வெளியிடப்பட்ட நேரம்: 20:03 (24/01/2017)

கடைசி தொடர்பு:11:42 (25/01/2017)

ஆண்டின் தொடக்கத்தில் எப்படி திட்டமிட்டால் நிதியை சேமிக்கலாம்? #InvestmentTips

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து புது நிதி ஆண்டு தொடங்க இருக்கிறது. மாதச் சம்பளம் வாங்கும் சாமானியர்களுக்கு, இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. காரணம் வருமானவரி என்கிற ஒரு விஷயம் அவர்களுக்கு நிதி ஆண்டை  நிச்சயமாக நினைவுபடுத்தும். இப்படி நினைவுபடுத்தப்படும் நிதி ஆண்டுகளை, நிதித் திட்டமிடல் உதவியுடன் எப்படி கடப்பது என்பதைத் தான் பார்க்க இருக்கிறோம்.

நிதித் திட்டமிடல், Financial planning

எதற்கு நிதி திட்டமிடல் வேண்டும்...

ஜனவரி மாதம் தொடங்கினால் அனைவருக்கும் நினைவில் வரும் ஒரு கொண்டாட்டம் நியூ இயர். ஆனால் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் என்ற உடன்  ஜனவரி, பிப்ரவரி..... போன்ற மாதங்களில் கவனம் பெறுவது வரி என்ற வார்த்தைதான். பொதுவாக  30% வரி செலுத்தும் உயர் வகுப்பினரிடம் பண வரத்து சீராகவும், நிலையாகவும் இருக்கும் அல்லது இருப்பது போல  திட்டமிட்டுக் கொள்கிறார்கள்.
மீதமுள்ள நடுத்தர பிரிவினர்களுக்கு பண வரத்து குறைகிறது அல்லது திட்டமிடாமல் பணத்தை விரையம் செய்கிறார்கள்.

வருடத்தின் 12 மாதங்களில் ஒன்பது மாதம் வரை வந்த பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்டு மீதமுள்ள இந்த மூன்று மாதங்களில் மட்டும் வரி கட்டாமல் இருக்க ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று, ஏதோ ஒரு முதலீட்டை மேற்கொள்கிறார்கள். அதுவும் 10 சதவிகித வரியை சேமிக்க மீதமுள்ள 90 சதவிகிதத்தையும் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.

இப்படி முதலீடு செய்வது சரியானதா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம். மார்ச் மாதம் வரி செலுத்தும் விஷயத்தை தவிர்ப்பதைத்  தொடர்ந்து  அடுத்தடுத்த மாதங்களில் குழந்தைகளின் பள்ளி புத்தகங்கள், கல்லூரி கட்டணங்கள், விடுதி கட்டணங்கள் போன்றவைகளை செலுத்த நம் கையில் பணம் இருக்காது. நம் மனைவி, குழந்தை அப்பா, அம்மா, உறவினர் என்று யாரோ ஒரு நெருங்கிய உறவினருக்கு திடீரென ஒரு விபத்து என்றால் அதற்கு யாரிடம் சென்று பணம் கேட்பீர்கள்.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்கத் தான் நிதி திட்டமிடல் அவசியம்.

முதல் பாகம் :எப்படி நிதி திட்டமிடுவது... இப்படி திட்டமிட்டுத்தான் பாருங்களேன்...?

போரில் மட்டுமல்ல பொருளாதாரத்திலும் நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமான விஷயம். நிதி திட்டமிடலில் பட்ஜெட் தான் முதல் பாகம். எனவே முதலில் நம்மை பொருளாதார ரீதியில் பாதுகாத்துக் கொள்ள நமக்கு வரும் வருமானத்தை ஆண்டின் தொடக்கத்திலேயே (ஏப்ரலில்) கணக்கிட்டு சிறிய அளவில் பட்ஜெட் தயார் செய்யுங்கள். இந்த பட்ஜெட்டில் வருங்காலத்தில் உங்களுக்கு வரப்போகும் கூடுதல் கமிஷன், சம்பள உயர்வு, ஊக்குவிப்புத் தொகை போன்றவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

மாதம் பிறந்த உடன் வந்த சம்பளத்தில், அடுத்த ஒரு வருடத்துக்கு தடுக்க இயலாத காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டின் கட்டாய செலவுகளான கல்விக் கட்டணங்கள்,  இன்ஷூரன்ஸ் பிரீமியம், வங்கிக்கு செலுத்தும் இ.எம்.ஐ.யில் 25 - 30 சதவீதம், ஆண்டின் இறுதியில் செலுத்த வேண்டிய வரிகள் போன்றவைகளை கணவன் - மனைவி இருவரின் பெயரிலும் ஒரு ஜாயின்ட் அக்கவுன்ட் தொடங்கி அதில் பணத்தை செலுத்துங்கள். இந்த பணம் எந்த செலவுகளுக்குக்காக கணக்கில் இருக்கிறதோ அந்த செலவுகளுக்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

2015 ஏப்ரல் மாதம் தொடங்கி 2016 மார்ச் வரையான ஒரு வருட இறுதியில் உங்கள் கையில் ரூபாய் 50,000 - 2,50,000 வரை எமர்ஜென்சி ஃபண்டாக கட்டாயம் இருக்க வேண்டும். இதற்கு தகுந்தாற் போல் மாதாமாதம் ஒரு சிறு தொகையை ஆர்டியில் செலுத்தி வரலாம் அல்லது லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். உங்கள் முதலீடு ஃபிக்சட் டெபாசிட்டுக்கு இணையாக வருமானத்தை ஈட்டும். அது மட்டுமின்றி எப்போது வேண்டுமானாலும் உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். எஃப்.டியை போல் குறிப்பிட்ட முதலீட்டு காலம் வரை வைத்திருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.

