மேலிடத்தைப் பகைத்த ராணுவ வீரர் சித்ரவதை...! கலங்கும் மனைவி

ராணுவத்தில் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக  புகார் அளித்த ராணுவ வீரரை அறையில் அடைத்து உயர் அதிகாரிகள் துன்புறுத்தி வருவதாக அவரது மனைவி ஷர்மிளா குற்றஞ்சாட்டியுள்ளார். 

பகதூர் யாதவ்

அண்மையில் தேஜ் பகதூர் யாதவ் என்ற ராணுவ வீரர் ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், ''ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களை ராணுவத்தின் உயர் அதிகாரிகள் வெளியே விற்பனை செய்கின்றனர். காலை உணவாக வீரர்களுக்கு ஒரு பரோட்டா, ஒரு டீ மட்டுமே வழங்கப்படுகிறது. பரோட்டாவுக்குத் தொட்டுக்கொள்ள எதுவும் இல்லை. வெறும் பரோட்டாவைத்தான் சாப்பிட வேண்டும். காய்கறிகள் கூட தருவதில்லை. இவ்வளவு ஏன்... ஊறுகாய் கூட தருவதில்லை. எல்லையில் தினமும் 11 மணி நேரம் பணி புரிய வேண்டும் ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்க முடியாது.

பணிநேரத்தில் நின்று கொண்டேதான் இருக்கவேண்டும். மதிய உணவாக ரொட்டியுடன் பருப்பு என்ற பெயரில் மஞ்சள் கலந்த தண்ணீரை உப்பு போட்டுத் தருகின்றனர். கொஞ்சம் ரொட்டி தருகிறார்கள். இதுதான் எங்களுக்கு வழங்கப்படும் உணவின் அதிகபட்சத் தரம். நின்று கொண்டே இருக்கும் எங்களால் இது போன்ற உணவுகளை சாப்பிட்டு, எப்படி பணியாற்ற முடியும்? பெரும்பாலான இரவுகளில் நாங்கள் வெறும் வயிற்றுடன் உறங்குகிறோம்’’ என விளாசியிருந்தார்.

ராணுவ முகாமில் நடக்கும் ஊழல் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிட்ட வீரர் தேஜ் பகதூர் யாதவ் முதலில் பணிமாற்றம் செய்யப்பட்டிருந்தார். எல்லையில் பணியாற்றி வந்த அவர், தலைமையகத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு குடிநீர்க் குழாய் போன்றவற்றை பராமரிக்கும் பிளம்பர் பணி வழங்கப்பட்டது. ' மனநிலை பாதிக்கப்பட்டவர், மதுவுக்கு அடிமையானவர் 'என்றும் ராணுவம் தரப்பில் விளக்கம் தரப்பட்டிருந்தது. 

ஷர்மிளா

குற்றம் சாட்டிய ராணுவ வீரர் தானே முன் வந்து ஓய்வு பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரது விண்ணப்பத்தை நேற்று ராணுவம் நிராகரித்து விட்டது. தற்போது அவரை ஓர் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக அவரது மனைவி வெளிப்படையாக புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு தேஜ் பதூர் யாதவின் மனைவி ஷர்மிளா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ''தன்னை உயர் அதிகாரிகள் துன்புறுத்தி வருவதாக என்னிடம் போனில் அழுகிறார். தயவு செய்து இந்த தகவலை அனைவருக்கும் தெரியப் படுத்துங்கள்'' என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும் ஷர்மிளா தனது கணவர் தன்னிடம் போனில் பேசிய விஷயங்களையும் பதிவு செய்து அதனையும் வெளியிட்டுள்ளார். எல்லை பாதுகாப்புப் படையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ''தற்போதைக்கு தேஜ் பகதூர் குறித்த வழக்கு விசாரணை ராணுவ நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதனால், இப்போதைக்கு அவரது விருப்ப ஓய்வை அனுமதிக்க சட்டத்தில் இடமில்லை. ஆனாலும் பகதூர் யாதவை அவரது மனைவியிடம் பேச அனுமதி அளித்திருக்கிறோம்''  என விளக்கம் அளித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் ரேவரி மாவட்டத்தில் ஷர்மிளா குடும்பத்துடன் வசித்து வருகிறார். ''என் கணவர் திரும்பி வருவது மட்டும்தான் என் ஒரே எதிர்பார்ப்பு. அவரைத் துன்புறுத்தி வருகின்றனர். அவரது விருப்ப ஓய்வை ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்.குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!