வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (01/02/2017)

கடைசி தொடர்பு:13:33 (01/02/2017)

'கஜினி' கல்பனா போல... நிஜத்தில் செய்த அனுராதாவுக்கு கிடைத்தது பத்மஸ்ரீ!

கஜினி திரைப்படத்தில் இளம் பெண்களை ஒரு கும்பல் கடத்தி செல்லும். அதனை தடுக்க முயல்வார் அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் அசின். அந்தக் கும்பலாலேயே அசின் அடித்துக் கொலை செய்யப்படுவார். அதுபோலவே ஒரு நிஜ கேரக்டர் வாழ்ந்து கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? நித்தமும் மிரட்டலையும் கொலை முயற்சியையும் எதிர் கொள்ளும் அந்த மனுஷியின் பெயர் அனுராதா கொய்ராலா.

பத்மஸ்ரீ விருது

உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆனாலும் பயந்தது இல்லை. பெண் குழந்தைகளை கடத்துவதை டார்கெட்டாக வைத்து செயல்படும் உலக மாபியாவின் முதல் டார்கெட் இவர்தான்... இதுவரை 13 ஆயிரம் பெண் குழந்தைகளை கடத்தல் கும்பல்களிடம் இருந்து மீட்டிருக்கிறார்  இந்த நிஜ நாயகி. 

குழந்தைகள் கடத்துவது பற்றித் தகவல் கிடைத்தால் போலீஸ் வருகிறதோ... இல்லையோ அனுராதா சம்பவ இடத்தில் இருப்பார். கடந்த 2010ம் ஆண்டே சி.என்.என். இவரை அடையாளம் கண்டுகொண்டது. அந்த ஆண்டுக்கான சிறந்த பெண்மணியாக அனுராதா கொய்ராலா சி.என்.என். நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டிருந்தார். விழா மேடையில், அனுராதாவை அறிமுகப்படுத்தியவர் பாலிவுட் நடிகை டெமி மூர். எளிமையான முகத்துடன் அனுராதா மேடையில் நின்ற போது, இவரா அந்த 'தைரிய பெண்மணி' என்று அரங்கமே வியப்புடனே பார்த்தது.

பெண் குழந்தைகள் கடத்தலால் நேபாளம் சந்திக்கும் கஷ்டங்களையும் சமூக அவலங்களையும்  தான் சந்தித்த சவால்களை பற்றியும் அனுராதா மிக எளிமையாக பேசினார்.  இறுதியில் 'நமது மகள்களை காக்க உங்கள் கரங்களை நீட்டுங்கள்!’ என்ற வேண்டுகோளை அனுராதா வைத்த போது, அரங்கத்தில் நிறைந்நிருந்த பல ஹாலிவுட் நடிகைகளின் கண்களில் நீர் வழிந்து ஓடிக் கொண்டிருந்தது.

சி.என்.என். விருதுக்கு முன்னரே ' உலகின் மிகத் தைரியமான பெண்மணி ' என்ற விருதையும் அனுராதா பெற்றிருந்தார். வெளிநாடுகள் எல்லாம் விருதுகள் வழங்கி முடித்த பின்தானே நாம் கண்டு கொள்வோம். இப்போது மத்திய அரசும் அனுராதாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.  லேட்டாக வந்தாலும் தகுதியானவருக்கு கிடைத்திருக்கிறது. 

கடந்த 1949ம் ஆண்டு பிறந்த அனுராதா, பள்ளி ஆசிரியை. காத்மண்டுவில் உள்ள பள்ளியில் பணி புரிந்தார்.  இந்தோ- நேபாளம் பார்டரில் பெண் குழந்தைகள் கடத்தல் அதிகம், குறிப்பாக மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களில் பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகளை குறிவைத்து கடத்தப்படுவார்கள். அந்தக் குழந்தைகள்  கசக்கி எறியப்பட்டவர்களாக நேபாளத்தில் அலைவதை பார்த்த அனுராதாவுக்கு மனதை பிசைந்தது. சொல்லப் போனால் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு சீன பெண்கள் எப்படி பாலியல் அடிமைகளாக இருந்தார்களோ அப்படித்தான் இந்திய பாலியல் களங்களுக்கு நேபாளப் பெண்கள் அனுப்பப்பட்டு வந்தார்கள். 

இந்த அநியாயத்தை  தடுத்தேயாக வேண்டுமென்ற வெறி அனுராதாவுக்கு  ஏற்பட்டது. அதே வெறியுடன் களம் இறங்கினார். பெண் குழந்தைகளை வேட்டையாடுபவர்களை வேட்டையாடத் தொடங்கினார். நேபாள அரசும், காவல்துறையும் துணைக்கு நின்றன. பாலியல் மாபியாவுக்கு எதிரியும் ஆனார். பல முறை கொலை முயற்சியும் நடந்திருக்கிறது. இப்போது அனுராதா உயிருடன் இருப்பதே ஒரு வியப்புதான். 

பாலியல் கும்பல்களிடம் இருந்து பெண் குழந்தைகளை மீட்டாலும் அனுராதாவுக்கு மற்றொரு சவால் காத்திருந்தது. பாலியல் தொழிலில் ஈடுபட்ட சிறுமிகளை மீண்டும் வீட்டில் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அந்த தருணத்தில் உருவானதுதான்  'தாய் நேபாளம்' அமைப்பு. தனது சேமிப்பில் காத்மண்டுவில் ஒரு சிறிய வீட்டில்தான் முதலில் இந்த அமைப்பைத் தொடங்கினார். ஆதரவு இல்லாமல் தவிக்கும் எந்தப் பெண் குழந்தையையும் 'தாய் நேபாளம்' அமைப்பு அரவணைத்துக் கொள்ளும்.

தற்போது 11 இல்லங்கள், மருத்துவமனைகள், கவுன்சிலிங் மையங்கள் என்று 'தாய் நேபாளம் ' அமைப்பு இயங்குகிறது. பெண் குழந்தைகளை மீட்பதோடு பணி முடிந்து விட்டதாக அனுராதா கருதவில்லை. பாலியல் நோயால் பாதிக்கப்பட்டு என்ன செய்வதென்றே தெரியாமல் சுற்றித் திரியும் சிறுமிகளைக் கூட முற்றிலும் குணப்படுத்தி, கவுன்சிலிங் கொடுத்து, சாதாரண வாழ்கைக்கு திரும்பும் வரை தாய் போல பார்த்துக் கொள்கிறார். 

பார்க்க சாதாரணமாக தோன்றும் அனுராதா... அசாதாரண பெண்மணி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்