இப்படி பட்ஜெட் போட்டு சேமிப்பது முதலில் கடினமாகத் தான் இருக்கும். ஆனால் மேற்கூறிய படி திட்டமிட்டு சேமித்து வந்தால் 3 - 5 ஆண்டுகள் கழிந்து அடுத்த ஒரு வருடத்தில் செய்யப்போகும் கட்டாய செலவுகளான பள்ளி, கல்லூரி கட்டணங்கள், இ.எம்.ஐ-க்கு தேவையான தொகை உங்கள் கையில் இருக்க வேண்டும். அதே போல் எமர்ஜென்சி ஃபண்டாகவும் கையில் 2.5 லட்சம் ரூபாயும் இருக்கும் அப்படி இருந்தால் உங்கள் திட்டமிடல் சரியான பாதையில் செல்கிறது என்பதை நீங்களே உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

நிதித் திட்டமிடல், Financial planning

இரண்டாவது பாகம் : செலவுகளை கட்டுப்படுத்துதல்...

மேற்கூறிய கட்டாய செலவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நாம் அன்றாடம் செய்யும் செலவுகளான உணவு, உடை, எரிபொருள், லைஃப் ஸ்டைல் பொருட்கள் போன்றவைகளில் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். வாரம் இரண்டு முறை அசைவ உணவு உண்பவர்கள் வாரம் ஒரு முறையாகக் குறைத்துக் கொள்ளலாம். ஆட்டு இறைச்சி உண்பவர்கள் கோழி இறைச்சியை உண்ணலாம். ஒரு சட்டை 3,000 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்ட பெரிய பிராண்டட் ரகத்தில் எடுப்பதற்கு பதில், பாதி விலையில் ஒரு நல்ல இந்திய பிராண்டின் சட்டையை வாங்கலாம்.  தெரு முனையில் இருக்கும் கடைக்கு செல்வதற்கு கூட இரு சக்கர வாகனத்தை எடுப்பதற்கு பதில் நடக்கலாம். இதனால் மருத்துவனைக்கு செய்யும் செலவும், எரிபொருளுக்கு செய்யும் செலவும் மிச்சம். உங்கள் உடலுக்கு ஆரோக்கியமும் கூட. ஆமா இப்படி மிச்சம் பண்ணா கோடி ரூபாயா மிச்சமாகும் என்று கேட்காதீர்கள். இப்படி நமக்கு தெரிந்த வழிகளில் பணத்தைச் சிறுகசிறுகச் சேமித்தாலே அது எதிர்காலத்தில் ஒரு பெரிய தொகையாகக் கிடைக்கும்.......மிச்சப்படுத்துங்கள்...... கஞ்சத்தனம் காட்டாதீர்கள்

மூன்றாவது பாகம் : இலக்குகளையும் தேவைகளையும் உணருங்கள்...

நம்மில் பலருக்கு எது தேவை, எது இலக்கு என்பதே தெரியாமல் இருக்கிறது. உதாரணமாக உங்கள் தாய் தந்தைக்கு மருத்துவ கிகிச்சை, குழந்தைகளின் கல்வி, திருமணம், உங்கள் ஓய்வு காலத்துக்குத் தேவையான பணத்தை சேமிப்பது போன்றவை உங்கள் கடமை. இவைகளை குறிப்பிட்ட காலத்தில் செய்து முடித்தே ஆக வேண்டும். இவை தான் தேவைகள்.
சொந்த வீடு வாங்க விரும்புவது, இமயமலைக்கு யாத்திரை செல்ல விரும்புவது, வாழ்வில் ஒரு முறையாவது லாஸ்வேகாஸுக்கு போக வேண்டும், ஆடி காரை வாங்க விரும்புவது போன்றவைகள் உங்கள் இலக்குகள். இதை நீங்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று எந்த கட்டாயம் இல்லை. இதற்கு ஒரு குறிப்பிட்ட கால வரம்பும் இல்லை.

இவைகளில் எது முக்கியம், முக்கியமானவைகளை நிறைவேற்ற எவ்வளவு செலவாகும் என்பதை பட்டியலிடுங்கள். இது தான் நிதித் திட்டமிடலின் முக்கிய பாகம் அதற்குத் தகுந்தாற் போல் உங்கள் முதலீடுகளை செய்யுங்கள். இவையெல்லாம் ஓ.கே. ஆனால் நான் சம்பாதிப்பதை நிறுத்திவிட்டால் என் குடும்பம் அவ்வளவு தான், என்னை நம்பித் தான் குடும்பம் இருக்கிறது என்றால் வேலைக்கு போகத் தொடங்கியதிலிருந்தே ஒரு நல்ல தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் அல்லது லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்ளுங்கள். வேலைக்குச் சேர்ந்த அன்று எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் இப்போது உடனடியாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையானதை நீங்களே செய்து கொண்டால் தான் உங்களுக்கும், உங்களை சார்ந்திருப்பவர்களுக்கு நல்லது.

- மு.சா.கெளதமன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்