Published:Updated:

ரயிலில் சிறுமிக்கு சிறார் வதை; ராணுவ வீரரை எதிர்த்துப் போராடிய 8 வயதுச் சிறுமி!

Abuse (Representational Image)
Abuse (Representational Image)

ஓடும் ரயிலில் உறங்கிக்கொண்டிருந்த, ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகளை ராணுவ வீரர் ஒருவர் சிறார்வதை செய்ய முயன்றார். அவரை எதிர்த்து சிறுமி துணிச்சலுடன் போராடியுள்ளார்.

ராணுவ வீரரின் மகளும் தன் தந்தையைப்போல வீரம் மிக்கவராக இருப்பார் என்பதை, மகாராஷ்டிராவில் நடந்துள்ள சம்பவம் நிரூபித்துள்ளது. 8 வயதுச் சிறுமி தன் பெற்றோர், சகோதரி, சகோதரன் ஆகியோருடன் கோவா - நிஜாமுதீன் ரயிலில் டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்தார். சிறுமியின் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இரவில் அனைவரும் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர். அதே ரயிலில் பிரபு என்ற ராணுவ வீரரும் பயணம் செய்தார்.

இரவில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியை பிரபு தூக்கிக்கொண்டு ரயிலில் இருக்கும் கழிவறைக்குச் சென்று சிறார்வதை செய்ய முயன்றார். சிறுமி அதிர்ச்சியடைந்து அவரிடமிருந்து தப்பிக்கப் போராடினார். அதோடு சத்தம் போட்டுக் கத்தினார். இதனால் நிலைமை விபரீதமாகி வருவதை உணர்ந்த பிரபு, ``உன்னை உன் பெற்றோரிடம் அழைத்துச் செல்கிறேன், கத்தாதே" என்று தெரிவித்தார்.

Sexual Harassment (Representational Image)
Sexual Harassment (Representational Image)

கழிவறையில் இருந்து வெளியில் வந்ததும், சிறுமியை அப்படியே விட்டால் பெற்றோரிடம் சொல்லிவிடுவாள் என்று பயந்து, ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டார். ஆனால், அவர் தள்ளிவிட்ட நேரம் ரயில் மலைப்பகுதியில் சென்றதால் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. ரயில் தண்டவாளத்தில் விழுந்த சிறுமி லேசான காயத்துடன் தண்டவாளத்தில் கிடந்தார். காலையில் உள்ளூர் மக்கள் சிறுமியைப் பார்த்து உடனே ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சிறுமியை பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடந்த சம்பவம் அனைத்தையும் சிறுமி தெளிவாக போலீஸாரிடம் தெரிவித்தார். அதோடு அவளிடம் தவறாக நடக்க முயன்ற நபர் எப்படி இருந்தார் என்பதையும் சிறுமி துல்லியமாகத் தெரிவித்தார்.

சிறுமி பயணம் செய்த ரயில், மகாராஷ்டிராவின் புஷாவல் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தது. உடனே அந்த ரயிலில் வெவ்வேறு ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீஸார் என மொத்தம் 400 பேர் ஏறினர். அவர்கள் அனைவரும் ரயிலில் இருந்து யாரையும் கீழே இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் சிறுமி சொன்ன அடையாளங்களுடன் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் இறுதியில் 4 பேர் மட்டும் சந்தேகத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் பிரபு உண்மையை ஒப்புக்கொண்டார். அவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

sexual harassment
sexual harassment

பிரபு ஜான்சியில் பணியில் சேருவதற்காகச் சென்றபோது இந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ளார். ராணுவ வீரரையே எதிர்த்துப் போராடிய சிறுமியை அனைவரும் பாராட்டினர். ``சம்பவம் நடந்தபோது ரயில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தால் சிறுமியை உயிருடன் பார்த்திருக்க முடியாது" என்று புனே டிவிஷன் ரயில்வே போலீஸ் எஸ்.பி.சதானந்த் பாட்டீல் தெரிவித்தார்.

சிறுமிக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டு இருந்தது. அதற்கு சிகிச்சையளித்து அவளின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் இந்த அளவுக்கு விரைவாகச் செயல்பட்டு தன் மகளைக் காப்பாற்றியதோடு குற்றவாளியையும் கைது செய்ததற்கு சிறுமியின் தந்தை போலீஸாருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்தார். இன்னொரு பக்கம், ராணுவ வீரர், அதுவும் பணியில் சேரச் சென்றபோது இந்த மாதிரி செயலில் ஈடுபட்டு இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு