பத்மஸ்ரீ விருது பெற்ற பல்பீர் சிங் சீச்சேவால் யார்? என்ன செய்தார்?

பஞ்சாப்பில் கிட்டத்தட்ட அழியும் நிலைக்குச் சென்று விட்ட நதி ஒன்றை 10 ஆண்டுகளாக போராடி மீட்டெடுத்தவருக்கு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. 

நதிகளை காப்பாற்றுவதுதான் நம் முன் நிற்கும் மிகப் பெரிய சவால். தமிழகத்தைப் பொறுத்த வரை நம் கண் முன்னே அழிந்த நதிகள் ஏராளம். கூவம் முதல் நொய்யல் வரை சொல்லிக் கொண்டே போகலாம். வைகை, தாமிரபரணி கூட அழிவை நோக்கித்தான் சென்றுக் கொண்டிருக்கின்றன. கேரளத்தில் நதிகளில் இருந்து ஒரு பிடி மண்ணை அள்ளி விட முடியாது. அந்தளவுக்கு அந்த மாநிலத்தில் சட்ட திட்டங்கள் இருக்கின்றன. ஆள்பவர்களும், மக்களும் அதன் முக்கியத்துவம் உணர்ந்து மதிப்பு கொடுத்துவருகிறார்கள்.

நதியை மீட்டெடுத்தவருக்கு பத்மஸ்ரீ விருது

ஆனால், தமிழகத்தின் நிலையோ வேறு. மாநில அரசே ஆற்று மணலை அள்ள குத்தகைக்கு விடுகிற நிலை. ஒரு அடிக்குதான் மண் அள்ள வேண்டுமென்று அனுமதி வாங்கி விட்டு நதியை மொட்டை அடிக்கும் வேலையைப் பலரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  காவிரி ஆற்றில் மண் அள்ள நிற்கும் லாரிகளை பார்த்தால் கண்ணீரே வந்து விடுகிறது. நாம் நினைத்தாலும் ஒரு பிடி மண்ணை நம்மால் உருவாக்கி விட முடியாது. மதிப்பு மிக்க மண்ணையும் நதிகளையும் இழப்பது பற்றி அக்கறை இல்லாமல் இது வரை வாழ்ந்து விட்டோம். இனியாவது நதிகளைக் காப்பது பற்றிய விழிப்பு உணர்வு நமக்குத் தேவை. 

பஞ்சாப்பில் காலி பெய்ன் என்ற பெயரில் நதி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. நமது தாமிரபரணியை போல 160 கி.மீ தொலைவே ஓடக் கூடிய ஒரு சிறிய நதி. நெல்லை, தூத்துக்குடியை வளப்படுத்தும் தாமிரபரணி போல பியாஸ், தோபா பகுதிகளுக்கு காளி பெய்ன் நதிதான் ஒரே நீராதாரம். தற்போது நெல்லையை தாண்டும் போதே தாமிரபரணி கழிவுநீர் ஆறாக மாறி வருவதைப் பார்க்கலாம். அதுபோலவே காளி பெய்ன் நதியில் அத்தனை தொழிற்சாலைகளின் கழிவுகளும் வந்து இணைந்தன. விளைவு - நதி, கழிவுநீர் ஓடையாக மாறியது. இந்த நதியை நீராதாரமாக கொண்டிருந்த பகுதி மக்கள், விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்கும் திணறத் தொடங்கினர். நிலத்தடி நீர் மட்டம் அதாள பாதாளத்திற்கு சென்று விட்டது.

இதே மாநிலத்தைச் சேர்ந்தவர்  பாபா பல்பீர் சிங் சீச்சேவால் (Balbir Singh Seechewal). சீக்கிய மதத்தைச் சார்ந்த ஆன்மீகவாதி. மக்கள் நதியின் முக்கியத்துவத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல், அதனைப் பாழ்படுத்தி விட்டு,  தற்போது தண்ணீருக்காக தவிப்பதையும் புரிந்து கொண்டார். கடந்த 2007ம் ஆண்டு காலி பெய்ன் நதியை மீட்டெடுக்கக் களத்தில் குதித்தார். நதிப்படுகையில் உள்ள கிராம மக்களை சந்தித்தார். நதியை காப்பாற்றுவதன் அவசியம் குறித்து பேசினார். 'நதிநீர் கழிவு நீராக மாறினால் நிலத்தடி நீர்மட்டம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்றும் விளக்கினார்.  தண்ணீருக்கு மாற்று என்பதே கிடையாது. காற்று போல, தண்ணீரையும் நம்மால் உருவாக்கி விட முடியாது. கிடைக்கும் நீரையும், அதன் தாயாக விளங்கும் நதிகளையும் காப்பற்றக் கைகொடுங்கள்' என மக்களைக் கேட்டுக் கொண்டார்.

நதிநீர்

பிரசாரம் செய்வதோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. நேரடியாக களம் இறங்கினார். காலி பெய்ன் நதியை காப்பாற்ற, நிதி திரட்டினார். 24 கிராமங்களை சேர்ந்த மக்கள், நதியை சுத்தப்படுத்த நிதியை அள்ளிக் கொடுத்தனர்.  நதியை தூய்மைப்படுத்த இளைஞர்கள் கூட்டத்தை சேர்த்தார். நதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட இளைஞர்களும் உடல் உழைப்பை நல்கினர். நதியின் கரையோரங்களில் குவிந்து கிடந்த அமலைகளை சுத்தப்படுத்தினர். கழிவு நீராக ஓடிக் கொண்டிருந்த தண்ணீரை சுத்தப்படுத்த, கழிவு நீர் சுத்தப்படுத்தும் அமைப்பை நதியின் அருகிலேயே ஏற்படுத்தினர். சுத்தப்படுத்திய கழிவு நீர், விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. முதலில் விவசாயிகளின் பிரச்னை தீர்ந்தது. 

அடுத்து, ஆற்றில் கழிவு நீரை விடும் தொழிற்சாலைகளிலும் கழிவு நீரை சுத்தப்படுத்தும் அமைப்பை ஏற்படுத்தச் செய்தார்.  இளைஞர்கள் நதியின் சுற்றுப்புறத்தை அழகுபடுத்தினர். இப்படி 160 கிலோ மீட்டர் தொலைவு ஓடும் காலி பெய்ன் நதியை சுத்தப்படுத்த பாபாவுக்கு 10 ஆண்டு காலம் பிடித்தது. காலி பெய்னுக்கு பாபா செய்த சேவைக்காக இப்போது மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. 

இப்போது பாபாவின் பெயர் 'ECO பாபா ' என மாறி விட்டது. காலி பெய்னும் நதி போல ஓடிக் கொண்டிருக்கிறது! 

-எம்.குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!