வெளியிடப்பட்ட நேரம்: 04:06 (27/01/2017)

கடைசி தொடர்பு:04:09 (27/01/2017)

பிஜேபியுடன் கூட்டணி இல்லை - உத்தவ் தாக்கரே திட்டவட்டம்!

மும்பையில் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில், பிஜேபியுடன் கூட்டணி இல்லை என சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாகத் அறிவித்துள்ளார். இதற்கான காரணமாக, ''சிவசேனாவின் கடந்த 25 ஆண்டுகளை, கூட்டணியை நம்பி வீணடித்து விட்டோம். மேலும் பதவிக்காகப் பேராசை படுபவர்கள் நாங்கள் அல்ல '' என்று கூறியுள்ளார். மேலும் பிஜேபி தங்களை எதிர்கொள்ள குண்டர்களை (Gundas) பணியமர்த்தியுள்ளதாகவும், எனவே அவர்களுக்கான பதிலடியாக தங்களிடம் சிப்பாய்கள் (Sainik) இருப்பதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று (ஜனவரி 26, 2017) தனது அரசியல் தொடர்பான முடிவு பற்றிப் பேசுவதாகச் சொல்லியிருந்த உத்தவ் தாக்கரே, தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

பிஜேபி எம்பியான கிரித் சொமையா, ''மும்பை நகராட்சியை ஊழல் அற்றதாக மாற்றுவது சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, நாங்கள் எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்; வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதே எங்கள் நோக்கம்'' என ட்விட்டரில் உடனடியாகப் பதிவிட்டுள்ளார். மும்பை நகராட்சி தேர்தல், வருகின்ற பிப்ரவரி 21, 2017 அன்று நடைபெறுகிறது. அதன் முடிவுகள், பிப்ரவரி 23, 2017 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேவின் இந்த முடிவைப் பற்றி, பிஜேபியின் மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்ட போது, '' ஒரு வேளை கூட்டணி ஏற்பட்டால், சிவசேனா எங்களுக்காகச் சுமார் 90 முதல் 95 சீட்களை ஒதுக்கியிருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்றாலும், எந்தெந்த வார்டுகளில் போட்டியிடுவது தொடர்பாக நிச்சயம் பெரிய சர்ச்சை ஏற்பட்டிருக்கும்'' என்றார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க