Published:Updated:

அக்கவுன்ட்டில் ரூ.80 லட்சம்; சிகிச்சைக்குப் பணம் கொடுக்க மறுத்த வங்கி!- முதியவருக்கு நேர்ந்த சோகம்

பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கி மோசடியால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாகப் பணம் எடுக்க முடியாமல் ஒரு முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முரளிதர் தர்ரா
முரளிதர் தர்ரா ( Twitter )

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, கர்நாடகா, டெல்லி, மும்பை, குஜராத் போன்ற பல மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 4,355 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாகக் கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வங்கியில் பணம் போடுவது, புதிதாகக் கடன் வழங்குவது, பணம் எடுப்பது போன்றவற்றிற்குக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. தாங்கள் சேமித்த பணத்தை எடுக்க முடியாத விரக்தியில் இதுவரை 3 வாடிக்கையாளர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

பி.எம்.சி வங்கி
பி.எம்.சி வங்கி

இந்நிலையில் 80 வயது முதியவர் ஒருவரும் இந்த வங்கி மோசடியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் முரளிதர் தர்ரா. இவர் தன் பகுதியில் உள்ள பி.எம்.சி வங்கியில் 80 லட்சம் ரூபாய் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதய அறுவை சிகிச்சை செய்தால்தான் முதியவர் உயிர் பிழைப்பார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு சில லட்சம் பணம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டால் வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு, உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யமுடியாமல் முதியவர் முரளிதர் உயிரிழந்துள்ளார்.

பி.எம்.சி வங்கி
பி.எம்.சி வங்கி
ANI

``1947-ம் ஆண்டு என் தந்தை பாகிஸ்தானிலிருந்து அகதியாக மும்பைக்கு வந்தார். அவர் கடுமையாக உழைக்கக் கூடிய மனிதர். 80 வயதிலும் நல்ல உடல் ஆரோக்கியதுடன் இருந்தார். இங்கு வந்ததும் டீ கடை நடத்திப் பிழைத்து வந்தார். அதில் வரும் பணத்தை பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கியில் சிறிது சிறிதாகச் சேமித்து வந்தார். அக்டோபர் 11-ம் தேதி அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். என் தந்தைக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

2,000 போலிக் கணக்குகள்; வாராக்கடன் 4,500 கோடி!- வங்கியை திவால் நிலைக்குத் தள்ளிய முன்னாள் ஊழியர்கள்

அதற்காகப் பணம் எடுக்க நான் வங்கிக்குச் சென்றேன். என் தந்தையின் நிலையை அங்குள்ள அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் அவர்கள் பணம் தரச் சம்மதிக்கவில்லை. என் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அதே வங்கியில்தான் கணக்கு வைத்துள்ளனர். அதனால் அவர்களாலும் உரிய நேரத்தில் உதவி செய்யமுடியவில்லை. வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை என்ற விவரத்தைத் தந்தையிடம் கூறும்போதே அவர் தான் இறக்கப் போவதை ஏற்றுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

இறப்பு
இறப்பு

இறுதியாக இனி நான்தான் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என எனக்குத் தைரியம் கூறினார். என் தந்தையின் இறப்புக்குப் பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கிதான் காரணம். கஷ்டப்பட்டுச் சம்பாதித்த எங்கள் பணத்தைச் சதி செய்து கொள்ளையடித்துவிட்டனர்” என உருக்கமாகப் பேசியுள்ளார் முரளிதர் தர்ராவின் மகன் பிரேம். இந்த வங்கி மோசடியால் இவருடன் சேர்ந்து இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.