இன்ஸ்டாகிராமில் கஞ்சா சாக்லெட் விற்பனை... இந்தியாவிலும் நடக்கிறதா? | This doctor used Instagram to sell Marijuana chocolates

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (01/02/2017)

கடைசி தொடர்பு:12:20 (01/02/2017)

இன்ஸ்டாகிராமில் கஞ்சா சாக்லெட் விற்பனை... இந்தியாவிலும் நடக்கிறதா?


இன்ஸ்டாகிராம் மூலம் "போதை" சாக்லெட் வியாபாரம்.... டாக்டரை கைது செய்த காவல்துறையினர்.

இன்ஸ்டா

ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவரை இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதற்காக கைதுசெய்துள்ளனர் காவல்துறையினர். இன்ஸ்டாகிராம் பயன்படுத்தினால்கூட காவல்துறையினர் கைதுசெய்வார்களா என நீங்கள் யோசிப்பது புரிகிறது. அந்த டாக்டர் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தியது, போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக...

மொஹித் சுஜத் அலிகான் என்பவரை ரஞ்சன்கொன்டா தனிப்படை காவல்துறையினர், சென்ற வாரம் சுற்றிவளைத்தனர். அவரிடமிருந்து கஞ்சாவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகளும், கேக்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பார்சல்களில் சில வேலூரைச் சேர்ந்த ஒருவருக்கு அனுப்புவதற்குத் தயாராக இருந்தவை.

கடந்த 2006-ல் மருத்தவப் படிப்பை முடித்த  மொஹித் சுஜத் அலிகானுக்கு, தெலங்கானா அரசால் நிர்வகிக்கப்படும் நிசாம் மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது. அங்கே, 2014-ம் ஆண்டு வரை பணிபுரிந்தவர், அந்த வேலையை விட்டுவிட்டு ஃபிட்னஸ் சென்டர் ஒன்றை ஆரம்பித்து, டாக்டர் என்ற முறையில் ஆலோசனைகளையும் வழங்கிவந்தார். இடையில் பணக்கஷ்டம் ஏற்படவே, விரைவாக பணம் சம்பாதிக்க, போதைப் பொருட்களைப் பயன்படுத்தி சாக்லேட் தயாரிக்கும் விபரீத எண்ணம் தோன்றியது. சாக்லேட்டை தாயாரித்தார். அதை விற்பனை செய்ய, இளைஞர்கள் பரவலாகப் பயன்படுத்தும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை அவர் தேர்வுசெய்தார். அதில், இவற்றை விற்பனை செய்வதற்காகாவே தனியாக ஒரு பக்கத்தை உருவாக்கியிருக்கிறார். அதில், அவர் எப்படி விளம்பரம் செய்தார் தெரியுமா...


"Premium handcrafted Nutella/chocolate based edibles infused with purified concentrated extracts; custom made to individual requirement..”


ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பப்படி பிரத்யேகமாக தயாரித்துக் கொடுப்போம் என்பதுதான் க்ளூ. இதன் ‘ஆழமான’ அர்த்தத்தைப் புரிந்தவர்கள் இவரை தொடர்புகொள்ள, வியாபாரம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. இந்த சாக்லேட்டை சாப்பிட்டவர்கள் 6 முதல் 8 மணி நேரம் மயக்க நிலையில்தான் இருப்பார்கள். ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு கொரியர் மூலம் டெலிவரி செய்திருக்கிறார். இன்ஸ்டாவில் நாளுக்கு நாள் கஸ்டமர்கள் அதிகரித்த வேளையில்தான் காவல்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டார்..
அதன் உட்பொருட்களுக்கு தகுந்தவாறு 500 ரூபாயில் இருந்து 1,800 ரூபாய் வரை விற்பனைசெய்த சாக்லேட்களுக்கு தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 3000 ரெகுலர் கஸ்டமர்கள் இருப்பதை அறிந்த காவல்துறையினர், அவரிடம் மேலும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கஞ்சா சாக்லெட்

இளைஞர்கள் அதிகம் உலவும் ஒரு சமூக வலைதளம் இன்ஸ்டாகிராம். இதில், போதைப் பொருட்களை விற்கும் ஐடியா இவருக்கு எப்படி வந்திருக்கும் என யோசித்தோம். மற்ற நாடுகளில் என்ன நிலவரம் என தேடிப் பார்த்ததில் அதிர்ச்சி தரும் விஷயங்கள் தெரியவந்தன. பல்வேறு நாடுகளில் இன்ஸ்டாகிராம் மூலம் போதைப்பொருட்கள்  விற்பனை நடந்துவருகிறது. காளான், மாத்திரைகள், சிரப் என பல வடிவங்களில் போதை பொருட்களை விற்பனை செய்யப்படுகின்றன. அவ்வபோது இதுபோன்ற அக்கவுன்ட்களை பயனர்கள் ரிப்போர்ட் செய்து மூடவைத்திருக்கிறார்கள். ஆனால், புதுப்புது கணக்கு மூலம் தொடர்ந்து இது நடந்துகொண்டுதான் இருக்கிறது. கூகுள் நிறுவனம் தனது தளத்தில் வரும் போலியான, இல்லீகலான விளம்பரங்களை ஒவ்வொரு ஆண்டும் தடைசெய்துவருகிறது

35 வயதாகும் மொஹித் சுஜத் அலிகானிடம் கஞ்சா கலக்கப்பட்ட சாக்லேட்கள், லேப்டாப், மொபைல் மற்றும் சில ஆயிரம் பணத்தை போலீஸார் கைப்பற்றினர். 


மு.ராஜேஷ்
(மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்