வாளியில் எண்ணெய் அள்ளுபவர்கள் கவனத்திற்கு... ஆனந்த் மோகனை தெரிந்து கொள்வோம்...! #VikatanExclusive

எண்ணெய்

லகத்தில் இதுவரை 180 எண்ணெய் கழிவுகள் சிதறிய விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் கடலில் ஏற்பட்டவை மட்டும் நூற்றுக்கும் மேல். மற்றவை நிலப்பரப்பில் நிகழ்ந்தவை. நிலத்தில் ஏற்படுவதைவிட நீரில் ஏற்படும் எண்ணெய் சிதறலைதான் கட்டுப்படுத்த முடியாது. நிலத்தில் ஏற்பட்டால் அது நிலையாக ஒரு இடத்தில் தங்கிவிடும். கடலில் ஏற்படும் சிதறல் இறுதியில் கரையொதுங்கி நிலம், நீர் என இரண்டையும் பாதித்து, பெரும் நாசத்தை ஏற்படுத்தும். இதைப் படிக்கும்போது, இப்போது எண்ணூரில் கப்பல் மோதலால் ஏற்பட்ட எண்ணெய் சிதறலால் பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை மற்றும் அதைச் சுற்றி இருக்கும் கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளை நினைவில் நிறுத்திக் கொள்ளவும். உலகின் மிகப்பெரிய எண்ணெய்ச் சிதறல் விபத்தான டீப் வாட்டர் ஹரிசான் வெடிவிபத்து மெக்சிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்டபோது அந்த கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி சுமார் இரண்டரை வருடங்கள்  தொடர்ந்து நடைபெற்றது.

வாளி

கடலில் கலந்த எண்ணைய் படலம் காரணமாக இரண்டரை வருடங்கள், இறந்தே கரை ஒதுங்கிய டால்பின்களையும் ஆமைகளையும் அப்புறப்படுத்துவதே அவர்களது முக்கிய வேலையாக இருந்தது. சிலர் கை,கால்கள் மற்றும் முகத்தில் உரையை மாட்டிக்கொண்டு கடற்கரைப் பகுதியில் இருக்கும் எண்ணெய் கசிவுகளை சுரண்டியெடுத்துக் கொண்டிருந்தனர். கடலில் கலந்த எண்ணெயை அகற்ற சில கரைப்பான்கள்  உபயோகப்படுத்தப்பட்டன. ஆனால் அந்தக் கரைப்பான்களும் விஷம் என்பதால் அதனைக் கொண்டு கழிவுகளை அகற்றும் பணியும் நிறுத்தப்பட்டது. இறுதியாக எண்ணெய் உண்ணும் பாக்டீரியாக்கள் கடலில் கலக்கப்பட்டன. அவை எண்ணெயைச் சாப்பிட்டு வளரும் வகை பாக்டீரியாக்கள். கடலில் கலக்கப்பட்டவுடன் எண்ணெயை உண்டு ஜீரணித்துவிடும். இரண்டரை வருடங்கள் அந்த மக்களைப் பாடாய் படுத்திய இந்த எண்ணெய் சிக்கல் சில நாட்களில் பாக்டீரியாக்களால் முடிவுக்கு வந்தது. நிற்க...

தற்போது, எண்ணூர் தொடங்கி காசிமேடு வரை வாளி வைத்துக் கொண்டு எண்ணெய் அள்ளிக் கொண்டிருக்கும் மக்கள் கவனத்துக்கு. உங்களின் விழிப்பு உணர்வுக்காக இரண்டு செய்திகள். ஒன்று, நீங்கள் அள்ளுவது நீரல்ல கைகளால் அள்ளி எடுத்தவுடன் சிதறி ஓடுவதற்கு. கழிவு எண்ணெய். நீங்களே விட நினைத்தாலும் உங்களை விட்டுப் போகாது. மேலும் அந்த எண்ணெயின் பக்கவிளைவுகளை அறிந்து கொள்ளுவது நலம். இரண்டு, அமெரிக்கக் கடற்கரையில் இறுதியாகத் தூவப்பட்ட அந்த எண்ணெய் உண்ணும் பாக்டீரியாக்களை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஆனந்த மோகன் சக்கரவர்த்தி என்னும் அமெரிக்க வாழ் இந்தியர். 1971-ல் முதன்முதலில் இவர் செயற்கையாகக் கண்டுபிடித்த சூடோமோனாஸ் பாக்டீரியா எனும் ’சூப்பர் பக்’ தான் பலவருடங்கள் கழித்து மெக்சிகோ வளைகுடா விபத்தில் மேம்படுத்தப்பட்டு எண்ணெயை அகற்றுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனந்தின் கண்டுபிடிப்பான ’சூப்பர் பக்’ 2010-ல் மும்பை கடல் பகுதியில் ஏற்பட்ட பெரும் எண்ணெய் கசிவு விபத்துக்கும் தீர்வாக இருந்தது.

ஆனந்த் மோகன்

தன்னார்வலர்கள் கவனத்துக்கு, வேகத்தை விட விவேகம்தான் பல இடங்களில் பேசும். தற்போதைய தேவை வாளிகள் இல்லை, சூப்பர் பக் போன்ற தொழில்நுட்பத் தீர்வுகளே. திரண்டுவரும் தன்னார்வலர்களைக் கொண்டே ஒரு பைசா செலவில்லாமல் கழிவுகளை அகற்றும் காரியத்தை சிறப்பாகச் செய்து முடித்து விடலாம் என்று நினைக்கும் அதிகாரத் தரப்புக்கும் இதனை தெரியப்படுத்துங்கள். 

- ஐஷ்வர்யா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!