ஐ.டி. நிறுவனங்களில் கன்னடர்களுக்கு அரசின் தனி இட ஒதுக்கீடா?

கன்னட

தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற விவாதம் பல காலமாகவே நடந்து வரும் ஒன்றுதான். கர்நாடகா மாநிலம் அதை மீண்டும் தூசு தட்ட வைத்திருக்கிறது. கன்னட வளர்ச்சி வாரியத்தின் சேர்மன் எஸ்.ஜி.சித்தராமையா தலைமையில் இயங்கும் பேனல் ஒன்று, தனியார்துறைகளில் உள்ளூர்வாசிகளுக்கே 100% இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

இதே போன்ற ஒரு பரிந்துரை சென்ற ஆண்டும் கர்நாடகா அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போது அந்தப் பட்டியலில் ஐ.டி மற்றும் பயோ-டெக்னாலஜி துறைகளுக்கு விலக்கு அளித்திருந்தது. இப்போது சித்தராமையா அளித்திருக்கும் பரிந்துரையில் இந்த இரண்டு துறைகளும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ப்ளூ காலர் வேலைகள் அனைத்தும் உள்ளூர்வாசிகளுக்கே கொடுக்கப்பட வேண்டும் என ஏற்கெனவே இருந்த விஷயத்தை ஊர்ஜிதம் செய்து, அதில் மற்ற தனியார் துறைகளையும் இந்த பேனல் சேர்த்து முதல்வரிடம் அளித்தது. உள்ளூர்வாசிகள் என்றால் குறைந்தது 15 ஆண்டுகள் கர்நாடாகாவில் வசித்தவர்கள் என்பது அடிப்படை.

கிளார்க் லெவல் வேலைகளில் 80 சதவிகிதமும், கேட்டகிரி ஏ எனப்படும் உயர்பதவிகளில் 65 சதவிகிதமும் உள்ளூர்வாசிகளுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. 

இந்தப் பரிந்துரை பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டிடம் பேசிய எஸ்.ஜி.சித்தராமையா “30 ஆண்டுகள் கழித்து இந்த விஷயத்தை மீண்டும் அலச வேண்டியிருக்கிறது. ஏனெனில் அப்போது ஐடி மற்றும் பயோ-டெக்னாலஜி போன்ற துறைகள் உருவாகியிருக்கவில்லை. கர்நாடக அரசின் பல சலுகைகளை இந்த நிறுவனங்கள் அனுபத்திருக்கின்றன. இப்போது, அந்த உதவிகளுக்கு அவர்கள் திரும்பிக் கொடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. அவர்கள் கட்டியிருக்கும் கட்டடங்கள் விவசாய நிலங்கள். அந்த விவசாயிகளுக்கு அவர்கள் வேலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. இப்போதாவது அவர்களுக்கு உரிய உரிமைகள் போய்ச் சேர வேண்டும்” என்றார்.

கர்நாடகா மாநிலத்தின் மொத்த வருவாயில் 19% ஐ.டி. துறை மூலம் வருகிறது. அரசு மென்பொருள் நிறுவனங்களை நிர்பந்தித்தால் அவர்கள் இடம் மாறிப்போவார்கள் என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால், அதையே தங்களுக்கு சாதகமாக ஐ.டி.நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதாக குற்றம் சாட்டினார் சித்தராமையா. 

அம்மாநிலத்தின் தொழிற்துறை அமைச்சர் சந்தோஷ் இந்த அறிக்கையை வரவேற்றுள்ளார். ஆனால், பலர் இதை நிராகரித்துள்ளார்கள். இதை அரசு ஏற்றாலும், நீதிமன்றத்துக்கு சென்றால் அது ஏற்கப்படாது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி அரசு சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை தனியார் நிறுவனங்களுக்கு கொண்டு வந்த போது நீதிமன்றம் தலையிட்டு அதை நிராகரித்ததை அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள்.

மென்பொருள் நிறுவனங்களுக்கான கூட்டமைப்பான NASSCOM அமைப்பின் தலைவர் சந்திரசேகர், சித்தராமையா அறிக்கை பற்றி கருத்து கூற மறுத்துவிட்டார். அரசு இது பற்றி ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அப்போது யோசிக்கலாம் என்பது நாஸ்காமின் நிலைப்பாடு. மாநிலத்தின் வருவாயை பெரிதும் பாதிக்கும் விஷயம் என்பதால் அரசு அப்படி எதுவும் முடிவு எடுக்காது என மென்பொருள் நிறுவனங்கள் நம்புகின்றன.

தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பதை நீங்கள் ஆதரிப்பீர்களா? உங்கள் கருத்துகளை கமெண்ட்ஸ் பகுதியில் தெரிவிக்கலாம்.

-கார்க்கிபவா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!