மூன்று புலிகள் ஒன்றாக நீர் அருந்திய அதிசய சோகம்! #Drought2017 | Indian tigers and water scarcity

வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (03/02/2017)

கடைசி தொடர்பு:14:19 (03/02/2017)

மூன்று புலிகள் ஒன்றாக நீர் அருந்திய அதிசய சோகம்! #Drought2017

புலிகள்

புலிகள் எப்போதும் ‘சிங்கிள்’ஆகவே வாழ விரும்பும். தனக்கென ஒரு எல்லைக் கோடு. அந்தக் கோட்டைத் தாண்டி இன்னொரு புலி வந்தால் சண்டைதான். இனப்பெருக்க காலத்தில் மட்டும் பெண் புலியைத் தேடி ஆண் புலி கோடு தாண்டும். இதையும் மீறி வழியில் இரண்டு புலிகள் சந்தித்துக் கொண்டால் கண்களாலே சின்னதாக ஒரு ஹாய். அவ்வளவுதான். அங்கேயும் பெரிய புலி, சிறிய புலிகளை டாமினேட் செய்ய நினைக்கும். ஒரு புலியை பார்ப்பதே பெரிய விஷயம். இதில் இரண்டு, மூன்று புலிகளை ஒன்றாக பார்ப்பதெல்லாம் இடைத்தேர்தல் இல்லாத காலங்களில் அமைச்சர்களை தொகுதியில் பார்ப்பது போலதான். அரிது அரிது.

புலி

அப்படியொரு புகைப்படம்தான் சென்ற வாரம் வெளியாகி ஆச்சர்யமூட்டியிருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் இருக்கும், பண்டிபூர் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில் மூன்று புலிகள் ஒன்றாக நீர் அருந்திக் கொண்டிருக்கின்றன. “டபுள் பைக்ல ஸ்டாண்டிங்ல வந்தவண்டா” என்ற விவேக் ஜோக்தான் நினைவுக்கு வருகிறது. நம்ம புலிகளுக்கு என்னதான் ஆச்சு?”

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் உலகெங்கும் இருந்த புலிகளின் எண்ணிக்கை 40,000. இன்று அது வெறும் 4000 ஆகிவிட்டது. அந்த நாலாயிரம் புலிகளில் 2000 புலிகள் வாழ்வது இந்தியக்காடுகளில். இந்த அழிவுக்கு காரணங்கள் என்ன?

புலி பற்கள் விலையுயர்ந்த ஆபரணம். ஆசியாவில் பல நாடுகளில் புலியின் பாகங்கள் மருந்தாகவும் பயன்படுகின்றன. புலியின் மீசைமுடி விஷத்தன்மை வாய்ந்தது என்கிறார்கள் மலேஷியர்கள். அதற்காகவே புலிகள் அங்கே தேவைப்படுகின்றன. வெறும் 20 டாலருக்கே இந்தியாவில் சில கிராமங்களில் புலிகள் கொல்லப்படுகின்றன. பின், அவை நமது நாட்டின் எல்லையைத்தாண்டி சீனாவுக்கு கொண்டு போகும்போது அதன் மதிப்பு 5 லட்சம் டாலராக மாறிவிடுகிறது. இதனாலும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஆனால், அதை விட மிகப்பெரிய அச்சுறுத்தல் மாறிவரும் காலநிலைதான். ராஜஸ்தான் மாநிலத்தில்தான் புலிகள் அதிகமாக வாழ்ந்து வந்தன. அந்தப் பகுதி மக்களுக்கு பல வழிகளில் புலிகள் பொருளாதார ஆதாயங்களை தந்திருக்கின்றன. ஆனால், ராஜஸ்தானில் தற்போது கிட்டத்தட்ட 17000 கிராமங்கள் தண்ணீர் பிரச்னையில் தவிக்கின்றன. இது மக்களை மட்டுமல்ல, புலிகளையுமே பாதித்திருக்கிறது. இந்தியா முழுவதும் இருக்கும் புலிகளை இந்தத் தண்ணீர் பிரச்னை பாதித்திருக்கிறது. அதனால்தான் குடிக்க தண்ணீர் கிடைத்ததும், தன் இயல்பை மறந்து மூன்று புலிகள் ஒன்றாக நீர் அருந்தும் காட்சி காண முடிகிறது. இந்தியா முழுவதுமே தண்ணீர் பிரச்னை இந்த ஆண்டு அதிகமாக காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்காகியிருக்கிறது. 2006ஆம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் மொத்தம் 76 புலிகளே இருந்தன. 2014ல் அந்த கணக்கு 224 ஆகிவிட்டது. இந்தியாவின் மற்ற புலிகள் சரணாலயங்கள் புலிகளை இழந்து வரும் சமயத்தில், இந்தச் செய்தி நம்பிக்கை அளிக்கிறது. 

புலிகளை காப்பாற்ற இந்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. புலிகள் சர்வதேச நாடுகளின் தேவைக்காக கொல்லப்படுவதை குறைக்க முடிந்திருக்கிறது. ஆனால், இயற்கையின் அச்சுறுத்தலால் பாதிக்கப்படும் புலிகள் இனத்தை எப்படி காப்பாற்றப்போகிறது என்பதுதான் இப்போதைய கேள்வி.

- கார்க்கிபவா


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்