களின் வேலை, பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கும் காப்பரை பிரித்தெடுப்பது மட்டும்தான். அதன் பின் அவை காட்டுப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவதாக சொல்கிறார்கள். பெரும்பாலான மின்கழிவுகளில் இருக்கும் பாதரசம், ஈயம், கேட்மியம் போன்றவை விஷத்தன்மை உடையவை. இவற்றை மண்ணில் கொட்டுவதும், பூமிக்குள் புதைப்பதும் சுற்றுசூழலுக்கு தீங்கானது. 

சீலாம்பூரில், குடும்பம் குடும்பமாக சர்க்யூட் போர்டுகளில் இருந்து தங்கத்தையும், காப்பரையும் பிரித்தெடுக்கிறார்கள். ஆம், அதிர்ஷ்டம் இருந்தால், சில மின்னணு பொருட்களில் இருந்து தங்கம் கூட கிடைக்கலாம் என்கிறார்கள். ஒரு மதர்போர்டை பார்த்தாலே அது ஜப்பானில் தயாரித்ததா, சீனாவில் தயாரித்ததா என இந்த ஊரின் குழந்தைகள் கூட சொல்லிவிடுகிறார்கள். சீன பொருட்களை விட ஜப்பான் பொருட்களில் தங்கமும், நல்ல காப்பரும் கிடைக்கும் என்பது சீலாம்பூர் ரகசியம். தங்கத்தையும், காப்பர் கம்பிகளையும் எடுத்த பிறகு ஒட்டு மொத்த யூனிட்டையும் எரிக்கிறார்கள். பிளாஸ்டிக் உருக, எஞ்சியிருக்கும் மெட்டல்களை விற்று காசாக்குகிறார்கள்.

மின்கழிவுகளை கையாள்வது எளிதல்ல.பல குழந்தைகளின் கைகள் தினம் தினம் பிளாஸ்டிக் பொருட்களால் ரத்தத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றன.  சில மின்கழிவுகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் உயிரையே பறிக்கலாம். 2010 ஆம் ஆண்டு சீலாம்பூர் அருகே இருக்கும் மாயபுரி என்ற இடத்தில் நடந்த கதிர்வீச்சு விபத்தில் ஒருவர் இறந்துபோனார். பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இன்னமும் வேலைக்கு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இது போன்ற சம்பவங்களுக்கு பிறகு இந்திய அரசு விதிகளை இறுக்கியது. குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்துவது, குறைந்தபட்ச ஊதியம், பாதுகாப்பு வசதிகள் போன்றவற்றை அரசு தீவிரமாக கவனிக்க தொடங்கியிருக்கிறது. முறைப்படுத்தப்பட்ட மின்கழிவு நிறுவனங்கள் நிறைய வந்துவிட்டன. இவர்களால், சாதாரண வியாபாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆபத்தான இந்தத் தொழிலை முறைப்படுத்துவது முக்கியம். அதே சமயம், அதை கார்ப்பரேட் வசம் முழுமையாக ஒப்பட்டைப்பதும் ஆபத்தில் முடியலாம். அடுத்து வரும் ஆண்டுகளில் ராட்சஷ வேகத்தில் வளரும் இந்தத் துறையை கூடுதல் கவனத்தோடு அரசு கவனிக்க வேண்டும். மின்கழிவு நிறுவனங்களை சீரிய இடைவெளியில் அரசு கண்காணித்து உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். அவர்களின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வலியுறுத்த வேண்டும்.

மின்கழிவுகளில் இருந்து தங்கம் கிடைப்பதும் தகரம் கிடைப்பதும் அவரவர் அதிர்ஷ்டம் என்கிறார்கள் சீலாம்பூர்வாசிகள். அரசு என்ன எடுக்கப் போகிறது என்பதுதான் இப்போதைய கேள்வி. 

-கார்க்கிபவா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!