வெளியிடப்பட்ட நேரம்: 19:46 (02/02/2017)

கடைசி தொடர்பு:19:59 (02/02/2017)

உயிருக்குப் போராடிய இளைஞர்... போட்டோ எடுத்த பொதுமக்கள்..!

அண்மையில் உச்ச நீதிமன்றமே ஒரு விஷயத்தை தெளிவாகச் சொன்னது. ‛விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களையோ அல்லது அவர்களுக்கு உதவி புரிபவர்களையோ விசாரணை என்ற பெயரில் போலீசார் அலைக்கழிக்கக் கூடாது’ எனத் தெளிவாக  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து விபத்து, இடர்பாடுகளில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய முன்வருபவர்களுக்கான பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. 

விபத்து

விபத்தில் காயமடைந்தவர்களைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்பவர்களிடம் வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் முகவரியை பெற்றுக் கொள்ள வேண்டும். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தவர்களுக்கு அரசு தக்க சன்மானம் வழங்க முன்வர வேண்டும். பொதுமக்களை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி புரிபவர்களாக மாற்ற வேண்டும். விபத்து தொடர்பான விவரங்களை தொலைபேசி  மூலம் காவல் நிலையம் மற்றும் விபத்து சிகிச்சை மையத்ததைத் தொடர்பு கொண்டு ஒருவர் தெரிவித்தால், அவரது பெயர் மற்றும் சொந்த  விவரங்களைத் தெரிவிக்கக் கோரி கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இது தொடர்பாக ஒவ்வொரு மாநில அரசுகளும் அரசாணை வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கடைப்பிடிக்க வலியுறுத்தி, தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால், நீதிமன்றம் வலியுறுத்துகிறது, சட்டம் சொல்கிறது என்பதையெல்லாம் மீறி மக்களாக நினைத்தால்தான் சில விஷயங்கள் நடைபெறும். இல்லையென்றால், இந்த அறிவுறுத்தல்கள் அனைத்தும் வீண்தான். இதற்குச் சான்றாக இரு சம்பவங்கள் கர்நாடகாவில் நடந்துள்ளன.

 

மைசூரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி மகேஷ்குமாரும், ஓட்டுநர் லட்சுமணும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் வீடியோவும் போட்டோவும் எடுத்தார்களே தவிர, உயிருக்கு போராடிய இருவரையும் மீட்க எந்த உதவியும் செய்யவில்லை. ஆம்புலன்ஸ் வந்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. கவலைக்கிடமான நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

விபத்தில் சிக்கிய இளைஞர்

அதேபோல, கர்நாடகத்தில் நேற்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. கொப்பால் என்ற இடத்தில் சைக்கிளில் சென்ற அன்வர் என்ற 18 வயது இளைஞர் மீது பேருந்து மோதியது. விபத்தில் அன்வர்  படுகாயமடைந்தார்.. ரோட்டில் விழுந்து இளைஞர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடம்பில் இருந்து ரத்தம் வெளியேறி சாலையில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த வழியே கடந்தவர்கள் எல்லாம், கைகளில் இருந்த செல்போன்கள் மூலம் படமும் வீடியோவும் எடுத்துக் கொண்டிருந்தனர். யாரும் சிறுவனுக்கு உதவி புரிய முன் வரவில்லை. 

காலை 8.40 மணி அளவில் விபத்து நடந்தது. யாரும் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. 25 நிமிடங்கள் கழித்தே ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வந்தது. மருத்துவமனைக்கு 9.15 மணிக்கு கொண்டு செல்லப்பட்ட அன்வரின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் முடிந்த வரை முயற்சித்தனர். ஆனால், உடலில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியதால், அவரைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது. மக்களின் அலட்சியத்தாலும் பயத்தாலும் அநியாயமாக ஒரு இளைஞரின் உயிர் பறிபோனது.

அன்வர்தான் வீட்டுக்கு மூத்த பையன். அவரின் தந்தை இறந்து விட்டார். தாயும் இரு சகோதரர்களும் உள்ளனர். வறுமையான சூழலில் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இப்போது அந்த குடும்பம் அவரையும் இழந்து நிற்கிறது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் பொதுமக்கள் கொஞ்சம் முயன்றிருந்தால், காட்சிகள் மாறியிருக்க வாய்ப்புகள் இருந்தன. காவல்துறைக்கு பயந்து உதவாமல் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்துகிறது. ஆனாலும் பொதுமக்களுக்கு இந்தத் தருணங்களில் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற விழிப்பு உணர்வு குறைவாகவே உள்ளது. இதற்கு யார் காரணம் என்பதை ஆரோக்கியமாக விவாதிக்கலாமே?  

- எம்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்