வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (02/02/2017)

கடைசி தொடர்பு:12:21 (02/02/2017)

'நாங்கள் ஆப்கானிஸ்தானியர்கள் தான். ஆனால் தீவிரவாதிகள் அல்ல.!' புதுச்சேரி பல்கலை மாணவர்கள்

புதுவை :  “ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எங்களுக்குத் தீவிரவாதி முத்திரையைக் குத்துகிறது பல்கலை நிர்வாகம்” என்று கதறுகிறார்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆப்கனிஸ்தான் மாணவர்கள்.

புதுவை, காலாப்பட்டில் இயங்கி வரும் இந்த மத்தியப் பல்கலைக் கழகத்தில் புதுச்சேரி மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்களும் தங்கிப் படித்து வருகிறார்கள். அதேபோல பல்வேறு அயல் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு படித்து வருகிறார்கள். இதற்கென தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு சார்பில் தனி பிரிவு பல்கலை வளாகத்தில் இயங்குகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கொண்ட இந்தப் பல்கலைக் கழகத்தில் சர்ச்சைகளுக்கு சிறிதும் பஞ்சமே இல்லை. ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு, சி.பி.ஐ. விசாரணை, பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள், பாதுகாப்பற்ற பல்கலைக்கழகம் என பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம்.

இந்நிலையில் இரண்டாம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் ஆப்கன் மாணவர், பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், தெற்காசியக் கூட்டமைப்புத் தலைவர் போன்றவர்களுக்கு அனுப்பியிருக்கும் புகார் கடிதம் கல்வியாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

அந்தக் கடிதத்தில், “ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினால் எங்களது துறைத்தலைவர் எங்களை தீவிரவாதி போல சித்தரித்து அவமதிக்கிறார். இதன்மூலம் சமூக ரீதியாகவும், சக மாணவர்களிடம் இருந்தும் எங்களைத் தனிமைப்படுத்துவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். இது எங்களது படிப்பை மட்டுமல்லாமல் சமூக வாழ்க்கையையும் மிகவும் பாதித்திருக்கின்றது. யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத, இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை குலைக்கும் இந்த செயலில் உடனே தலையிட்டு சம்மந்தப்பட்டத் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறோம்.

இந்தியாவில் சிறந்த உயர்கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் இங்கே படிக்க வந்தோம். எங்கள் நாட்டு அரசாங்கம் எங்களது விருப்பத்தில் பேரில் இங்கே அனுப்பி படிக்க வைக்கிறது. ஆனால் நாங்கள் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் மற்ற நாட்டு மாணவர்களை நடத்துவதைவிட மிக மோசமாக நடத்துகிறார்கள். தீவிரவாதியாக சித்தரித்து அவமானப்படுத்துகிறார்கள். மனிதாபிமானமற்ற செயல்கள் தொடர்ந்து எங்கள் மீது திணிக்கப்படுகின்றன.

எங்கள் நாட்டைக் காரணம் காட்டி தனிமைப்படுத்துவதோடு, நாங்கள் மோசமானவர்கள் என்பது போல சக மாணவர்களும் நடந்து கொள்வதற்கு துறைத் தலைவர் ஏ.சுப்பிரமணியன் ராஜுதான் காரணம். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினால் இவர் காட்டும் பாகுபாட்டால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறோம். நாங்கள் நன்றாகப் படித்தாலும் வேண்டுமென்றே எங்களுக்கு மதிப்பெண்களைக் குறைத்துப் போட்டு வஞ்சிக்கிறார். அதுமட்டுமல்லாமல் எங்களுக்கு வரவேண்டிய கல்வி உதவித் தொகையையும் தடுத்து நிறுத்தி வஞ்சித்து வருகிறார். எங்களுடைய எதிர்காலைத்தையே கேள்விக் குறியாக்கி வரும் துறைத் தலைவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்மந்தப்பட்ட மாணவர்களிடம் நாம் பேசினோம். “எந்த நாட்டுக்கு சென்றாலும் மாணவர்களுக்கு மாணவர்கள்தான் ஆதரவாக நிற்பார்கள். ஆனால் நாங்கள் சகோதரர்களாக நினைக்கும் அவர்களே எங்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். யார் ஆதரவும் இல்லாமல் நாங்கள் தனியாக இருக்கிறோம். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள், முஸ்லிம்கள் என்றாலே தீவிர வாதிகள் தானா ? இந்தியாவில் இருந்து இப்படி ஒன்றை எங்களால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை," என சொன்னார்கள்.

இதுகுறித்துப் பல்கலைக்கழக பதிவாளர் ராமச்சந்திரனை தொடர்பு கொண்டோம், “சம்மந்தப்பட்ட பேராசியரியர் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறார். மாணவர்கள் கொடுத்த புகார் குறித்து விசாரிக்க குழு அமைத்திருக்கிறோம். விசாரித்து வருகிறோம்” என்றார்.
கல்வி நிறுவனத்தில் பாகுபாடு காட்டப்பட்டால் நிச்சயம் அதை ஏற்க முடியாது.

- ஜெ.முருகன்,

படங்கள்: அ.குரூஸ்தனம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்